அயோத்தியில் கோயில் கட்டுவதற்கு மோடி அரசின் சிக்னல் கிடைத்து விட்டதாகச் சாது நிருத்திய கோபால் தாஸ் கூறியுள்ளதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநிலங்கள் அவையில் பிரச்சனையை எழுப்பினார் ஜனதா தள உறுப்பினர் கே.சி.தியாகி.

சூடானது அவை. விவாதங்கள் அமளியில் போய் நின்றன. அவை ஒத்தி வைக்கப்பட்டது. இது நடந்தது 2015 டிசம்பர் 23ஆம் தேதி.

அன்றிலிருந்து 16ஆம் நாளில் (9.1.2016) டெல்லிப் பல்கலைக்கழக அரங்கில் ‘ராம்ஜென்ம பூமி கோயில் மற்றும் இன்றைய சூழல்’ என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் தொடக்க உரையாற்றியவர் சுப்பிரமணிய சாமி.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டவேண்டும் என முனைப்புடன் செயல்படும் விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் முன்னாள் தலைவர் அசோக் சிங்காலால், உருவாக்கப்பட்ட ஒரு துணை அமைப்பு ‘அருந்ததி வசிஸ்ட அனுசந்தான பீடம்’. வரலாற்று அடிப்படையில் ஆய்வு செய்வது இதன் வேலை.

அதாவது அயோத்தில் ராமன் கோயில்தான் இருந்தது என்று சொல்வதற்கான ஓர் ஆய்வு அமைப்புபோலும். அதன் தலைவர் தான் சு.சாமி, இவர்தான் பல்கலைக் கழகத் தொடக்க உரை ஆற்றியவர்.

மாநிலங்கள் அவையில் தியாகி எழுப்பிய பிரச்சனைக்குப் பதில் அளித்த மத்திய இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, அயோத்தில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்து 1.5 கி.மி. தொலைவில் கோயில் கட்டுவதற்கான தூண்கள் செய்யும் பணி 1990 முதல் நடந்துவருவதாகவும், அதே சமயம் நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை காத்திருப்போம் என்றும் கூறியிருக்கிறார்.

இந்த பதில், நீதிமன்றத் தீர்ப்பு என்பதைத் தொட்டுக்கொண்டாலும், மோடி அரசின் சிக்னலை உறுதிபடுத்துவது போல இருக்கிறது.

அதே சமயம் டெல்லிப் பல்கலைக் கழகத்தின் ராம்ஜென்ம பூமி குறித்த கருத்தரங்கம் என்பது கல்வி நிலயங்களில், மாணவர்கள் உள்ளங்களில் இந்துத்துவக் கொள்கைகளை நுழைப்பதற்கான நடவடிக்கையாகவே கருத வேண்டி இருக்கிறது.

இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்துகின்றன. தேர்தல்கள் நெருங்கும் போது அயோத்திப் பிரச்சனை கூர்மைப் படுத்தப்படுவது இந்துத்துவாக்களின் வாடிக்கை.

இன்னும் ஓர் ஆண்டில் உத்தரபிரதேச சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில், மத அடிப்படையில் பிளவு வேலைகள் தொடங்கி விட்டதாகத் தெரிகிறது.

அயோத்தில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் என்பது பற்றிய பிரச்சனை சட்டப்பூர்வமாக இன்னமும் தீர்கப்படவில்லை.

அந்த இடத்தை மூன்றாகப் பிரித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதி மன்றம் தடை செய்திருக்கிறது. இது தொடர்பான வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் இருக்கிறது, தீர்ப்பு வரவில்லை.

 தீர்ப்பு வரும்வரை கூட, பெறுமையாக இருக்க முடியாமல் ராம்ஜென்ம பூமி நியாஸ் என்ற அறக்கட்டளை, கோயில் கட்டும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

அயோத்தியில் விஸ்வ இந்து பரிசத் அலுவலகப் பகுதியில் ராஜஸ்தான், குஜராத் போன்ற இடங்களிலிருந்து கோயில் கட்ட கற்கள் கொண்டு வந்து இறக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

அதற்கு ‘சிலா பூஜை’ என்ற பெயரில் சடங்குகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இவையெல்லாம் விளையப்போகும் மோசமான நிகழ்வுகளுக்குக் கட்டியம் கூறுவதாக அமைகிறது.

இந்துத்துவ அமைப்புகளின் இந்தச் செயல்களால், வதந்தி என்ற ஒரு கல் விழுந்தால் கூடப் போதும், வன்முறை கட்டவிழும் அபாயம் வந்து சேர்ந்துவிடும்.

என்னதான் மாநில அரசு சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்த முயன்றாலும் மதம் குறித்த பிரச்சனைகள் கடும் விளைவுகளை ஏற்படுத்தியே தீரும் என்பது வரலாறு.

இது குறித்து எல்லாம் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதை நரேந்திர மோடி இது வரை வாய் திறந்து சொல்லவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் உள்நாட்டில் ஓயாமல் பேசிக்கொண்டிருந்த அவர், இப்போழுதெல்லாம் வெளிநாடுகளில்தான் பேசிக்கொண்டு இருக்கிறார்.

இந்தியாவில் வாழும் மக்களைப் பற்றி அவர் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில்தான் உத்திரபிரதேசம் பதற்றத்தை எதிர்கொண்டு இருக்கிறது, அயோத்திப் பிரச்சனையில்.

பதற்றம் தணிய வேண்டும். வன்முறை நிகழக்கூடாது. நீதி மன்றத் தீர்ப்பு வந்த பிறகு அமைதியான வழியில் அயோத்தி பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். என்பது தான் அனைவரின் விருப்பமும் ஆகும்.

இந்துத்துவ சக்திகள் அதற்கு வழிவிடுமா என்ற கேள்வியில் நாட்டின் அமைதி தொற்றிக்கொண்டு இருக்கிறது.

மதவாதத்தை ஊக்கப்படுத்த மாட்டோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர் நரேந்திர மோடி.

நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ் காரர் என்பதை ஊர் அறியும் ஆனால் அவர் இப்போது அனைத்து இந்திய மக்களுக்கும் பொதுவானவர், பிரதமர்.

“எல்லா விமர்சனங்களிலும் முதன்மையான விமர்சனம் மதம் பற்றிய விமர்சனம்” என்கிறார் காரல் மார்க்ஸ்.

விஸ்வ இந்து பரிசத் பேச்சும், விமர்சனமும் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக இருக்கிறது.

இந்துவத்துக்கு எதிரானவர்கள் பேச்சும் விமர்சனமும் தண்ணீர் ஊற்றுவதாக அமைகிறது.

அயோத்தி பிரச்சனையில் அமைதியை நிலை நாட்ட மோடி தலைமையின் மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?