ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் இரா.அதியமான் அவர்களோடு ஒரு நேர்காணல்

பல சமூக முன்னேற்றங்கள் ஏற்பட்ட பின்னரும் கையால் மலம் அள்ளும் அவலம் தொடர்வது பற்றி?

athiyaman athithamizhar peravaiஇந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் இந்தப் பணி என்கிற மன நிலை ஆதிக்க சாதிகளுக்கிடையே இருக்கிறது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் எல்லாப் பட்டதாரிகளுக்கும் ‘Scavengers’ என்கிற தூய்மைப் பணிக்கு நியமனக் கடிதம் அனுப்பிட முடியாது. அந்தப் பணி நியமன ஆணை இந்த மக்களுக்கு மட்டும் தான் அனுப்பப்படுகிறது. ஒரு பார்ப்பனருக்கோ ஆதிக்க சாதியினருக்கோ பணி நியமனக் கடிதத்தை அனுப்பும் தைரியம் அரசுக்கு இருக்கிறதா? சாதிக் கட்டுமானம் இந்த மன நிலையிலிருந்துதான் தொடங்குகிறது. இத்தொழில் சாதியோடு பின்னிப் பிணைக்கப் பட்டிருக்கிறது. சாதியை ஒழித்தால் தான் இத்தொழிலை ஒழிக்க முடியும். சாதி ஒழிப்பு ஒன்றே தீர்வு.

மற்ற நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இருக்கும் வேறுபாடு?

வளர்ந்த நாடுகள் எங்கும் இது போன்ற நிலை இல்லை. விண்வெளிக்குச் செல்லும் உடையைப் போன்ற உடை துப்புரவுப் பணி செய்வோருக்குக் கொடுக்கப்படுகிறது. தீயணைப்புத் துறையிலும், துப்புரவுத் துறையிலும் பணியாற்றுவோருக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. யார் வேண்டுமானாலும் அந்தப் பணிகளுக்குச் செல்லலாம். இங்கு ஒப்பந்தப் பணியாளர்கள், பகுதி நேரப் பணியாளர்கள் என்று சொல்லி அவர்களுக்குரிய ஊதியத்தைக் கூடக்கொடுப்பதில்லை. ஒரு பஞ்சாயத்தில் வெறும் ரூ. 884 கூலியாகக் கொடுக்கப்படுகிறது.

மறுவாழ்வு ஏற்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகள் பற்றி...

அக்ரகாரம், ஊர், சேரி என்று பிரித்து வைத்ததைப் போல சேரியிலிருந்தும் இவர்கள் பிரித்து வைக்கப் படுகிறார்கள். அரசும் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் தான் இவர்களுக்குக் குடியிருப்புகள் அமைத்துத் தருகிறது.

வேலை ஒழிப்பு (கையால் மலம் அள்ளுதல்), மறு வாழ்வு இரண்டும் சேர்ந்ததுதான் சட்டம். ஆனால் மத்திய அரசு இவ்வேலைகளிலிருந்து இம்மக்கள் சென்றுவிடக் கூடாது என்பதிலேயே குறிக்கோளாக இருக்கிறது. 40,000 ரூபாயைக் கொடுத்து மறுவாழ்வு என்பது ஏமாற்று வேலை. அவர்களுக்குத் தொழிற்பயிற்சி, வீடு, நிலம், குழந்தைகளுக்குக் கல்வி எனப் பலவற்றை அடக்கியதுதான் மறுவாழ்வு. இவை அம்மக்களுக்கு வழங்கப்படுவதில்லை. 45 வயதில் நோய்த் தொற்று ஏற்பட்டு பலர் இறந்து விடுகின்றனர்.

அண்மையில் கேரளாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள இயந்திரங்கள் மூலம் துப்புரவு செய்யும் திட்டம் பற்றி

நாங்கள் நேரில் சென்று எல்லா விபரங்களையும் சேகரித்து வந்தோம். கேரளாவில் கல்லூரி ஆய்வு மாணவர்கள் தயாரித்திருக்கிறார்கள். ஆனால் அதன் விலை கூடுதலாக இருக்கிறது (16-17 இலட்சம்). நாம் எதிர்பார்ப்பதெல்லாம் தமிழக அரசு ஒரு குழுவை அனுப்பி, கேரள அரசோடு பேசி அத்திட்டத்தைத் தமிழ்நாடு முழுதும் செயல்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான். அண்மையில் சென்னையில் இத்தொழிலை ஒழிக்க ஒரு போராட்டம் நடத்தினோம். நவீன இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தினோம்.

தஞ்சாவூர் பெரியார் மணியம்மையார் கல்லூரியில் கேரளாவைவிட குறைவான விலையில் நவீன இயந்திரங்களை ஆய்வு மாணவர்கள் உருவாக்கி வருவதாகவும் அந்தப் பணி விரைவில் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் என்றும் ஆசிரியர் கி.வீரமணி அப்போராட்டத்தின் போது தெரிவித்தார். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே அவர்கள் இச்செயல் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். இத்தனை ஆயிரம் பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் இருந்தென்ன பயன்? பெரியாரின் மாணவர்களே இப்பணியை மேற்கொண்டிருக்கிறார்கள். இத்தொழிலை நவீனப் படுத்தினாலே எல்லோரும் பங்கு பெறும் தொழிலாக மாற்றலாம்.

சமூக நீதித் திட்டங்களுக்கு முன்னோடியாக விளங்கும் தி.மு.க அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி?

கடந்த காலங்களில் கலைஞர் தூய்மைத் தொழிலாளர் நல வாரியம் அமைத்தார். தளபதி அவர்கள் சென்னை மேயராக இருந்த போது அடைப்பை எடுப்பதற்கு இயந்திரங்களை வரவழைத்தார். ஆனால் பழுது ஏறபட்டு அதைத் தொடர முடியாது போயிற்று. அதற்குப் பிறகு வந்த ஆட்சியில் எந்த முன்னெடுப்பும் இல்லை.

பெரியாருடைய மாணவராக இருந்த காரணத்தால் மட்டும்தான் கலைஞர் அவர்களால் இத்தனை காரியங்களைச் செய்ய முடிந்தது. அருந்ததியர் சமூகத்திற்கு 3% இடஒதுக்கீடு, தூய்மைத் தொழிலாளர்களை மனத்தில் வைத்துத்தான் கொடுக்கப்பட்டது. அன்றைக்கு கலைஞர் முரசொலியில் எழுதிய கடிதமே அதற்குச் சான்று. இத்திட்டத்தை தலை மேல் தூக்கிக் கொண்டு கூத்தாடுவேன் என்று எழுதினார். அவர் இருந்திருந்தால் தூய்மைத் தொழிலாளர்கள் வாழ்க்கை நிலை உயர்ந்திருக்கும். இந்த 7 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சமூக நீதியில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் போயிற்று. அடுத்து தளபதி அவர்கள் அந்தப் பணியை சிறப்பாகச் செய்வார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு நிறையவே இருக்கிறது. மோடி அரசை அப்புறப்படுத்துவோம் என்று தி.மு.க தலைவராகப் பொறுப்பேற்றவுடன் அவர் சொல்லியிருப்பது எல்லோரும் வரவேற்கத்தக்கது

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை நிலையில் தமிழ்நாட்டிற்கும் மற்ற மாநிலங்களுக்கும் வேறுபாடு இருக்கிறதா?

தமிழ்நாட்டிற்கும் மற்ற மாநிலங்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு இருக்கிறது. 69% இடஒதுக்கீட்டால் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. அதனால் தான் அதை ஒழிப்பதற்கு மனுவாதிகள் இப்போது திட்டம் தீட்டியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் 3% இடஒதுக்கீடு என்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் நடைமுறையில் இருக்கிறது. ஆந்திராவில் 4 ஆண்டுகள் நடைமுறையிலிருந்த இத்திட்டத்தை உயர்நீதிமன்றம் தடை செய்து மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றமும் தடைசெய்தது. பஞ்சாப், அரியானாவில் 10 ஆண்டுகள் நடைமுறையிலிருந்த உள் ஒதுக்கீடு தடை செய்யப்பட்ட து. தமிழ்நாட்டிலும் உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களால் தடை செய்ய முடியவில்லை. காரணம் சட்டரீதியாக நுணுக்கமாக ஆராய்ந்து, தடை செய்ய முடியாத வகையில் முறைப்படி இதனைச் சட்டமாகக் கலைஞர் நடைமுறைப்படுத்தினார். சமூகநீதியை உள்வாங்கிய தலைவர்கள் இருப்பதால் தான் இங்கு இது சாத்தியம். மற்ற எந்த மாநிலத்திலும் இது போல கிடையாது.

Pin It