கலைஞரின் மறைவுக்குப் பிறகு, கழகத்தை நடத்திச் செல்ல யாரும் இல்லை என்று கருதியவர்கள், தமிழ்நாட்டின் தலைமை வெற்றிடமாக ஆகிவிட்டது என்று வீராப்பு பேசியவர்கள், நம் அருமைத் தளபதி ஆட்சிக்கு வந்த பிறகு சற்று அதிர்ந்து போனார்கள். தலைவரின் பணிகளுக்குச் சற்றும் குறையாமல் பல்வேறு பணிகளைச் செய்து வரும் தளபதியின் ஆட்சி கண்டு மிரண்டும் போனார்கள்.

Stalin is more dangerous than Karunanidhi என்று சொல்லிப் புலம்பினார்கள். இப்போது அதே மனிதர்கள் வேறு மாதிரியாகப் பேசியிருக்கின்றனர். ஆர் எஸ் எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்த பின்பு, “ஸ்டாலின் ஒரு அப்பாவி, அருகில் இருப்பவர்கள் அவரைக் கெடுக்கிறார்கள்” என்று சொல்லி இருக்கிறார்கள்.

rss 508அவர்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். எங்கள் தலைவர் ஸ்டாலின், அப்பாவியும் இல்லை ஆபத்தானவரும் இல்லை. அவர் நிதானமானவர், நேர்மைக் குணமுடையவர், நெஞ்சில் உரம் மிக்கவர்!

அக்டோபர் 2 ஆம் தேதி தமிழ்நாட்டில் 51 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கேட்டு ஆர் எஸ் எஸ் உயர்நீதிமன்றத்தை அணுகியது. நிலைமையைப் பரிசீலித்து 28ஆம் தேதிக்குள் பேரணிக்கு அனுமதி அளிக்குமாறு நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், சட்டம் ஒழுங்கைக் கணக்கில் கொண்டு, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்க தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டது.

இப்போது மீண்டும் அவர்கள் நீதிமன்றத்தை அணுகி உள்ளனர். இது நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் என்று கூறுகின்றனர். இது எப்படி நீதிமன்ற அவமதிப்பாகும்? “இருக்கும் நிலையைப் பரிசீலித்து” என்று தானே நீதிமன்றம் கூறியுள்ளது. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் அல்லது கடமை அரசிடம் தானே உள்ளது. அதனை முறைப்படி செய்ய வேண்டாமா? தமிழ்நாடு அரசின்முதல்வரும் தமிழ்நாடு அரசும் தங்கள் கடமையைச் சரியாக செய்துள்ளனர்.

ஊர்வலம் போவதும் பேரணி நடத்துவதும் ஜனநாயக நாட்டில் இயல்பானதுதான். அனுமதிக்கப்பட வேண்டியவையும் கூட. ஆனால் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் கடந்த கால வரலாறும், பேரணி நடத்த அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள நாளும் நம்மை அச்சுறுத்துகின்றன.

இதற்கு முன்னால் இந்தியாவில் பேரணிகளை நடத்தியே கலவரங்கள் பலவற்றை அவர்கள் உருவாக்கியுள்ளனர். அதற்கு நூற்றுக்கணக்கான - இல்லை - ஆயிரக்கணக்கான எடுத்துக்காட்டுகளை நம்மால் காட்ட முடியும்.

அதேபோல அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள நாளோ காந்தியார் பிறந்த நாளாகவும், காமராஜரின் நினைவு நாளாகவும் உள்ளது. இருவர் மீதும் ஆர் எஸ் எஸ் இயக்கம் எவ்வளவு பாசமும் நேசமும் உடையது என்பதை நாம் அறிவோம், நாடும் அறியும்!

காந்தியார் கொலை வழக்கில் இந்த இயக்கத்திற்கு இருந்த தொடர்பைக் கபூர் கமிஷன் சுட்டிக் காட்டி இருக்கிறது. அதே போல, காமராஜரைக் கொல்ல முயற்சி செய்தவர்களும் இவர்கள்தான்.

1966 நவம்பர் இரண்டாம் தேதி தில்லியில் நடைபெற்ற அனைத்திந்திய காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் அப்போது அதன் தலைவராக இருந்த காமராஜர், பசுவதைத் தடைச் சட்டத்தைக் கொண்டுவர முடியாது என்றும், அப்படிக் கோருவது பைத்தியக்காரத் தனம் என்றும் வெளிப்படையாக பேசினார். உழைப்பவர்கள் மிகுதியாக உள்ள நாட்டில், இறைச்சி உணவைத் தடை செய்ய முடியாது என்றும் கூறினார்.

அதனால் கோபம் கொண்ட, சாதுக்கள் என்னும் பெயரில் பேரணி நடத்திய ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அதே ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி காமராஜரைக் கொல்ல முயன்றனர். பேரணியாக வந்து அவர் தங்கியிருந்த வீட்டிற்குத் தீ வைத்தனர். உதவியாளர்களின் முயற்சியால் அன்று காமராஜர் எப்படியோ உயிர் பிழைத்தார்.

இப்படிப்பட்டவர்கள்தான் இன்று பேரணி நடத்த அனுமதி கோருகின்றனர்.

அவர்களின் உள்நோக்கம் என்னவென்று சின்னப் பிள்ளைக்கும் தெளிவாகப் புரியும். பேரணி நடத்தி கலவரத்தை உருவாக்கி, சட்டம் ஒழுங்கை நாட்டில் குலைத்து விட வேண்டும். அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டை ஆபத்தான கலவரங்களால் சீர்குலைக்க வேண்டும். பிறகு சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது என்று சொல்லி, தமிழ்நாடு அரசைக் கலைத்து விட வேண்டும். இதுதான் அவர்களின் திட்டம்!

இதனைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிற நம் தமிழ்நாடு முதலமைச்சர், ஆர் எஸ் எஸ் உள்பட எந்த ஓர் அமைப்புக்கும் பேரணி நடத்த, இன்றைய சூழலில் அனுமதி இல்லை என்று தெள்ளத் தெளிவாக அறிவித்திருக்கிறார்.

தங்களின் கனவும், கலவர ஆசையும் நிறைவேறாமல் போய்விட்ட தவிப்பில், இன்று அவர்கள் ஏதேதோ பேசுகின்றனர். எல்லாவற்றிற்கும் காலம் விடை சொல்லும்!

கலவரக்காரர்கள் காணாமல் போவார்கள், கழகத்தின் ஆட்சி என்றும் நின்று நிலைக்கும்!

சுப.வீரபாண்டியன்

Pin It