இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ நிறுவனம் தயாரித்த “பெகாசஸ்” என்னும் உளவு பார்க்கும் செயலி (spyware), வேவு பார்ப்பதற்காக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும், அதில் யார் யார் வேவு பார்க்கப் பட்டிருக்கிறார்கள் என்கிற 50 ஆயிரம் தொலைபேசி எண்கள் கொண்ட ஒரு பட்டியலும் சர்வதேச ஊடகங்களில் வெளியானது.
அப்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. மக்களின் பிரச்சினையைப் பேசவிடாமல் இந்தியாவில் குழப்பத்தை விளைவிப்பதற்காக இது செய்யப்படுகிறது என்று சொல்லிவிட்டு, இதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லாதது போல் ஒரு போக்கை மத்திய அரசு கடைப்பிடித்தது. ஆனால் அப்போது சில பாஜகவினர் அரசுக்கு உளவு பார்ப்பதற்கு உரிமை இருக்கிறது, இதில் ஒன்றும் தவறில்லை என்று சமூக ஊடகங்களில் பதிவிட்டார்கள். அதன்பின் இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றது. ஆனால் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாமல் தொடர்ந்து நழுவிக் கொண்டிருந்தது ஒன்றிய அரசு. அதன்பின் நீதிமன்றத்தின் வற்புறுத்தலின் பேரில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.
நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், “ஒன்றிய அரசு உளவு பார்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இந்த விவகாரம் தேசியப் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது என்பதால் இது தொடர்பான விவரங்களைப் பிரமாணப் பத்திரத்தில் விரிவாகத் தாக்கல் செய்ய விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் அரசுகள் முக்கியப் பிரமுகர்களின் கைபசிகளை உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு, இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட முக்கியப் பிரமுகர்களின் கைபேசிகள் உளவு பார்க்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்த விவகாரத்தை உலகிலுள்ள பல நாடுகள் தீவிரமாக எடுத்துக் கொண்டு இது தொடர்பான உண்மையை வெளிக்கொண்டு வர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இந்திய அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நீதிமன்றம் கேட்கும்போதும் தேசியப் பாதுகாப்பு என்னும் முகமூடியை அணிந்து கொண்டது.
இந்த விவகாரத்தில் இனி அமைதி காக்க முடியாத நிலையில் தற்போது நீதிமன்றமே ஓய்வு பெற்ற நீதிபதி ஆர் வி ரவீந்திரன் கண்காணிப்பில் ஒரு தொழில்நுட்ப நிபுணர் குழுவை, பெகாசஸ் உளவு பார்ப்புக் குறித்து ஆய்வு செய்ய அமைத்துள்ளது.
ஆனால் இங்கே நமக்கு எழக்கூடிய கேள்வி என்னவென்றால், நீதிமன்றம் ஏன் அரசிடமிருந்து ஆம் அல்லது இல்லை என்ற பதிலை நேரடியாகப் பெற முடியவில்லை. அரசு உளவு பார்த்தது என்றால் ஏன் உளவு பார்த்தது என்பதை விளக்க வேண்டும். அதில் இருக்கும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அப்படி இல்லை என்றால் உறுதியாக இந்திய அரசாங்கம் இந்த மென்பொருளை வாங்கவில்லை என்றும் உளவு பார்க்கவில்லை என்றும் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட ஒரு பதிலை நேரடியாகப் பெற முடியாமல் நீதிமன்றம் ஒரு குழுவை அமைப்பது, அரசை அதன் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாகவே தெரிகிறது.
இந்தியாவிற்கான இஸ்ரேல் நாட்டின் தூதுவர் நார் கிலானிடம் (Naor Gilon) புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்வில், பத்திரிகையாளர்கள், உச்ச நீதிமன்றம் அமைத்திருக்கும் இந்தக் குழுவைப் பற்றி கேட்டனர். அவர் இந்த உளவு பார்க்கும் செயலி அரசுகளுக்கு மட்டுமே விற்கப்பட்டதாகவும், ஆனால் தான் இது எந்தெந்த நாட்டு அரசுகளுக்கு விற்கப்பட்டது என்பது பற்றியோ, அல்லது இந்திய அரசாங்கம் இதை வாங்கியதா என்பது பற்றியோ, அல்லது இஸ்ரேலி அரசு இந்த உளவு பார்க்கும் மென்பொருள் விற்பனை பற்றிய விசாரணையை மேற்கொள்ளுமா என்பது பற்றியோ கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்று சொல்லியிருக்கிறார்.
விற்ற நாடும் எதையும் சொல்ல மாட்டோமென்று சொல்லி விட்டது. வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நாட்டின் அரசும் இது பற்றிப் பேச மாட்டோம் என்று சொல்லி விட்டது. உலக அளவில் நடக்கும் அரசியல் பற்றியப் புரிதல் உள்ளவர்களால் இங்கு நடப்பதை விளங்கிக் கொள்ள முடியும்.
நாம் தற்போது எதிர்பார்ப்பது, உச்சநீதிமன்றம் நியமித்து இருக்கும் இந்தக் குழுவாவது சுதந்திரமாக, எந்த அரசியல் தலையீடும் இன்றி, விரைந்து செயல்பட்டு, இந்த விவகாரத்தில் மறைந்திருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வந்து மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதே!
- மா.உதயகுமார்