எங்கள் அமைப்பு சார்ந்த கட்செவி (வாட்ஸ் அப்) ஊடகக் குழுவில் வைகோவைக் கடுமையாகச் சாடி ஒரு தோழர் தன் கருத்தைப் பதிவிட்டபோது அவரை நான் கண்டித்தேன். ‘நியாயமான கோபத்தைக் கூட நாம் கண்ணியமாகத்தான் பதிவிட வேண்டும்‘ என்று எழுதினேன்.

vaiko 240ஆனால் வைகோவை அவரது மனசாட்சி கண்டிக்கிறதா என்று தெரியவில்லை. கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைக்காகச் சென்னை இராமச்சந்திரா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது ஜெயலலிதாவும், இதே வைகோவும், சீமானும் என்னென்னவெல்லாம் பேசினார்கள் என்பதை இன்று அனைத்துச் சமூக வலைத் தளங்களும் வெளியிட்டுள்ளன.

அன்றைய தினம் வைகோ, “காவிரியில் நீர் வராதா என்று காய்ந்த வயிறோடு காத்திருக்கிறான் விவசாயி. இவர் பணக்காரர்கள் சிகிச்சையெடுக்கும் பணம் பெருத்தோர் மருத்துவமனையில் படுத்திருக்கிறார்” என்று கலைஞரை வசை பாடினார். சீமானோ, “அரசு மருத்துவமனைகளில் நிற்க வழியில்லாது விழுந்து கிடக்கிறான் தமிழன், இவர் கோடீஸ்வரர்கள் பார்க்கும் மருத்துவமனையில் படுத்துகிட்டு நல்லாயிருக்காருன்னு செய்தி வருது. நல்லாயிருந்தா போய் வேலைய பாருங்க, எதுக்கு இந்த நாடகம்?” என்று தன் வெறுப்பை உமிழ்ந்தார்..

இராமச்சந்திரா மருத்துவமனை பணம் பெருத்தோரின் மருத்துவமனை என்பதும், அப்பல்லோ மருத்துவமனை அன்றாடங் காய்ச்சிகளின் மருத்துவமனை என்பதும் நமக்குத் தெரியாமல் போய்விட்டது. அன்றைக்குக் காவிரியில் நீர் வராமல் விவசாயி வயிறு காய்ந்து கிடந்ததும், இன்று காவிரியில் நீர் பெருக்கோடி விவசாயி வயிறு வீங்கி நிற்பதும் வைகோவிற்குத் தெரிகிறது, நமக்குத் தெரியவில்லை.

இன்று லண்டனிலிருந்து மருத்துவர் ரிச்சர்ட் பீலே இரண்டு முறை வந்து போனதை அறிந்து மனம் நெகிழ்ந்து போகிறார் வைகோ. அந்த மருத்துவர் தனக்கு அவருடைய முகவரி அட்டையைக் கொடுத்ததைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்து போகிறார். (ஒரு விசிட்டிங் கார்டைப் பார்த்து இவ்வளவு மகிழ்ந்த ஓர் அரசியல் தலைவர் இவராகத்தான் இருக்க முடியும்). ஆனால் அன்று தன்னை அரசியலில் வளர்த்துவிட்ட தலைவர் உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது கேலி பேசினார்.

கவிஞர் கண்ணதாசனை வைகோவிற்கு மிகவும் பிடிக்கும். “நன்றி கெட்ட மாந்தரடா, நானறிந்த பாடமடா” என்று கவிஞர் எழுதிய வரிகளும் அவருக்குப் பிடிக்கத்தானே செய்திருக்கும்!

Pin It