தமிழ்நாட்டில் எப்படியாவது கால் வைத்து விட வேண்டும் என்பதற்காகத் தலைகீழாய் நின்று பார்க்கிறார்கள் பாஜகவினர்!

அவர்களின் இப்போதைய புதிய திட்டம், காசித் தமிழ்ச் சங்கமம். தமிழ்நாட்டில் இந்தியைப் புகுத்தி விட்டுக் காசிக்குப் போய்த் தமிழை வளர்க்கப் போகிறார்களாம்!

நவம்பர் 16 தொடங்கி டிசம்பர் 19 வரையில் வாரணாசியில், அதாவது காசியில், பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சங்கமம் விழாவை நடத்த இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து 2500 மாணவர்களைத் தொடர்வண்டி மூலமாக அழைத்துச் செல்லும் பணி இப்போது தொடங்கியிருக்கிறது.

காசியில் போய் இறங்கும் மாணவர்களைப் பிரதமர் மோடி அங்கு வரவேற்கக் காத்திருக்கிறாராம்! குஜராத் பாலம் அறுந்து தொங்கி இறந்து போனவர்களைக் கூடப் பார்க்காத மோடி, தமிழ்நாட்டு மாணவர்களுக்காக அங்கே காத்திருக்கிறார்! எல்லாம் 2024 தேர்தல் அரசியல்தான்.kasi 476இங்கிருந்து புறப்படும் மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்து குங்குமம் வைத்து அனுப்பி வைக்கிறார்கள். இது தமிழ்ப் பயணமா, தல யாத்திரையா என்று தெரியவில்லை!

பயணச்சீட்டு, தங்குமிடம், சுற்றிப் பார்க்க வழிவகை அனைத்தும் செய்யப்படுகிறது. தமிழ் என்ற வலையின் மூலம் தமிழ் மாணவர்கள் என்னும் மீன்களைப் பிடிக்க முயற்சிக்கிறார்கள். காசிக்குப் போனால் எல்லாம் சரியாகிவிடும் என்று உபதேசிக்கிறார்கள்.

கவிஞர் பொன் செல்வகணபதி எழுதியுள்ள அந்தக் கவிதை வரிகள்தான் இதற்கு ஏற்ற விடையாக உள்ளது.

“காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது மாசில்லா தமிழ் முன்னே மதவாதம் செல்லாது!” இதுதான் உண்மை.

இந்த நேரத்தில், காசி பனாரஸ் பல்கலைக்கழகம் பற்றிக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பது நல்லது. 1916 ஆம் ஆண்டு பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் மாளவியாவால் தொடங்கப்பட்டது. அவரை “மண்ணுருண்டை மாளவியா”என்று அழைப்பார்,தந்தை பெரியார். அது முழுக்க முழுக்க இந்துத்துவத்தை மையமாகக் கொண்ட ஒரு கல்வி நிறுவனம். பார்ப்பனர்களும், உயர் சாதி என்று கூறப்படும் வகுப்பினரும் கூடுதலாகப் படிக்கும் பல்கலைக்கழகம்.

அங்குதான் 1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துணைப் பிரதமராக இருந்த ஜெகஜீவன் ராமுக்கு ஒரு பெரிய அவமானம் ஏற்பட்டது. சம்பூரானந்தர் சிலையை ஜெகஜீவன்ராம் திறந்து வைத்தார். அப்போது அங்கிருந்த பார்ப்பன மாணவர்கள், ஜெகஜீவன்ராம் சாதியைச் சொல்லி வெளியேறு என்று கூச்சலிட்டார்கள். அவருக்குத் தண்ணீர் கூடக் கொடுக்கவில்லை என்று அவருடைய மகள் மீரா குமாரி வேதனையோடு சொன்னார். அவர் திறந்து வைத்த காரணத்தினாலேயே கங்கை நீர் கொண்டு அந்தச் சிலையைக் கழுவித் தீட்டு கழித்தார்கள்.

மறுநாள் சென்னை வந்த துணை பிரதமர் ஜெகஜீவன்ராம், இந்தக் கொடுமையை, பெரியார் பிறந்த மண்ணில் சொல்லாமல், நான் வேறு எங்கு போய்ச் சொல்வது என்று மிகுந்த வேதனையோடு, சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.

இதுதான் பனாரஸ் பல்கலைக்கழகம் பின்பற்றும் சனாதனம். அதனால் தான் நம்முடைய சனாதனத்திற்கு ஆளுநராக விளங்கும் ஆர். என். ரவி அவர்கள், எல்லோரும் காசிக்குப் போய் வாருங்கள், அங்கு இருக்கும் படகோட்டி கூட என்னை விட நன்றாகத் தமிழ் பேசுவார் என்று சொல்லி வழியனுப்பி வைத்திருக்கிறார்!

இதனை அவருடைய ஒப்புதல் வாக்குமூலம் என்று நாம் கொள்ளலாம். காசியில் இருக்கும் படகோட்டியை விட மோசமாகத் தமிழ் பேசும் இவர்தான், இங்கே திருக்குறள் ஆராய்ச்சி எல்லாம் செய்கிறார்! இந்தக் கேலிக் கூத்தை நாம் என்னவென்று சொல்வது!

போகட்டும், முன்பு தருண் விஜய் என்பவரை அழைத்து வந்து திருக்குறளை பற்றிப் பேச வைத்து, தமிழர்களைக் கவர முடியுமா என்று பார்த்தார்கள். அவர் இங்கிருந்து எடுத்துச் சென்ற திருவள்ளுவர் சிலை இப்போது வாரணாசியில் எங்கோ ஒரு மூலையில் கிடக்கிறது. வள்ளுவருக்கே இந்த நிலைமை என்றால், வாரணாசிக்கு அழைத்துச் செல்லப்படும் தமிழர்களுக்கு என்ன நிலை ஏற்படுமோ தெரியவில்லை!

ஒன்றே ஒன்றை நாம் அழுத்தமாய் சொல்லலாம். தமிழ் சங்கமத்தை நடத்த எங்களுக்கு வாரணாசியோ, வடநாட்டுப் பார்ப்பனர்களோ தேவையில்லை. நம் தமிழை நாம் வளர்ப்போம்! நம்மை நம் தமிழ் காப்பாற்றும்!!

சுப.வீரபாண்டியன்

Pin It