கடந்த 11.06.2023 அன்று, தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2024 நாடாளுமன்றத் தேர்தலை மய்யப்படுத்தி பல்வேறு தூண்டில்களை தமிழ்மக்களிடையே வீசிப் பார்த்தார், என்றாலும் பயனில்லை.

வேல் யாத்திரை நாடகத்தால் 4 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றதாகக் கருதினார்கள். இப்போது செங்கோல் நாடகமும் முடிந்தது. இப்போது 25 பாராளுமன்ற உறுப்பினர்களை 2024 தேர்தலில் பா.ஜ.க பெற்று விடுமாம், வேலூரில் பேசியிருக்கிறார் அமித்ஷா. அதுசரி! 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40இல் 25 தொகுதிகளை பா.ஜ.க. எடுத்துக் கொண்டால் எஞ்சியிருக்கும் 15 இடங்களை ஆளுக்கு இரண்டாக அ.தி.மு.க உள்ளிட்டக் கூட்டணிக் கட்சிகள் பிரித்துக் கொள்வார்களோ? அ.தி.மு.க. தன் இருப்பைத் தக்கவைக்கவே போராடும் நிலையில் அது அடித்தாடுமா, அடி பணியுமா? பார்ப்போம்! அது அவர்கள் பிரச்சனை.

 அமித்ஷா சொல்கிறார், இரண்டு தமிழர்கள் பிரதமர் ஆகும் வாய்ப்பைத் தி.மு.க. கெடுத்துவிட்டதாம்! ஒருவர் காமராசர், மற்றவர் மூப்பனாராம். ஜவஹர்லால் நேருவுக்குப் பின்னர், பிரதமர்களை உருவாக்கியவர் ‘கிங்மேக்கர்’ காமராசர்! அவர் தானே (கிங்) பிரதமராக எப்போதும் விரும்பியதில்லை. மூப்பனாருக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் தி.மு.க.மீது பழிபோட வேண்டுமென இப்படிப் புதுக்கதையை அவிழ்த்து விட்டிருக்கும் அமித்ஷா, இப்போது கூட அண்ணாமலை, தமிழிசை, எல்.முருகன், நயினார் நாகேந்திரன், கரு.நாகராசன், வானதி சீனிவாசன் இவர்களில் யாரையாவது பிரதமர் ஆக்கலாமே!

அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வருமுன்னர் சேலத்தில் கலைஞர் நூற்றாண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதலமைச்சரும் , தி.மு.கழகத் தலைவருமான ஸ்டாலின் அவர்கள், 2004 முதல் 2013 வரை தி.மு.க அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் என்னென்ன சிறப்புத் திட்டங்களைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்தார்கள் என்பதைப் பட்டியலிட்டார். அதுபோல திராவிட மாடல் அரசு என்னென்னத் திட்டங்களைத் தமிழக மக்களுக்குக் கொடுத்துள்ளது என்பதையும் கூறி, அதே போல கடந்த 9 ஆண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ் நாட்டிற்கு என்னென்ன செய்தது என்பதை அமித்ஷா பட்டியலிட்டுச் சொல்வாரா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு அமித்ஷா ஒன்றிய அரசு வழக்கமாகத் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கும் நிதியைச் சொல்லி, அவ்வளவு கொடுத்தோம், இவ்வளவு கொடுத்தோம் என்று கொட்டினாரே தவிர, வேறு ஒன்றுமே சொல்ல வில்லை, பட்டியலிடவில்லை.

பா.ஜ.க. ஆட்சி செய்த 9 ஆண்டுகளில் தமிழ் நாட்டிற்கான ஒரே ஒரு சிறப்புத் திட்டம் என அறிவிக்கப்பட்டது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைதான். 2015இல் அன்றைய பா.ஜ.க.வின் நிதி அமைச்சர் மறைந்த அருண் ஜெட்லியால் முன்மொழியப்பட்டு, பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. அத்திட்டம் 2023 வரை 10% கூட நிறைவேற்றப் படவில்லை. ஆனால் ஹிமாச்சலப் பிரதேசம், பிலாஸ்பூரில் 2017இல் அடிக்கல் நாட்டப்பட்டு 2022இல் திறக்கப்பட்டு விட்டது. பஞ்சாப் மாநிலம், பதிண்டாவில் 2015இல் அடிக்கல் நாட்டப்பட்டு, 2019இல் திறக்கப்பட்டுவிட்டது. மற்ற மாநிலங்களுக்கு, சொந்த நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்தவர்கள், மதுரை எய்ம்ஸ்க்கு மட்டும் ஜப்பானிடம் கையேந்திக் கொண்டு இருக்கிறது.

2004 முதல் 2013 வரை ஒன்றியத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு.கழகம் பங்குபெற்ற அந்தக் காலத்தில் தான், சென்னை மெட்ரோ ரயில் திட்டம், தமிழுக்குச் செம்மொழித் தகுதி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், ஒரகடத்தில் தேசிய மோட்டார் வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம், சேலம் குளிர் உருட்டாலை, தாம்பரம் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், சென்னை துறைமுகம் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், சென்னைக்கு அருகில் கடல்சார் தேசிய பல்கலைக்கழகம், கிண்டி கத்திபாரா, பாடி, கோயம்பேடு ஆகிய இடங்களில் பெரிய மேம்பாலங்கள் என்பவை உள்ளிட்ட மிக முக்கியமான 69 சிறப்புத் திட்டங்களைத் தமிழ் நாட்டிற்குத் தி.மு.க அரசு கொண்டு வந்தது.

 கடந்த 9 ஆண்டுகளில் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, நீட், உதய் மின் திட்டம், இந்தி திணிப்பு, இரயில்வே, வங்கி போன்ற நிறுவனங்களில் வடநாட்டவர் நியமனம் என பெரும் பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகிறார்கள்.

இந்திய ஒன்றியத்தின் முன்னோடியாகத் திகழ்வது தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு.

அமித்ஷா எத்தனை முறை இங்கு வந்து பேசினாலும் 40 தொகுதிகளிலும் தி.மு.க முற்போக்குக் கூட்டணியே வெல்லும் என்பதை அமித்ஷா புரிந்திருப்பார் என்று நம்புகிறோம்.

- சாரதா தேவி

Pin It