இந்திய அரசை ஒன்றிய அரசு என்ற சொல்லால் தான் இனி தமிழ்நாடு அரசு குறிப்பிடும் என்று தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துவிட்டார். தமிழக பாஜக.வில் உள்ள மனுவாதிகள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பம்மிக்கொண்டு இருக்கிறார்கள்.
பாஜக தலைவர் முருகன் மட்டும் அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரை தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் இழிவுபடுத்தி விட்டார் என்று ஒரு குற்றச்சாட்டை கூறி தன்னுடைய அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இதற்கு மறுப்பு கூறும் வகையில் 24.6.2021 ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் ‘முகுந்த் பி உன்னி’ என்பவர் ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார். அந்த கட்டுரையே முருகனுக்கு சரியான பதிலாக இருக்கிறது.
இந்திய அரசியல் சட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் மத்திய அரசு (Central Government) என்ற வார்த்தை குறிப்பிடப்படவே இல்லை. மாறாக ‘ஒன்றிய அரசு’ என்ற சொல் ஏராளமான இடங்களில் குறப்பிடப்பட்டு இருக்கிறது.
அரசியல் சட்டப் பிரிவில் உள்ள 395 பிரிவுகளிலும் 22 பகுதிகளிலும் எந்த இடத்திலும் இல்லாத மத்திய அரசு என்ற சொல்லை நாம் இதுவரை கண்மூடித்தனமாக பயன்படுத்திக் கொண்டு வந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை.
தமிழ்நாடு அரசு ‘ஒன்றியம்’ என்று அழைக்க துவங்கியிருப்பது வரவேற்கத் தக்க நல்ல திருப்பம். இந்திய அரசியல் சட்டத்தின் உண்மையான உணர்வை புரிந்து கொண்டு குறிப்பிடப்பட் டிருக்கிற ஒரு சொல் என்று கட்டுரையாளர் எழுதியிருக்கிறார். மத்திய அரசு என்ற சொற்றொடரை 1897ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி கொண்டு வந்த சட்டத்தில் தான் பயன்படுத்தியது. அதில் மத்திய அரசு என்றால் அதிபரைக் குறிக்கும் என்று விளக்கம் சொல்லி இருந்தது.
1946 டிசம்பர் 13ஆம் தேதி நேரு அரசியல் நிர்ணய சபையில் சட்டத்தின் நோக்கத் திற்கான தீர்மானத்தை கொண்டு வந்து பேசுகையில், ‘இந்தியாவில் அமையப் போகின்ற சுதந்திர இறையாண்மை உள்ள குடியரசில் விரும்புகிற பிரதேசங்கள் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்று கூறியதோடு அப்போதுதான் மத்தியில் அமைகிற ஆட்சி வலிமையானதாக இருக்கும்’ என்றும் தெரிவித்தார்.
அரசியல் நிர்ணய சபையில் பாகிஸ்தான் பிரிவினை பிரச்சனை வருவதற்கு முன்பு நடந்த விவாதங்களில் இந்தியா ஒரு கூட்டாட்சி பொருந்திய நாடாக இருக்க வேண்டும். மாநிலங்கள் தன்னாட்சி பொருந்திய அமைப்பாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் பலரும் கருத்துக்களை தெரிவித்தார்கள்.
பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு தான் அங்கே இருந்த உறுப்பினர்களுடைய சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டது. ஆனாலும் அம்பேத்கரை பொருத்தவரையில் ‘Union of States' மாநிலங்கள் சேர்ந்த ஒன்றியம்’ என்ற கருத்தை அவர் உறுதியாக வலியுறுத்திக் கொண்டே இருந்தார்.
‘Central Government’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதை அம்பேத்கர் முற்றிலுமாக தவிர்த்தார். ‘இந்தியாவினுடைய ஆட்சி ஒன்றிய ஆட்சியாக இருக்கும்வரை தான் இந்தியா சிதறுண்டு போகாமல் இருக்கும்’ என்று அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
அவருடைய மொழியில் சொல்லவேண்டும் என்றால், ‘The federation is a union because it is Indestructiable’ ஆக ஒன்றியம் என்ற சொல்லை பயன்படுத்துகிறவர்கள் தான் அம்பேத்கரை உண்மையிலேயே மதிப்பவர்கள். ஒன்றியம் என்ற சொல்லை பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறவர்கள் தான் அம்பேத்கரை அவமானப்படுத்து கிறவர்கள். தமிழ்நாட்டு பாஜக தலைவர் இந்த வரலாறுகளை புரிந்து கொண்டு பேசுவது நல்லது.
இந்திய அரசியல் சட்டத்தில் ஒன்றியம் என்ற சொல் 430 இடங்களில் பயன் படுத்தப்பட்டிருக்கிறது. மத்திய அரசு என்ற சொல் ஒரு இடத்தில்கூட பயன்படுத்தப்பட வில்லை. அது பொருத்தமற்ற சொல் என்று அரசியல் சட்ட ஆய்வாளர் சுபாஷ் காஷ்யாப் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.
- விடுதலை இராசேந்திரன்