தேர்தல் பரப்புரைகளும், தேர்தலும் வழக்கம்போல் தமிழ்நாட்டில் அமைதியாக நடந்து முடிந்திருக்கின்றன. தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளும் வெளியாகி உள்ளன! பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகள் திமுக ஆட்சி தொடரும் என்பதாகவே இருக்கிறது!
எனினும் வழக்கத்திற்கு மாறாக, தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில், தமிழ்நாட்டில் ஒரு பதற்றம் ஏற்படக் கூடுமோ என்னும் ஐயம் பலரிடம் எழுந்துள்ளது! அதற்கு ஒரே காரணம், தமிழ்நாட்டில் புதிதாகப் பிறந்துள்ள த.வெ.க என்னும் கட்சிதான்!
எந்தக் காலத்திலும் தமிழ்நாடு கண்டிராத சில புதிய வழிமுறைகளை இந்தக் கட்சி கையில் எடுத்துள்ளது! அதாவது, குழந்தைகளைத் தூண்டிவிட்டு, குழந்தைகளின் மூலமாகப் பெற்றோர்களின் வாக்குகளைப் பெற முடியுமா என்று அந்தக் கட்சியும், அதன் தலைவரும் முயற்சி செய்கிறார்கள்! இது ஆரோக்கியமான அரசியலாக இருக்க முடியாது!
வேறு சொற்களில் கூற வேண்டுமானால், "அரசியலற்ற அரசியலை" முன்னெடுக்க அந்தக் கட்சி முயற்சி செய்கிறது! இந்தக் கொள்கைக்காக, இந்தக் கோட்பாட்டிற்காக எங்களோடு இணைந்து செயல்பட வாருங்கள் என்று அழைப்பு விடுக்காமல், சாக்லேட் வேண்டுமானால் எப்படி அழுது அடம் பிடிப்பீர்களோ, அப்படி அழுது அடம் பிடித்து விசில் சின்னத்திற்கு வாக்களிக்கச் சொல்லுங்கள் என்கிறார் அந்தக் கட்சியின் தலைவர், நடிகர் விஜய்! இது என்ன அரசியல் என்று புரியவில்லை!
இதன் பக்க விளைவு என்னவாக ஆகியிருக்கிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். தேர்தல் முடிவுகள் வரும் நாளில், விஜய் மற்றும் அவரது கட்சியினர் வெற்றி பெறவில்லை என்றால், நாங்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்து போய் விடுவோம் என்றும், வாக்களிக்காத எங்கள் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்துவோம் என்றும் இளம்பிள்ளைகள் சிலர் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்!
இப்படிப் பிள்ளைகளைத் தூண்டிவிட்டு விட்டு, அவர் கோயில் கோயிலாகப் போய்க்கொண்டிருக்கிறார் . தேர்தலுக்கு முன்பே, திருச்சியில் ஒரு மாதா கோயிலில் மண்டியிட்டு நடந்தார். தேர்தலுக்குப் பிறகு, கையில் வேலோடு திருச்செந்தூர் கோயிலுக்குப் போனார். பிறகு மராத்தியத்தில் உள்ள சீரடி சாய்பாபாவைக் கண்டு திரும்பினார். இப்போது, வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கும், நாகூர் பள்ளிவாசலுக்கும் போகப் போவதாக அறிவித்திருக்கிறார்!
இவருடைய அரசியல், தமிழ்நாட்டுக்கு ஒரு பெரும் ஆபத்தைக் கொண்டு வந்து விடுவதாக இருக்கிறது!
தேர்தலில் இவருக்குப் பெரிய வெற்றி எதுவும் வந்து விடப் போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், தேர்தல் முடிந்த கையோடு, இளைஞர்களிடம் நிறையப் பேசி, நிறைய எடுத்துச் சொல்லி எதிர்காலத்தில் இவை போன்ற நிகழ்வுகளை மாற்ற வேண்டிய கட்டாயமும் கடமையும் நம் எல்லோருக்கும் இருக்கிறது!
- சுப.வீரபாண்டியன்