vijay closing his eyesஇன்று பொறுப்பு ஏற்றிருக்கும் புதிய தமிழ்நாடு அரசு, இருபெரும் மாநில உரிமைகளக் கைவிட்டிருப்பது, மிகுந்த கவலைக்கு உரியதாக இருக்கிறது!

ஒன்று, அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கான உரிமையைத் தமிழ்நாட்டின் முதலமைச்சர், டெல்லியிடம் கையேந்தி கேட்டுக் கொண்டிருக்கிறார்! இன்னொன்று, பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்று போராடிப் பெற்ற உரிமையைத் தாமாக முன்வந்து உயர்கல்வி அமைச்சர் பறிகொடுக்கத் தயாராகி இருக்கிறார்!

இரண்டு மாநில உரிமைகளைத் தில்லியிடம் அடமானம் வைக்க, தமிழ்நாடு அரசு தாமே முன்வருவது அவமானத்தின் அடையாளம்!

எந்த ஓர் அரசு விழாவிலும் வந்தே மாதரம் பாடலைத்தான் முதலில் பாட வேண்டும் என்று சட்டத்தின் எந்தப் பிரிவும் சொல்லவில்லை. ஆளுநர் மாளிகையில் விழாக்கள் நடக்கும் போது எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கூறுவதும் அடிப்படையில் தவறானது! ஆளுநர் மாளிகையும் தமிழ்நாட்டின் எல்லைக்குள் தான் இருக்கிறது! அதுவும் அரசு விழாதான்!

ஒரு ஜனநாயக நாட்டில், முதலமைச்சர், ஆளுநர் என்று இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது! ஆளுநர் பதவியே தேவையற்ற ஓர் அலங்காரப் பதவிதான் என்னும் போது, அங்கே கொண்டு போய் நமக்கிருக்கிற உரிமைகளைத் தாமாக அடமானம் வைப்பது, தமிழ் நாட்டு மக்களைத் திட்டமிட்டு அவமதிப்பதாக இருக்கிறது!

விடுதலைச் சிறுத்தைகளின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், உயர் கல்வி அமைச்சரின் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்தா அல்லது தமிழ்நாடு அரசின் கருத்தா என்று கேட்டிருக்கிறார்! இது மிக முக்கியமான கேள்வி!

அரசாங்கத்தின் கொள்கை முடிவை, ஒரு தனி மனிதர், அவர் அமைச்சராகவே இருந்தாலும் கூட, எடுத்து விட முடியாது! எனவே இது அமைச்சரின் தனிப்பட்ட கருத்து என்றால் அது அத்துமீறல்! இல்லை, அரசாங்கத்தின் கருத்துதான் என்றால், அது அடிமைத்தனம்!

மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும் என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த நண்பர்களே, இந்திய ஒன்றிய அரசின் முன், இரு கைகளையும் கட்டிக் கொண்டு நிற்பதுதான், நீங்கள் சொன்ன மாற்றமா என்பதை மக்களுக்குக் கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்கள்!

ஒருவேளை, விஜய் அவர்கள் தலைமையிலான இன்றைய தமிழ்நாடு அரசு, தம் உரிமைகளை விட்டுக் கொடுக்க முன் வந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் ஒரு நாளும் அதனை ஏற்க மாட்டார்கள்!

- சுப.வீரபாண்டியன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.