கீற்றில் தேட...

தமிழ்நாட்டின் புதிய அரசின் முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிகழ்ச்சியில் 'தமிழ்த்தாய்' வாழ்த்துக்குப் பதிலாக 'வந்தேமாதரம்' என்ற பாடல் முதலில் பாடப் பெற்றுள்ளது. இதற்கு எதிர்ப்புகள் எழுந்தவுடன் இது 'தவறுதலாக' நடந்துவிட்டது என்று அமைச்சர் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கிறார்.

அரசு விழாக்களில் முதலில் வந்தேமாதரம் பாடவேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை 2026 பிப்ரவரி மாதம் ஒன்றிய அரசு வெளியிட்டு இருந்தது ஆதவ் அர்ஜுனாவுக்குத் தெரியாதா? இதை தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சொன்னவுடன் அதையேற்று முதல்வர் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் வந்தேமாதரம் பாடல் பாடப் பெற்றது என்று வெளிப்படையாகச் சொல்லாமல் 'தவறுதலாக நடந்துவிட்டது' என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. முந்தைய திமுகழக அரசு கொள்கை அளவில் ஒன்றிய அரசின் வழிகாட்டலை ஏற்கவில்லை, தமிழ்த்தாய் பாடலைத்தான் முதன்மைப் படுத்தியது.

1876 ஆம் ஆண்டில் சமஸ்கிருதத்தில் பக்கிம் சந்தர் சாட்டர்ஜி என்ற பார்ப்பனரால் எழுதப்பட்ட வந்தேமாதரம் பாடல், 1882 ஆம் ஆண்டில் வெளிவந்த அவரின் வங்காள மொழியின் 'ஆனந்தமடம்' நாவலில் இடம்பெற்றது. இந்த நாவல் முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிரான மதவெறுப்பை, கிளர்ச்சியை, வன்முறையைப் பின்னணியாகக் கொண்டது. இதில் வந்தே மாதரம் பாடல் வாங்காள இந்துக் கடவுளான 'காளி' 'துர்கா' 'ஜெகத்தாத்ரி' ஆகிய தெய்வங்களை (வங்காள) நாட்டின் அன்னையாகப் போற்றி வணங்க வேண்டும் என்று சொல்கிறது. இஸ்லாமிய ஏகத்துவத்திற்கு மாறாக இருப்பதால் அப்பாடலை இஸ்லாமியர்கள் ஏற்கவில்லை, ஆனால் ஏற்க வேண்டும் என்றனர் இந்துத்துவ ஆதரவாளர்கள்.

1938 இல் முகமது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லீம் லீக் கட்சி, இந்தப் பாடல் முஸ்லீம் எதிர்ப்புப் பாடலாகவும், இந்து மதத் திணிப்பாகவும் இருப்பதாகக் கூறி, அதைத் தேசிய கீதமாக ஏற்க மறுத்தது. வந்தேமாதரம் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அரவிந்த கோஷ் "வங்கத்தின் தேசிய கீதம்" என அதற்குப் பெயரிட்டார். சுபாஷ் சந்திர போஸுக்கு எழுதிய கடிதத்தில், ரவீந்திரநாத் தாகூர் “வந்தே மாதரத்தின் மையக்கரு துர்கா தேவிக்கான ஒரு துதியாகும். இது மிகவும் தெளிவானது, இதில் எந்த விவாதத்திற்கும் இடமில்லை. நிச்சயமாக, பக்கிம் சந்தர் இறுதியில் துர்கா வங்காளத்துடன் பிரிக்க முடியாதபடி இணைந்திருப்பதாகச் சொல்கிறார்" என்று வந்தேமாதரத்தை ஆதரிக்கும் அவர் "எந்தவொரு முஸ்லிமும் பத்துக் கைகள் கொண்ட தெய்வத்தை சுதேசமாக (தேசமாக) நாட்டுப்பற்றுடன் வழிபடுவார் என்று எதிர்பார்க்க முடியாது” என்றும் எழுதியிருக்கிறார். 1915 ஆம் ஆண்டுகளில் இப்பாடலை முழுமனதுடன் ஏற்றுக்கொண்ட காந்தியடிகள் 1940 ஆம் ஆண்டில் இதில் இஸ்லாமிய வெறுப்பு இருப்பதை ஏற்றுக் கொண்டார்.

1909 ஆம் ஆண்டு அமிர்தசரசில் கூடிய அகில இந்திய முஸ்லிம் லீக் 2 ஆம் அமர்வில் சர் சையத் அலி இமாம், “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று என்னால் கூற முடியாது, ஆனால் இந்தியாவின் மிகவும் முன்னேறிய மாகாணம், வந்தே மாதரம் என்ற பிரிவினைவாத முழக்கத்தை தேசிய முழக்கமாகவும், பிரிவினைவாதம் ஒரு தேசிய அனுசரிப்பாகவும் முன்வைப்பதைக் காணும்போது, என் இதயம் விரக்தியாலும் ஏமாற்றத்தாலும் நிரம்புகிறது; மேலும், தேசியம் என்ற போர்வையில் இந்தியாவில் 'இந்து தேசியம்' போதிக்கப்படுகிறது என்ற சந்தேகம் உறுதியான நம்பிக்கையாக மாறுகிறது” என்று பேசியிருக்கிறார்.

"இந்து ராஷ்டிரத்திற்கான கனவுதான் வந்தே மாதரம்’'என்கிறார் நாடாளு மன்றத்தில், தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா.

"பக்கிம் சந்தரரின் சிந்தனையில் கருக்கொண்டது இந்து வங்காள தேசம்தான். தேசம் என்பது அவரைப் பொறுத்தவரை ஓர் இந்து வங்காளி சமூகம்தான். எனவே அவருடைய தேசிய உணர்வை வங்காள முஸ்லிம்கள் பகிர்ந்து கொள்ளாமல் இருந்ததில் வியப்பில்லை" என்கிறார் எஸ்.வி.ராஜதுரை.

அரசியலமைப்புப் பிரிவு 25இன்கீழ் மத சுதந்திரத்தையும், பிரிவு 19 இன்கீழ் கருத்து சுதந்திரத்தையும் உறுதி செய்கிறது என்ற வாதம் இஸ்லாமியர்களால் முன்வைக்கப்படுகிற நிலையில், வந்தே மாதரம் பாடலை முதல் பாடலாகவும், தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்தள்ளி மூன்றாம் பாடலாகவும் தவெக அரசு நிகழ்வில் பாடியிருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது, தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது.

- எழில். இளங்கோவன்