1992ல் உலக வணிக நிறுவனம் சொல்லிய உலகமயமாக்கலின் முக்கிய சாராம்சங்கள் இவை:

1. தங்கு தடையின்றி எந்த நாட்டினரும் எவருடனும் வணிகம் செய்து கொள்ளலாம். யார் அதிகம் உற்பத்தி செய்து விற்பனை/ஏற்றுமதி செய்கிறார்களோ அவர்கள் இலாபம் கொள்ளலாம்.

2. இதனால் நாடுகளுக்கிடையே, நிறுவனங்களுக்கிடையே போட்டி உருவாகும். அதனால் நுகர்வோர்கள் வளம் பெறுவார்கள். பொருட்களின் சந்தை விலை குறையும்.

3. உலகம் முழுதும் பொருட்களின் தரம் பற்றிய அறிவு வளரும். தரமான பொருட்கள் மட்டுமே சந்தையில் அனுமதிக்கப்படும்.

4. அனைத்து நாடுகளும் ஒரு குடைக்குக் கீழே வரும். ஒரு நாட்டிலே மிதமாய் இருக்கும் வளங்கள் (இயற்கை வளங்கள்) வளம் குன்றிய நாட்டினருக்குப் பகிர்ந்து அளிக்கப்படும்.

இவைகள் இல்லாமல் இன்னும் சில மீதமிருக்கின்றன‌. மேற்கூறியவையே முக்கிய அம்சங்கள்.

obama_manmohan_380இந்த‌ நோக்க‌ங்க‌ளினால் யாருக்குப் ப‌ய‌ன்? என்ப‌தை இன்று நாம் புரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம். உலகின் பெரிய‌ண்ண‌னாக‌ வ‌ல‌ம் வ‌ரும் அமெரிக்காவின் ச‌மீப‌த்திய‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் வெளிச்ச‌ம் போட்டுக் காட்டுகின்ற‌ன‌. நேற்று அமெரிக்க‌ அதிப‌ர் ப‌ராக் ஒபாமா, அமெரிக்காவின் பொருளை உல‌கின் அனைத்து நாடுக‌ளுக்கும் விற்ப‌னை செய்வ‌தே அவ‌ருடைய‌ இல‌ட்சிய‌மாக‌க் கூறியிருக்கிறார். அதாவ‌து அமெரிக்காவிற்கு நிறைய‌ நுக‌ர்வோர்க‌ள் வேண்டும்.

எங்கிருந்து கிடைப்பார்க‌ள் இந்த‌ நுக‌ர்வோர்க‌ள்?. உல‌கின் மொத்த‌ ம‌க்க‌ள் தொகையில் ஆறில் ஒருவ‌ன் இந்திய‌னாக இருக்கும் போது, உல‌கின் மொத்த‌ நுக‌ர்வுத் தேவைக‌ளில் சுமார் 17 ச‌த‌ம் ந‌ம்முடைய‌தாக இருக்கும். வ‌ள‌ர்ந்து வ‌ரும் ம‌க்கள் தொகையை க‌ண‌க்கில் வைத்துக் கொண்டால், இன்னும் சில‌ ஆண்டுக‌ளில் 25 ச‌த‌மாக‌ நம்முடைய‌ நுக‌ர்வு வ‌ள‌ர‌க்கூடும். ஆக‌ அமெரிக்காவுக்கான‌ நுக‌ர்வோர்க‌ளாக‌ நாம் மாறியாக‌ வேண்டும் அல்ல‌து அவ‌ர்க‌ள் ந‌ம்மை மாற்ற‌ வேண்டும். இந்த‌ முய‌ற்சிதான் க‌ட‌ந்த‌ 20 ஆண்டுக‌ளாக‌ ந‌ட‌ந்து வ‌ந்தது. ந‌ம்மில் ப‌டித்த‌ கார்ப்ப‌ரேட் ஆசாமிக‌ள் ப‌ல ‌பேர் அவ‌ர்க‌ளின் நுக‌ர்வோர்க‌ளாக மாறி விட்டோம். இன்னும் மிச்ச‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை லாவ‌க‌மாக‌ மாற்றும் முயற்சிதான் இப்பொழுது ம‌த்திய‌ அர‌சு செய்யும் முய‌ற்சி.

விவேகான‌ந்த‌ரின் கூற்றை இங்கே நினைவுப‌டுத்துவ‌து சரியான‌தாக இருக்குமென‌ நினைக்கிறேன். "எவ்வ‌ள‌வு அதிக‌மாக‌ வைத்துக் கொள்ள‌ வேண்டும் என‌ச் சொல்லுவ‌து மேலை நாட்டு நாக‌ரீக‌ம். எவ்வ‌ள‌வு குறைவாக‌ வைத்துக் கொள்ள‌ வேண்டும் என‌ச் சொல்லுவ‌து ந‌ம் நாக‌ரீக‌ம்". அவ‌ர‌து கூற்றின் சாராம்ச‌ம் என்னவென்ப‌து அனைவ‌ருக்கும் புரிய‌க்கூடும்.

ந‌ம்முடைய‌ தேவைக‌ளைக் குறைத்து அத‌ன் மூல‌ம் ந‌ம் இய‌ற்கை வ‌ள‌ங்க‌ளைப் பாதுகாத்து ந‌ம் பேர‌க்குழ‌ந்தைக்கும் சேர்த்து வைக்கும் ம‌ன‌ப்ப‌க்குவ‌ம் இந்திய‌ர்க‌ளுடையது என்ப‌துதான் அது. ந‌ம்முடைய‌ க‌லாச்சார‌ம் என்ப‌து உடை, மொழி, க‌லை, ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ம், பார‌ம்ப‌ரிய‌த்த‌ன்மை, வாழ்க்கைமுறை என‌ வெளிப்புற‌த்தையும், ப‌ண்பாடு என்ப‌து ப‌ண்ப‌ட்ட‌ ந‌ம் ம‌ன‌நிலையையும், ஜீவ‌த்த‌ன்மையையும், முக்தி நிலையையும் சொல்வ‌து. அதாவ‌து ப‌ண்ப‌ட்ட‌ நாம் முற்றிலும் நிறைவுற்ற‌ நிலையில் இந்த‌ ம‌ண்ணில் என்ன‌ விளைகிற‌தோ அதை ம‌ட்டுமே உண்டு, செரித்து வாழ‌க் க‌ற்றிருக்கிறோம். இன்னொருவ‌னுடைய‌ பொருளுக்கும், நாட்டிற்கும் நாம் ப‌டையெடுத்துச் சென்ற‌தாய் சான்று கிடையாது.

ஆக‌ முற்றிலும் எல்லா வ‌ள‌ங்க‌ளும் நிறைந்து ப‌ண்பாட்டிலும், இய‌ற்கை வ‌ள‌த்திலும், செல்வ‌த்திலும் கொழித்திருந்த‌தைக் கேள்விப்பட்டுத்தான் "கொல‌ம்பஸ்" இந்தியாவைத் தேடி ப‌ய‌ண‌ம் புரிந்தான். ஆனால் அமெரிக்காவைக் க‌ண்ட‌றிந்தான் என்ப‌து வ‌ர‌லாறு. ஆக அமெரிக்கா எனும் ஒரு நாடு உருவாவ‌த‌ற்குக் கார‌ண‌மே "இந்தியா" எனும் பண்பாட்டு விளை நிலத்தைத் தேடிய பயணத்தின் எச்சம் என்ப‌தை ம‌ற‌ந்து விட்டு அலைகிறார்க‌ள் அமெரிக்க‌ர்க‌ள். நாமும் ம‌ற‌ந்து விட்டோம் "ந‌ம் ம‌ண்ணின் வ‌ள‌த்தையும் பெருமையையும்".

பின்னால் ஊசி விற்க‌ வ‌ந்த‌ ப‌ர‌ங்கிய‌ர்க‌ளுக்கு ந‌ம் நாட்டையே தான‌ம் வார்ப்ப‌த‌ற்கு நம்மில் இருந்த‌ முக்கிய‌க் கார‌ண‌ம் ந‌ம் ஒற்றுமையின்மையும் அறியாமையும்தான். இன்றும் அது தொட‌ர்வ‌து இந்த‌ ம‌ண்ணின் துர்பாக்கிய‌ம். அன்று வ‌ந்த‌வ‌ர்க‌ள் பொன்னையும், பொருளையும், முடிந்த‌ அள‌வு நாட்டின் செல்வ‌த்தையும் கொள்ளை கொண்டு போய் அவ‌ர்க‌ள் நாட்டில் வைத்து அழ‌கு பார்த்தார்க‌ள். இன்று ந‌ம்மிட‌ம் மிஞ்சியிருக்கும் க‌லாச்சார‌த்தையும், ப‌ண்பாட்டையும், அறிவு ஞான‌த்தையும், இய‌ற்கை வ‌ள‌த்தையும், ம‌னித‌ வ‌ள‌த்தையும் கொள்ளைய‌டிப்ப‌த‌ற்கு அமெரிக்க‌ர்க‌ள் கொண்டு வ‌ந்த‌ புத்திசாலித்த‌ன‌மான‌ கொள்கைதான் "உல‌க‌மய‌மாக்க‌லின் மூல‌ம் ந‌ம்மை அவ‌ர்க‌ளின் ச‌ந்தைக்க‌ள‌மாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து".

மேற்கூறிய‌ நான்கு அம்ச‌ங்க‌ளிலே நாம் எப்ப‌டி பாதிக்க‌ப்ப‌டுவோம் என்ப‌தை வ‌ரிசைப்ப‌டுத்த‌லாம்.

1.அதிக‌ உற்ப‌த்தி செய்ப‌வ‌ர்க‌ளே ச‌ந்தைக்குக் குறைந்த‌ விலையில் பொருட்க‌ளை எடுத்துச் செல்ல‌ முடியும் என்பது நிதர்சனம். ந‌ம் நாட்டின் இய‌ற்கை வ‌ள‌த்தையும், தொழில்நுட்ப‌ அறிவையும் ம‌ற்ற‌ நாடுக‌ளோடு ஒப்பீடு செய்து பார்க்கையில் நாம் மிக‌வும் பின் த‌ங்கிய‌ நிலையில் இருக்கிறோம். இன்ற‌ள‌வுக்கும் உண‌வு, உடை, ம‌ருத்துவ‌ம் மற்றும் இத‌ர‌ உற்ப‌த்தித் துறைக்குத் தேவையான தொழில் நுட்ப‌ங்க‌ளையும், இய‌ந்திர‌ங்க‌ளை‌யும் பிற‌ நாடுக‌ளில் இருந்துதான் இற‌க்கும‌தி செய்கிறோம். ந‌ம் க‌ச்சாப் பொருட்க‌ளுக்கு ஆகும் செல‌வை விட‌ தொழில் நுட்ப‌த்திற்கு ஆகும் செல‌வு அதிக‌ம். மேலும் அந்த‌ தொழில் நுட்ப‌த்திற்கு வ‌ருடா வருட‌ம் நாம் அளிக்க‌க்கூடிய‌ ப‌ய‌ன்பாட்டு ம‌ற்றும் பாதுகாப்புச் செல‌வு, ம‌ற்ற‌ நாட்டின‌ருக்கு நிர‌ந்த‌ர‌ வ‌ருவாயையும் ந‌ம‌க்கு நிரந்த‌ர‌ச் செல‌வையும் ஈட்டித்த‌ரும்.

வெளிநாடுகளில் அந்த‌ தொழில்நுட்ப‌த்தைத் த‌யாரிக்கும் குழுவில் க‌ட்டாய‌ம் ந‌ம் ம‌ண்ணின் மைந்த‌ர்க‌ள் இருப்பார்க‌ள் என்ப‌து கூடுத‌ல் சுவார‌ஸ்ய‌ம். ந‌ம் மண்ணின் மைந்த‌ர்க‌ளின் மூளைக்கு வாட‌கையாக‌ மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் அளித்து அவ‌ர்க‌ளின் க‌ண்டுபிடிப்புக‌ளுக்குக் கார்ப்ப‌ரேட் க‌ம்பெனிக‌ள்

"காப்பி ரைட்ஸ்ம், இண்டெலெக்சுவ‌ல் ப்ராப‌ர்டி ரைட்ஸ்ம்" வாங்கிக்கொள்ளும். யாருக்கு உழைக்கிறோம்? என்றே தெரியாம‌ல் உழைக்கும் ந‌ம் அறிவுஜீவிகள், விஞ்ஞானியாக உல‌க‌ம் முழுதும் முக்கிய‌மாக‌ அமெரிக்க‌ ஐரோப்பிய‌ நாடுக‌ளிலே டால‌ர்க‌ளுக்காக‌ வாழ்ந்து கொண்டிருக்கிறார்க‌ள்.

2. உற்ப‌த்திப் பெருகுவ‌தினாலே ச‌ந்தை விலை குறையும் என்ப‌து ஒரு முர‌ண்பாடான‌ பொருளாதார‌க் கொள்கை. ப‌ல‌ நிறுவ‌ன‌ங்க‌ள் ச‌ந்தையிலே க‌டை விரித்து த‌ங்க‌ளுடைய‌ பொருள்க‌ளை விற்கிற‌ சூழ்நிலையின் ஆர‌ம்ப‌ கால‌க‌ட்ட‌த்தில்தான் விலை குறையுமே ஒழிய‌, பின்னாட்க‌ளில் போட்டி போட‌ முடியாத‌ சின்ன‌ச் சின்ன‌ நிறுவன‌ங்க‌ள் காணாம‌ல் போய்விடும் பட்சத்திலே, பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் ஒன்றிர‌ண்டு ம‌ட்டுமே தாக்குப் பிடிக்கிற‌ சூழ்நிலையில் அவ‌ர்க‌ள் இணைந்து விலை நிர்ண‌ய‌ம் செய்வார்க‌ள் அல்ல‌து ஒன்றை ம‌ற்றொன்று விழுங்கி, சந்தையின் ஒற்றை நிறுவ‌ன‌மாக‌ த‌ங்க‌ளை மாற்றிக்கொள்வார்கள். பின்பு அவ‌ர்க‌ள் வைத்த‌துதான் விலை.

ச‌ந்தைப் போட்டி என்ப‌து இல்லாம‌லே போய்விடும். இன்றைக்கு ந‌ம் ம‌த்திய‌ அர‌சு முய‌ற்சி செய்கிற‌ "சில்ல‌ரை வ‌ணிக‌த்தில் அய‌ல் நாட்டின‌ர்" எனும் கொள்கை ந‌ம் உள் நாட்டு நிறுவ‌னங்க‌ளுக்கு இன்னும் சில‌ ஆண்டுக‌ளில் சாவும‌ணி அடிப்ப‌த‌ற்கான‌ முய‌ற்சியாக‌த்தான் கொள்ள‌ வேண்டும். வெளிநாட்டு நிறுவ‌ன‌ங்க‌ள் ச‌ந்தைக்கு வ‌ந்தால் விவ‌சாய விளைபொருட்க‌ளின் கொள்முதல் விலை கூடும் என்ப‌தும் ஒரு பொய்யான‌ செய்தி. உள்ளூர் கொள்முத‌ல்கார‌னின் விலையை விட‌ அதிக‌மான‌ விலையை கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆரம்ப காலத்தில் வ‌ழ‌ங்கி உள்ளூர்க்காரனின் ம‌ர‌ண‌த்தை உறுதி செய்த‌ பிற‌கு விவ‌சாயிக‌ளின் க‌ழுத்தை நெரிப்பார்க‌ள்.

நெரிப்பது வேறு யாருமல்ல, நம் சகோதரர்கள்தான். அன்று வந்த கிழக்கிந்தியக் கம்பெனியிலே குமாஸ்தாவாக, கிளர்க்காக, போலிஸ்காரர்களாக இருந்து திறம்பட சேவையாற்றிய நம் இனத்தவர்களின் குழந்தைகள் இன்று மேனேஜர்களாக, வைஸ் பிரஸிடண்ட்களாக, அமெரிக்க "சியுவோ"வுக்கு ரிப்போர்ட் செய்வார்கள். ந‌ம்மிட‌ம் இருக்க‌க்கூடிய‌ ஒற்றுமை அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றாக‌த் தெரியுமல்ல‌வே. அமெரிக்க "சியுவோ" சொன்னால் தன் சகோதரனையும் கொலை செய்வார்கள் நம் தர்மபுத்திரர்கள்.

இந்தியாவில் இருக்க‌க்கூடிய‌ ஜ‌ப்பான் கம்பெனிகள், கொரியக் கார் க‌ம்பெனிக‌ள், அவ‌ர்க‌ளுக்குத் தேவையான இய‌ந்திர‌ங்க‌ள் குறைந்த‌ விலையில் இந்தியாவிலேயே கிடைக்கும்பட்சத்திலும் அவர்கள‌து நாட்டு நிறுவ‌ன‌த்திட‌மிருந்துதான் அதிக‌ விலை கொடுத்து வாங்குகிறார்கள். தன் நிறுவனத்தின் இலாப‌ம் என்ப‌தை விட‌ த‌ன் மூல‌மாய் கிடைக்க‌க்கூடிய‌ இலாபமும் த‌ன் ச‌கோத‌ர‌னுக்குத்தான் போய்ச் சேர‌ வேண்டும் என்ப‌திலே ஜ‌ப்பானிய‌, கொரிய‌ நாடுக‌ள் சுதேசிய‌த்தைக் க‌டைப்பிடிக்கின்ற‌ன‌.

3. த‌ர‌மான‌ப் பொருட்க‌ள் சந்தையில் கிடைக்குமென்ப‌து ப‌ர‌வ‌லாக‌ச் சொல்லபடும் செய்தி. த‌ர‌ம் என்று அவ‌ர்க‌ள் கூறும் "ஸ்டான்டர்டைசேஸனின்" முக்கிய‌க் கூறுக‌ளை யார் நிர்ண‌யிப்ப‌து? அமெரிக்காவின் த‌ர‌ம் என்ப‌து இந்தியாவுக்கும், இந்தியாவின் த‌ர‌ம் சைனாவுக்கும் எப்ப‌டி ஒத்து வ‌ரும்? அமெரிக்க‌ரின் உண‌வுமுறை இந்திய‌ர்க‌ளுக்கு எப்ப‌டிப் பொருந்திப் போகும். த‌ர‌ம் என்ப‌து இருக்கிற‌ ப‌ல்வேறுப‌ட்ட‌ நுக‌ர்வுப் பொருளை ஒரு வ‌ரைய‌றையின் மூல‌ம் சுருங்க‌ச் செய்துவிடும்.

கேப்ரீஸ் த‌யாரிக்கும் சாக்லேட் ம‌ட்டும்தான் த‌ர‌மான‌து, அதே போல்தான் எல்லோரும் த‌யார் செய்ய‌ வேண்டுமென்றால், ந‌ம்மூர் இல‌ட்டு, சிலேப்பி, அல்வா, மைசூர்பாக்குக‌ள் என்ன‌வாகும். அவைக‌ள் எல்லாவ‌ற்றையும் ஒரு த‌ர‌க் குடைக்குள்ளே எப்ப‌டி கொண்டு வ‌ருவ‌து. இந்தியா முழுதும், உல‌க‌ம் முழுதும் ஒரே போல் இருக்க‌ வேண்டுமென்றால், ந‌ம் நாட்டின் வெவ்வேறு மாநில, பிராந்திய‌ உடை வ‌கைக‌ள்,மொழிகள், க‌லைக‌ள், க‌லாச்சார‌ம் என்ன‌வாவது? எல்லோரும் ஆங்கில‌ம்தான் பேச‌ வேண்டுமா? எல்லோரும் அமெரிக்க‌ ஐரோப்பிய‌ நாக‌ரிக‌க் குடைக்குள் நிற்க‌ வேண்டுமா? ப‌ண்பாட்டின் விளைநில‌ம் என்று தேடித்தானே உல‌க‌ நாடுக‌ள் அனைத்துமே க‌ட‌ந்த‌ ப‌த்து நூற்றாண்டுக‌ளாக‌ இந்தியாவின் மீது ப‌டையெடுத்துக் கொண்டிருந்த‌ன.

க‌ட‌ந்த‌முறை கிழ‌க்கிந்திய‌க் க‌ம்பெனி அழிக்க‌ முடியாம‌ல் விட்டுச் சென்ற "பார‌த‌ ப‌ண்பாட்டுக் க‌லாச்சாரத்தை" ந‌ம் கைக‌ளைக் கொணடு நாமே‌ ந‌ம் க‌ண்க‌ளைக் குத்துவதற்கு க‌ட‌ந்த‌ 65 காலமாக நம்மைத் த‌யார்ப‌டுத்தியிருக்கிறார்கள் வெள்ளையர்கள். அதற்கு முற்றிலும் துணை போகும் முய‌‌ற்சியாக ந‌ம் இளைஞ‌ர்களைத் தயார்படுத்திவிட்டார்கள். ப‌டித்த‌வ‌ர்க‌ள் எல்லோரும் ப‌ண்ப‌ட்ட‌வ‌ர்க‌ளாகி விட‌ முடியுமோ?

ந‌ம்முடைய‌ ப‌ண்பாடு என்ன‌ என்ப‌தைச் சொல்லிக் கொடுக்க‌த் த‌வ‌றிய‌ மெக்காலே க‌ல்வி அமைப்பின் மூல‌ம் விளைந்த‌ க‌ளைச் செடிக‌ள்தான் இன்று நாடு முழுதும் விர‌விக் காண‌ப்ப‌டுகிற‌து. அன்று ப‌டிக்காத‌வ‌னுக்கு ஆங்கிலேய‌ர்க‌ளின் மீதும் ஐரோப்பாவின் மீதும் இருந்த‌ மோக‌த்தை விட‌ இன்று ப‌டித்த‌வ‌னுக்கு அதிக‌மாக‌வே இருக்கிற‌து. ச‌ர்வீஸ் இண்டெஸ்ட்ரீஸ் மூல‌ம் த‌ன் அறிவை அட‌கு வைத்துவிட்டு வேற்று நாட்ட‌வனுக்குச் சேவை புரிவ‌தையே ப‌ண்பாட்டுப் பெருமையாக‌க் கொள்கிறார்க‌ள் ந‌ம் இளைஞ‌ர்க‌ள். ந‌ம்முடைய‌ புராதான‌மும், மொழியும், இல‌க்கிய‌மும், இசையும், நட‌ன‌மும் அழிக்க‌ப்ப‌ட வேண்டும் என்ப‌திலே நீள்கிற‌து உல‌க‌ நிறுவ‌ன‌த்தின் த‌ர‌ம் ப‌ற்றிய‌ கொள்கைக‌ள்.

4. க‌ட‌ந்த‌ ஐந்தாண்டுக‌ளில் இந்திய‌ மொத்த உள்நாட்டு உற்ப‌த்தியில் பெரும்ப‌ங்கு வ‌கிக்கும் துறைக‌ள் எதுவென‌ ப‌டித்த‌ க‌ண‌வான்க‌ள் அனைவ‌ரும் ச‌ற்று வ‌ரிசைப்ப‌டுத்திப் பார்க்க‌ வேண்டும். விவ‌சாய‌ம், தொழிற்சாலைக‌ள் மூலம் பெறப்படும் உற்ப‌த்தி ம‌ட்டுமே உண்மையான‌, நீடித்த‌, நிலையான‌ உற்ப‌த்தி. தொட‌ர்ந்து வ‌ருடா வ‌ருட‌ம் உற்ப‌த்தியை மீண்டும் மீண்டும் பெற‌க்கூடிய‌ (ரெனிவ‌பில்) வ‌ள‌ங்க‌ள். ஆனால் இந்த‌ உற்ப‌த்தி த‌லைகீழாச் ச‌ரிந்து குப்புற‌க் கிட‌க்கிற‌து. மொத்த‌ உற்ப‌த்தியில் ப‌த்து ஆண்டுக‌ளுக்கு முன்னால் 21 சத‌வீத‌ம் இருந்த‌ விவ‌சாய‌ம் இன்று 2 ச‌த‌வீத‌த்திற்கும் கீழே சென்றுவிட்ட‌து.

ரிய‌ல் எஸ்டேட், இன்ஃப்ராஸ்ட்ர‌க்ஸ‌ர், ம‌ண‌ல் எடுத்தல், க‌ல் குடைத‌ல், நில‌க்க‌ரி தோண்டுத‌ல் என‌ ந‌ம்மின் இய‌ற்கை வ‌ள‌த்திற்கு எவ்வ‌ளவு கேடு விளைவிக்க‌ முடியுமோ அந்த‌ தொழில்க‌ளின் மூல‌ம் ந‌ம் உற்ப‌த்தி பெருகியிருக்கிற‌து. இந்த இயற்கை வளத்தை அழித்துவிட்டால் மீண்டும் பெற முடியாது. அடுத்த‌ நிலையில் ச‌ர்வீஸ் இண்ட‌ஸ்ட்ரீஸ் இருக்கிற‌து. இந்த‌ ச‌ர்வீஸ் இண்ட‌ஸ்ட்ரீஸ் நிலையான வ‌ருவாயை வ‌ழ‌ங்குவ‌த‌ற்கு சாத்திய‌க்கூறுக‌ள் இல்லை. பெரும்பாலும் ஐடி, பிபிஒ, தொலைதொட‌ர்பு, வ‌ங்கி, காப்பீடு சேவைக‌ள் மூல‌ம் பெறும் வ‌ருமான‌ம் நிர‌ந்த‌ர‌மான‌து அல்ல‌. ஆனால் இவைக‌ள் மூல‌ம்தான் ந‌ம்மின் ஜிடிபி உய‌ர்வ‌தாய் ந‌ம்மை ந‌ம்ப‌வைத்துக் கொண்டிருக்கிற‌து ம‌த்திய அர‌சு.

அமெரிக்க‌ர்க‌ளுக்கு, ஐரோப்பிய‌ர்க‌ளுக்கான‌ கார்கள் தயாரிக்கும் நிறுவனத்தையும், அதிக‌ம் க‌ரிம‌த்தைக் க‌க்கும் தொழிற்சாலைக‌ளையும்தான் ந‌ம் நாட்டில் நிறுவியிருக்கிறார்க‌ள். உல‌கின் அதிக‌மான‌ தொழிற்சாலைக் க‌ழிவுக‌ளை பெற்றிருக்கும் நாடாக‌ தென்னாப்பிரிக்காவை மாற்றிவிட்ட‌து இந்த‌ உல‌க‌ம‌ய‌மாக்க‌ல். அதாவ‌து அறிவார்ந்த‌ அமெரிக்க, ஐரோப்பிய‌‌ அண்ண‌ன்க‌ள் வீசும் விச‌ம் தோய்த்த‌ பிஸ்க‌ட்டுக‌ளைத் தின்றுவிட்டு வாலாட்டி அவ‌ர்க‌ளுக்குச் சேவ‌க‌ம் புரியும் நாய்க‌ளாக‌த்தான் ந‌ம் ப‌டித்த‌ இன்றைய‌ இளைஞ‌ர்க‌ள் இருக்கிறோம்.

நாம் யார்? நம் நாக‌ரீக‌ம் என்ன‌? ஏன் அத்த‌னை உல‌க‌ நாடுக‌ளும் இந்தியாவை நோக்கி ப‌டையெடுத்தார்க‌ள்? ந‌ம் ப‌ண்பாடு எவ்வ‌ள‌வு ஆழ‌மான‌து, அற்புத‌மான‌து? தேவைக‌ளைக் குறைத்த‌ல் மூல‌ம் இருப்ப‌தை வைத்து வாழும் சமூக‌ வாழ்க்கை, சேர்த்து வைத்து வாழ்த‌லா? அல்ல‌து வாழ்ந்து சேர்த்து வைப்ப‌தா? ந‌ம் முன்னோருடைய‌ வாழ்க்கைமுறை யாது? எப்ப‌டிப்ப‌ட்ட தியாக‌ச் செம்ம‌ல்க‌ள் இந்த‌ நாட்டில் வாழ்ந்தார்க‌ள்? இந்த‌ நாட்டின் வேறுப‌ட்ட‌ ஆனால் நித்தியமான க‌லை, மொழி, க‌லாச்சார‌, ப‌ண்பாட்டு அறிவுப் பெட்ட‌க‌ங்க‌ள் யாது? என‌ நீளும் ந‌ம்மைப் ப‌ற்றிய, ந‌ம் முன்னோர்க‌ள் ப‌ற்றிய‌ தேடுத‌லைத் தொலைத்து விட்டால், ந‌ம் பிள்ளைக‌ளுக்கு நாம் சேர்த்து வைப்ப‌து வெறும் டால‌ர்க‌ளாக‌ ம‌ட்டும்தான் இருக்கும்.

மீண்டும் ஒரு விடுத‌லைக்கு பார‌த‌ம் த‌ன்னைத் த‌யார்ப‌டுத்திக் கொள்ள‌வில்லையென்றால், மிச்ச‌ம் என்று சொல்லுவ‌த‌ற்கு இங்கு ஒன்றும் இருக்காது.

- சோமா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

5 comments

5
நடராசன்
1 உண்மை--- யார் என்பதில் இந்திய வணிகர்களும் அடக்கம். இந்திய வணிகர்கள் தரமான பொருட்களைக் கொணர்ந்து நுகர்வோருக்கு விற்க வேண்டும் நடை முறை என்னவென்றால் உற்பத்தியாளர்கள் -குறிப்பாக விவசாயிகளின் விளை பொருட்களுக்கு விலையை நிர்ணயிப்பது வியாபாரிகளே.விவசாயிகளின் மேலாண்மையில் நூறில் ஒரு பங்கு திறன் இல்லாத வணிகர்கள் கொழுத்து வருகின்றனர். விவசாயிகள் உழக்குக்குள் கண்ணை நுழைத்து கணக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த உலக மயமாக்கலில் பெரிதும் பயன் பெறப் போவது விவசாயிகளே. விவசாயிகள் கையைவிட்டு போய் விடுவார்களோ என்ற அச்சம் வணிகர்களிடையே இப்போது. விவசாயிகளின் உற்பத்தித் திறன் மேம்படும்.

2 போட்டி உருவானால் நுகர்வோர்கள் பயன் பெறுவார்கள். இயற்கை மற்றும் உண்மை. தரமற்ற பொருட்களைத் தான் நம் மக்கள் பெறுகின்றனர் தற்பொழுது. இந்திய வணிகர்கள் தரத்தில் கவனம் செலுத்துவதில்லை.

3 உண்மை. தரம் பற்றிய அறிவு நிச்சயமாக வளரும். நம் நாட்டு உற்பத்தியாளர்களும் தரம் பற்றி சிந்திக்க ஆரம்பிப்பார்கள்.

4 வணிகம் ஒரு குடையின் கீழ் வரும் என்பது -- ஒரு நாட்டின் கீழ் அல்ல. தொழில் நுட்பம் பரவி உற்பத்தி கொள்முதல் விற்பனை என்பவற்றில் உயர் தரம் அடைய வாய்ப்பு உண்டு. ஏதேனும் ஒரு நாடு இயற்கை சீற்றத்தின் காரணமாக உணவு உற்பத்தியில் பாதிக்கப் படும் போது இந்த நவீன வணிக முறை மிகவும் கை கொடுக்கும் குறிப்பாக மக்கள் எண்ணிக்கை அதிகமுள்ள நாட்டுக்கு.

அமெரிக்க நாட்டின் பொருளை அனைத்து நாடுகளுக்கும் விற்பனை செய்ய வேண்டும் என்று ஒபாமா திட்டம். -- இது ஒரு தவறான எண்ணம். அமெரிக்க இறக்குமதி செய்யும் நாடாகவே உள்ளது. அமெரிக்க பொருளின் தயாரிப்பாளர் சீன நாடு. பெரும் இயந்திரங்களை உற்பத்தி செய்வதில் அமெரிக்க முன்னணியில் உள்ளது. எடுத்துக் காட்டு விமானங்கள்.

நுகர்வோருக்கு அமெரிக்கா ஐரோப்பா நாடுகளை விட வசதியானது ஏன் ?-உணவுப் பொருளில் இந்தியாவை விட மலிவு. இருநூறு டாலர் (சுமார் பத்தாயிரம் ரூபாய்)இருந்தால் இருவர் மிக தரமான சத்து நிறைந்த பாதுகாப்பான உணவு பெற முடியும் இந்தியாவில் இது சாத்தியமல்ல.

இந்திய மக்கள் எண்ணிக்கை 121 கோடி. சுமார் 17 விழுக்காடு. உலகில் உற்பத்தியாகும் பொருட்களில் 17 விழுக்காடு நம் இந்திய மக்கள் பயன் படுத்தினால் உலகின் மிகப் பணக்கார நாடு நம் இந்தியா தான். 22 கோடி மக்கள் இரவு உணவின்றி தூங்கச் செல்கின்றனர். 60 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே.( அமெரிக்கா மக்கள் எண்ணிக்கை 31 கோடி.)
மூன்று அமெரிக்க மக்கள் தொகை இந்தியாவில் வறுமையில் அல்லாடுகிறது. இதில் விவசாயிகளும் அடக்கம். தனி நபர் வருவாய் கூடினால் ஒழிய வாங்கும் திறன் கூடப் போவதில்லை. அன்றாடம் விவசாயிகளின் தற்கொலை பற்றி சிறிது சிந்தித்தால் நன்று. அவன் ஏன் தற்கொலை செய்து கொள்கிறான். ஈவு இரக்கமற்ற வணிகர்களும் அரசமைப்புமே காரணம். ஏதோ இந்திய மக்கள் அமெரிக்க பொருள் அந்நிய நாட்டு பொருள் வாங்குவதற்காக 121 கோடி மக்களும் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டிருக்கவில்லை. அன்றாடம் வயிறு நிரம்பினால் போதும். அயல் நாட்டுப் பொருளை வாங்கும் வசதி படைத்தவர்கள் இந்திய திரு நாட்டில் சில கோடிகளே. ஆனால் மீதி கோடி மக்கள் வாழ்வு பெற வேண்டுமெனில் உலக வணிகம் இன்றியமையாதது.

விவேகானந்தரை நினைவு கூர்வதில் தவறில்லை. சிக்கனம் எல்லா நாட்டு மக்களாலும் கடை பிடிக்கப் படுகிறது. முன்னேறிய நாட்டு மக்கள் வாழ்கை முறையைப் பார்த்து அவர்கள் ஊதாரித்தனமாக செலவு செய்கிறார்கள் என்று எண்ணுவது தவறு. நம் நாட்டு மக்களால் அடிப்படை தேவையை கூட நிறைவேற்ற முடியவில்லை. கழிவறை இல்லாத மக்கள் 66 கோடி. இரண்டு அமெரிக்கா மக்கள் எண்ணிக்கை திறந்தவெளி கழிப்பிடம் மனித மலத்தை மனிதனே அள்ளும் நிலை விவேகானந்தர் என்ன சொல்லுவாரோ? மக்களின் ஈட்டும் திறன் அதிகரித்தால் ஒழிய வேறு வழி இல்லை. உலக வணிகம் ஒன்றே இவர்களை மேம்படுத்தும். வணிகர்களின் கூக்குரலுக்கும் அலறலுக்கும் செவி சாய்த்தால் இந்தியா பெரும் சரிவை எதிர்கொள்ள வேண்டி வரும். உள் நாட்டிலேயே பாதுகாப்பற்ற நிலை உருவாகும். வணிகர்களும் பெரும் அளவில் பாதிக்கப் படுவார்கள். தானும் வாழ்ந்து பிறரையும் வாழவைக்கும் மனப் பாங்கு வணிகர்களிடேயே இனியாவது முளைக்க வேண்டும்.

இந்தியப் பண்பாடு பற்றி அதிகம் விவாதிக்க வேண்டாம். தீண்டாமை, ஜாதிக் கொடுமை சக மனிதனை மதிக்காத நிலை, அடித் தட்டு மக்களுக்கு கல்வி கொடுக்க தயங்குதல் -- பட்டியல் நீளும். ஆங்கிலேயன் வந்ததினால் உடன்கட்டை ஏறுதல், தேவதாசி சட்டம் போன்ற மூடத் தனங்கள் ஒழிக்கப் பட்டன. ஆங்கிலம் படித்ததினால் நம் இளைஞர்கள் உலகம் முழுவதும் பரவி தங்கள் வாழ்கையை மேம்படுத்தி உள்ளனர். நம் நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாததினால் தானே அயல் நாட்டில் தஞ்சம். இதுவும் உலக மயமாக்கலின் ஒரு பகுதியே.

கொலம்பஸ் இந்தியாவை தேடி வந்தாந்-. முயற்சி--. அமெரிக்காவைக் கண்டு பிடித்தான். இந்தியன் முயன்று அமெரிக்கா கண்டு பிடித்திருக்கலாமே? இந்தியர்கள் இல்லை என்றால் அமெரிக்கா நாட்டைக் கண்டு பிடித்திருக்க முடியாது, ஆதலால் அமெரிக்காவை எங்களிடம் கொடுத்து விடுங்கள் என்று கேட்போம்.

பரங்கியர்கள் கொள்ளை அடித்தார்கள்.உண்மை. ஊசி விற்க வந்த பரங்கியர்கள் நம் நாட்டில் நிலவிய ஊசிப் போன எண்ணங்களையும் மாற்றிவிட்டு தான் சென்றுள்ளனர். காட்டு மிராண்டியாக இருந்தவர்களை மனிதர்களாக்கியதும் அவனே. எடுத்ததை விட கொடுத்ததே அதிகம். இந்தியா என்ற ஒரு நாட்டை உருவாக்கினான். கல்வி அளித்தான். ஒரு அரசாங்கம் எவ்வாறு நடை பெற வேண்டுமென்ற பயிற்சி அளித்தான். மருத்துவ வசதி கொண்டு வந்தான். ஆங்கிலம் என்ற உலக மொழியை அளித்தான். இன்னும் விரிவடையும்.

நான்கு அம்சங்கள்.

இந்தியர்களில் பெரும்பாலோர் தொழில்நுட்ப கூலிகளாகவே உள்ளனர். புதிய கண்டு பிடிப்புகளுக்கு சொந்தக் காரர்கள் நாம் அல்ல. சில கண்டு பிடிப்புகளுக்கு துணை புரிவோர்களாக நம் மக்கள் இருப்பார்கள். உருப்போடும் நம் கல்வி முறையினால் புது கண்டு பிடிப்புகளோ தொழில் நுட்பமோ வளரவில்லை. எல்லாம் இறக்குமதி தான். நம் கல்வி முறையினால் நோபல் பரிசு பெறுபவரைக் கூட உருவாக்க முடியவில்லை. நம் மாணவர்கள் தங்கள் அறிவை வளர்க்க வேண்டுமெனில் அயல் நாடு சென்று அங்குள்ள பட்ட படிப்பு படித்தால் மட்டுமே அறிவை மேம்படுத்த முடியும்.

உற்பத்தி பெருகினால் விலை குறையும். இது பொருளாதாரம். பெருகின உற்பத்தியை கெட்டுப் போகாமல் அதற்க்கான மாற்று சந்தைகளுக்கு அனுப்பினால் விலை சரியாது. தற்போது உற்பத்தி பெருகினாலும் குறைந்தாலும் விவசாயிகளுக்கு உரிய பலன் இல்லை. உலக வணிகத்தினால் நம் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும். ஒப்பந்த விவசாயம் மூலமாக விவசாயிகளுக்கு நியாமான லாபம் கிடைக்க வழி வகுக்கும். விவசாயிகளுக்கு விவசாயத்தில் உற்சாகம் பிறக்கும். தற்போதைய கொள்ளை அடிக்கும் வணிகம் நிச்சயம் பாதிக்கப் படும். நம் வணிகர்களும் தங்கள் குறுகிய மனப் பாங்கை ஒழித்து நியாமான வணிகத்தில் ஈடு பட வேண்டும்.

நம் சகோதர்கள் அன்று கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அடிமையாக -- திறமையாக அல்ல--வேலை செய்தனர். சீனர்கள் வந்திருந்தால் சீன மொழிக் கற்று அவனுக்கும் அடிமையாக வேலை செய்திருப்பார்கள். நாட்டுக்கு சுதந்திரம் வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களாக இருந்தால் போராடியிருக்க வேண்டாமா? அவன் விசிறி எறியும் காசுக்காக அலைந்திருக்க வேண்டாம். நாடு இன்னும் சீக்கிரமாகவே விடுதலை அடைந்திருக்கும்.

தரமான பொருள் என்றும் நிலைத்திருக்கும். அது இட்லி போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். தரத்திற்கு என்றும் அழிவே இல்லை.

ஆங்கிலம் இன்றைய கட்டாய தேவை. இந்திய மொழிகளில் மட்டுமே கற்று இளைஞர்கள் மேம்பட இயலாத நிலை. அறிவியல் இந்திய மொழிகளில் இன்னும் கற்றுக் கொள்ளும் அளவுக்கு வளரவில்லை.இன்றைய இளைஞர்கள் ஆங்கிலம் கற்பது மிகத் தேவை.

படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை. படிப்பு பிழைப்புக்கு ஒரு வழி. அதில் தன அறிவையும் பயன் படுத்தினால் நன்று. படித்தவர்கள் எல்லாம் பண்பாடு உடையவர்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது. ஏமாற்றுபவர்களில் பெரும்பாலோர் படித்தவர்களே.
இன்றைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டுமெனில் அந்நிய முதலீடு கட்டாயத் தேவை. இன்றைய இளைஞர்களுக்கு வாழ வழி வகுக்கவில்லை எனில் நம் நாடு சிதறுண்டு போகும் யாருக்கும் வாழ்வு இல்லை. பழங்கதைகள் பழம்பெருமைகள் யாரையும் காப்பாற்றாது.

இந்திய நாட்டைக் காப்பாற்றுவது ஐ டீயோ , பீ பீ ஒ அல்லது பெருந் தொழிற் சாலைகளோ அல்ல. கண்ணுக்குத் தென்படாமல், தன் உடலோடு உயிரை இணைத்துக் கொண்டிருக்க பாடு படும் விவசாயிகளே. அவர்களின் நலம் மேம்பட உலக வணிகம் தேவை. இந்திய மக்கள் எண்ணிக்கையில் 65 விழுக்காடு இன்னும் விவசாயத்தையும் அதனைச் சார்ந்த தொழிலையே நம்பி உள்ளனர். ஏன் வணிகர்களும் அவர்களை நம்பியே உள்ளனர். ஏமாறும் விவசாயிகள் தங்கள் கையை விட்டு போய் விடக் கூடாதே என்று வணிகர்கள் அச்சம் கொள்ளுகின்றனர். மனம் மாற வேண்டியது, திறனை மேம்படுத்த வேண்டியது வணிகர்களே. இந்த நிலை நீடித்தால் விவசாயிகளும் ஏழை மக்களும் ஒரு விடுதலைப் போராட்டத்துக்கு தயாராகும் நிலை ஏற்படும்.மிச்சம் என்று சொல்லுவதற்கு இங்கு ஒன்றும் இருக்காது.
Ravi
தயவுசேது ஒன்ரை புரிந்துகொல்லுன்கல், 130 கோடி இந்தியன் புதிதாக கன்டுபிடிட்தது என்ன? ஒரு குன்டூசி கூட புதியதாக சொந்த சிந்தனைத் திரனினால் கன்டுபிடிக்க முடியவில்லை. நான்கல் எல்லோரும் மெட்கட்தேய நடைமுரைகு பலகிவிட்டோம். அமெரிக்கனை குரை கூருவதை நிருத்திவிட்டு சுயமாக யோசிப்போம். நாலந்தம் நாம் பாவிக்கும் இன்டியாவுக்கே உரிய ஒரு பொருலைத்தானும் கூரமுடியுமா ? . நாஙல் எல்லாவட்டயும் கொப்பி செஇதெ பலகிவிட்டோம். குரை கூரக்கூட அமெரிக்கன் தான் வென்டும்.
raja
நாய்க‌ளாக‌த்தான் ந‌ம் ப‌டித்த‌ இன்றைய‌ இளைஞ‌ர்க‌ள் இருக்கிறோம்-- That is Macaulay Education system.
aruna
The new technologies such as telecom,internet,etc,along with the fall of Soviet and communist regimes,clears the way for globalization, a concept to control and exploit the resources of third world,by the western,Ariyan,Jewish races headed by U.S.Imperialism.The Indian ruling class, dominated by a branch of Ariyan race,happily joined with the above said global forces, to exploit the nationalities and their resources. Globalization is controlled , not by rules of economics, by pure military power.We now see it in negating the law of sovereignty by the imperialists in Irag, Libiya , Siriya ,etc and the rights of nationalities by the agents of imperialists in the genocide of Eeelam Tamils.
senthil
அதெல்லாம் சரிங்க.. வர்லாற்றை இப்படி அறை குறையாக சொல்லிவிட்டு வெறும் குறை பட்டுக்கிறதில என்ன பிரயோஜனம்?

பிரிட்டிஷ்காரன் வருவதற்கு முன்னாடி, தனிச்சொத்துரிமை கிடையாது.. கிராம சுயராஜ்யம் இருந்தது.. ஒரு கிராமத்தில் என்ன ரோடு பொடனும், எங்க மரம் நடனும், தண்ணீர் சேமிக்க எங்க குளம் வெட்டனும், ஆற்றை தூர் வாறுவது, பஞ்ச காலத்துக்காக உணவு சேமிப்பது பொன்ற அனைத்தும் கிராமஙளஎ செய்து கொண்டன.. யாருக்கும் தனிப்பட்ட சொத்து என்பது கிடையாது.. வெள்ளாளனுக்கு நிலம் கையில் இருந்தது - அவன் விவசாயம் செய்யும் வரையில்தான்.. இல்லையென்றால் கிராம தலைவர், அதை விவசாயம் செய்யும் வேறொருவனுக்கு எடுத்து கொடுப்பார் (ஆனால் அதற்கு அவசியம் இருக்கவில்லை.. ஏனென்றால் ஒவ்வொருவரும் அவரவர் குலத்தொழிலை மட்டுமே பார்த்து வந்தனர்..)

மற்ற தொழில் செய்பவர்களுக்கு பெரிய அளவில் நிலம் தேவைபடவில்லை.. அதனால், கிராமத்தில் அவர்களுக்கென்று தனி இடம் கொடுத்து, அவர்கள் தொழில் செய்வதற்கு தேவையான உதவிகளை கிராம தலைவர் செய்து கொடுப்பார்..

இன்று தலித் என்று சொல்லப்படும் தோல் செய்பவர்களுக்கும் தனியாக இடம் ஒதுக்கி தரப்பட்டது..

இப்படி அந்தந்த ஜாதிகள் அவரவர் தொழிலை அமைதியாக செய்து வருகையில், வெள்ளைக்காரன் வந்து, அவனுடைய மேல்நாட்டு அடிமை முறையை திணித்தான்.. நிலம் என்பது, கிராம சமுதாயம் முழுவதற்கும் பொதுவானது என்பது போய், யார் யார் விவசாயம் செய்தார்களோ அவர்களுக்கு பட்டா போட்டு கொடுத்து, யாருக்கு வேணும்னாலும் வித்துக்கோ என்று கொண்டுவந்தான்.. அதை சுதந்திர இந்தியா என்று சொல்லிக் கொண்டு அப்படியே வைத்துக் கொண்டுள்ளார்கள்

இதைப்பற்றி பேசாமல், வெறும் அமெரிக்காவை மட்டும் சாடி பிரயோஜினமில்லை.. வெள்ளைக்கார கம்பெனிகள் இன்கு வாணிபம் செய்வதற்கு ஏதுவாக அவர்ன் உருவாக்கிய எல்லாத்தையும் (ரிசர்வ் வங்கி, அரசாங அமைப்பு, சட்டஙள் ) தூக்கி எறியாமல் அப்படியே வைத்துக் கொண்டு, நம்முடைய பாரம்பரிய நிர்வாக முறையை ஒழித்து கட்டிவிட்டார்கள் இந்த காங்கிரஸ் பரதேசிகள்..

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.