உக்ரைன் பிரச்சனையில் அய்ரோப்பிய நாடுகளை இரசியாவிற்கு எதிராகத் திருப்பி ஒரு பெரிய இராணுவ மோதலுக்கு அமெரிக்கா தயாராகி வந்தது. ஆனால் நேட்டோ (NATO) நாடுகள் முதலில் அது போன்று சில நடவடிக்கைகளை எடுத்தாலும் அமெரிக்கா விரும்பியது போன்றொரு இராணுவ மோதலை மறுத்துவிட்டன.
இப்படி ஒரு மோதல் ஏற்பட்டால் இரசியாவின் எதிர் இராணுவத் தாக்குதலை மட்டுமல்ல இதன் தொடர் விளைவாக ஏற்படும் பொருளதார தாக்கத்தையும் (எடுத்துக்காட்டாக அய்ரோப்பிய நாடுகளுக்கு பெட்ரோல் அளிக்கும் நாடுகளில் இரசியா முதலிடம் வகிக்கிறது. யுத்தம் வந்தால் இது உடனடியாக நிறுத்தப்படும்) கணக்கிட்டே அந்நாடுகள் அமெரிக்காவின் வற்புறுத்தலை ஏற்க மறுத்துவிட்டன.
இது உண்மையில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட ஒரு பின்னடைவே. இந்தப் பின்னடைவிலிருந்து மீள்வதற்கு முன்பாகவே அடுத்த ஓர் இடியை அமெரிக்கா சந்தித்துள்ளது.
2014 இல் இரசியா, சீனா, இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் (BRICS)) இணைந்து ஒரு வங்கியைத் தொடங்க முடிவு செய்தன. இதன் இப்போதையப் பெயரே புதிய வளர்ச்சி வங்கி (New Development Bank).
இரண்டாம் உலகப் போருக்குப்பின் அமெரிக்கத் தலைமையில் உருவாக்கப்பட்ட உலக வங்கி மற்றும் அதன் துணை நிறுவனமான சர்வதேச நிதி நிறுவனம் ((IMF) போன்றே இந்த புதிய வளர்ச்சி வங்கியின் துணைநிறுவனமாக ஆசிய உள்கட்டுமான முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank ) உருவாக்கப்பட்டது.
ஆனால் அமெரிக்கா தனது ஆளுமையில் உள்ள உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி நிறுவனத்திற்கு இந்தப் புதிய வங்கிப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பதால் எந்தவொரு அய்ரோப்பிய நாடும் இந்த வங்கியில் உறுப்பினராகச் சேரக் கூடாது என்று வலியுறுத்தியது. உண்மையில் மிரட்டலே விடுத்தது.
இந்த நிர்பந்தத்தால் முதலில் அய்ரோப்பிய நாடுகள் இதில் சேர்வதற்கு சற்றுத் தயங்கின. ஆனால் அமெரிக்கப் பொருளாதாரம் சரிந்து வருவது, உலக வங்கியின் வளர்ச்சித் தேக்கத்தில் இருப்பது, அத்துடன் உள்கட்டுமானம் தொடர்பாகத் தம்மிடமுள்ள தொழில் நுட்பங்களை விற்பதற்கு கிடைக்கும் வாய்ப்பு ஆகிய அனைத்தையும் கணக்கிட்டு முதலில் இங்கிலாந்து இந்த வங்கியில் சேர விண்ணப்பித்தது. இங்கிலாந்தைப்பின் தொடர்ந்து அடுத்தடுத்து ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா என்று இதுவரையிலும் 47 நாடுகள் விண்ணப்பித்துள்ளன.
இது பெரிய அதிர்ச்சி அலைகளை அமெரிக்க ஆளும் வட்டாரங்களில் ஏற்படுத்தியுள்ளது. ‘‘நம்ப முடியவில்லை. நிச்சயமாக எங்களால் நம்ப முடியவில்லை இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு முதன்முறையாக இப்போதுதான் இப்படி நேட்டோ நாடுகள் நடந்து கொள்ளுகின்றன” என்று இது குறித்து ஒரு பெண்டகன் (அமெரிக்காவின் இராணுவத் தலைமையகம்) அதிகாரி பதட்டத்தோடு குறிப்பிட்டது மிகச் சரியாகவே சூழலை விளக்கு கிறது.
அமெரிக்காவை அய்ரோப்பிய நாடுகள் முற்றிலுமாக கைகழுவவில்லைதான். ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இதுவரைக் கட்டிக்காத்த அமெரிக்கக் கூட்டாளிகளின் அய்க்கியத்தில் பலத்த விரிசல் ஏற்படத் துவங்கி யுள்ளது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.