kashmir victim 503பதறித்தான் போயிற்று, அந்தச் செய்தியைப் படித்தவர்களின் மனமெல்லாம்!

சுற்றுலாவிற்காகக் காஷ்மீர் சென்ற பயணிகள் பலர், பயங்கரவாதிகளால் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பதை எப்படிப் பொறுமையாக ஏற்றுக் கொள்வது? 370 ஆம் பிரிவை நீக்கி விட்டோம், இனிமேல் காஷ்மீர் அமைதிப் பூங்காவாக இருக்கும் என்றார்கள்! ஆனால் அது இப்போது அமைதிச் சுடுகாடாக அல்லவா மாறிக் கொண்டிருக்கிறது.

படுகொலைகளைத் தொடர்ந்து வந்த இன்னொரு செய்தி, மேலும் ஓர் அச்சத்தை நாடு முழுவதும் விதைத்தது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் இந்துக்கள் என்றும், ஒவ்வொருவரின் பெயரையும் தெரிந்து கொண்டே பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் அவர்களைச் சுட்டார்கள் என்றும் செய்தி பரவிற்று!

அது உண்மையாக இருக்க முடியாது என்பது மட்டும் எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிந்தது ! எந்த ஒரு பயங்கரவாதக் கும்பலும், சுடப்பட இருக்கிற ஒவ்வொருவரின் பெயரைக் கேட்டு, அவர் ஆதார் அட்டையை எல்லாம் சரி பார்த்து விட்டுப் பிறகு சுடுவார்கள் என்பது நாடகத்தில் கூட நடக்க முடியாத செய்தி!

கண்மூடித்தனமாக அவர்கள் சுட்டார்கள் என்பதுதான் உண்மை என்பதைப் பின்னால் வந்த செய்திகள் உறுதிப்படுத்தின. இறந்து போனவர்களில் பலர் இஸ்லாமியர்களாக இருந்தனர்!

எப்படி இருந்தாலும், அந்த பயங்கரவாதிகளின் அடையாளங்கள், அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன என்று கூறுகின்றனர். இருக்கலாம்! ஆனால், சிதறி ஓடிய இந்துக்கள் பலரை அங்கு காப்பாற்றியவர்களும் இஸ்லாமியர்கள்தாம்!

நடந்து போன பயங்கரம் மறுபடியும் நிகழாமல் பார்த்துக் கொள்வதே ஓர் அரசின் கடமையாக இருக்க முடியும். அதனைப் பயன்படுத்தி மீண்டும் ஒரு மதக் கலவரத்தை உருவாக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களும் பயங்கரவாதிகளே!

- சுப.வீரபாண்டியன்