periyar 29மதமானது இன்று உலகில் மனித சமூகத்தின் வாழ்வைத் துக்க மயமாக்கி ஜீவாராசிகளில் மனிதனுக்கென்று உள்ள பகுத்தறிவை அடிமைப்படுத்தி ஒற்றுமையைக் குலைத்து மனிதனுக்கு மனிதன் வெவ்வேறு இனம் என்று எண்ணும்படி செய்து வருகின்றது என்பதற்கு உதாரணம் தேவையில்லை என்றே கருதுகின்றோம்.

‘‘தேசிய சிங்கங்’’களான அலி சகோதரர்கள் ஒரு காலத்தில் ‘‘நாங்கள் முதலில் மகம்மதியர்கள் பிறகுதான் இந்தியர்கள்’’ அதாவது முதலாவது மதம். பிறகுதான் தேசம் என்றும், ‘‘உலகம் போற்றும் உத்தமர் மகாத்மா’’ காந்தி ‘‘நானே இந்து மதத்தின் உருவே! நான் மூச்சு விடுவதும், வாங்குவதும் இந்து மதத்திற்காகவே! நான் உண்பதும், உயிர் வாழ்வதும் இந்து மதத்திற்காகவே! மதத்தைக் காக்கவே நான் சுயராஜ்யம் கேட்கிறேன்! அதாவது இந்து மதம்தான் எனக்கு முதலும், கடைசியும்’’ என்றும் ‘‘பழைய காங்கிரஸ்வாதி, மாசற்ற தேசாபிமானி, ஒப்பற்ற தியாகி’’ என்று சொல்லப்பட்ட பண்டித மதன் மோகன்மாளவியா ‘‘எனது மதத்தையும், எனது ஜாதியையும் காப்பதே எனது முதல் வேலை’’ என்றும், அதாவது வருணாசிரமத்தைக் காக்கத்தான் நான் தேசியவாதி என்று சொல்லும்படி செய்துவிட்டது என்றால் மதத்தின் ஆதிக்கத்திற்கு வேறு என்ன உதாரணம் வேண்டும் என்று கேட்கிறோம்.

பெருத்த தேசாபிமானிகள், தேசத்துக்காகச் சகலத்தையும் தியாகம் செய்தவர்கள் என்று சொல்லும்படியான இவர்களே அவரவர்களின் மதத் தத்துவத்தை உள் எண்ணமாக வைத்து அவற்றின் கொள்கைகளைக் காப்பதற்காகவே அவர்களது தேசாபிமானமும், உயிர் வாழ்வும் இருந்து வருகிறது என்றால் மற்ற சாதாரணமான அதாவது மதத்தைத் தவிர, மற்றொன்றும் அறியாத பாமர மக்களின் யோக்கியதைப் பற்றி நாம் விளக்க வேண்டுமா என்று கேட்கிறோம்.

வட்டமேஜை மகாநாடு உடைந்து போனதும், அரசியல் சீர்திருத்தத்தில் இந்திய மக்கள் ஒன்றுபடாமல் போனதும், இந்து முஸ்லீம்கள் ஒருவரை ஒருவர் நம்பாமல் அரசியலில் தனித் தொகுதி வேண்டுவதற்கும், காங்கிரசும், முஸ்லீம் லீக்கும் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருப்பதற்கும், தீண்டப்படாத மக்கள் தனித் தொகுதி கேட்பதற்கும், கூட்டுத் தொகுதியில் தனிப் பிரதிநிதித்துவம் ஒதுக்கப்பட வேண்டும் என்று கேட்பதற்கும் மக்களை மக்கள் தீண்டப்படாதவராய், கீழ்மேல் ஜாதியராய்க் கருதப்பட்டு வருவதற்கும், மதமே காரணமாய் இருந்து வருகின்றது என்பதையும் எவராவது மறுக்க முடியுமா என்று கேட்கிறோம்.

மற்றும் மனித சமூக வாழ்வுக்கு ஏற்ற சீர்திருத்தங்கள், முன்னேற்றங்கள் என்பவைகளில் பெரும்பான்மையான மக்களால் அவசியம் என்றும், அறிவுக்கு ஏற்றது என்றும் கருதப்படும் அநேக விஷயங்களைப் பற்றி சட்டங்கள் செய்யவோ, சட்டங்கள் செய்தாலும் அமலுக்குக் கொண்டு வரவோ தடையாய் இருந்து வருவதற்கு மதங்களே காரணமாக சொல்லப்படுகின்றதா இல்லையா என்று கேட்கிறோம். ஆகவே மனித வாழ்க்கைக்கு மதங்கள் இதைவிட வேறு என்ன கொடுமைகள் செய்யவேண்டும் என்பது நமக்கு விளங்கவில்லை.

(பகுத்தறிவு வார இதழ் - 09.09.1934)

Pin It