Popular front of India ஒரு பயங்கரவாத இயக்கம் என்று தமிழ்நாடு ஆளுநர் ஒரு பொது நிகழ்ச்சியில் பேசும்போது குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் எப்போது இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் ஆனார் என்று தெரியவில்லை. அப்படியே ஆகிவிட்டாலும் இப்படி ஓர் இயக்கத்தை பற்றிக் கருத்துத் தெரிவிப்பதற்குப் பொதுக்கூட்டம் அல்லது பொது நிகழ்வுதான் உரிய இடமா என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

 rn ravi 2522006ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்றால் அதன்மீது இன்று வரையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை, தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் எத்தனை? பாஜக அரசு ஆட்சிக்கு வந்தே எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை காலம் ஒன்றிய அரசு என்ன செய்தது? இந்த அமைப்பு ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு எல்லாம் ஆட்களை அனுப்பி வைக்கிறது என்று ஆளுநர் குற்றம் சாட்டுகிறார். அதையெல்லாம் இந்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்ததா? இன்று வரையில் அந்த அமைப்பின் மீது அப்படி ஏதேனும் ஒரு குற்றச்சாட்டு நீதிமன்றத்துக்கு வந்து இருக்கிறதா?

ஓர் அமைப்பு பற்றி ஒரு அரசியல்வாதி பொது மேடையில் இப்படிப் பேசுவது கூட தவறானதாகும். ஆனால் பொறுப்பு மிக்க பதவியில் இருக்கும் ஆளுநர் எந்தச் சான்றையும் எடுத்துக் காட்டாமல், எந்த ஒரு நிகழ்வையும் குறிப்பிட்டுச் சொல்லாமல், பொத்தாம் பொதுவில் இந்த இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்று சொல்லுவது எப்படி நியாயமாகும்? இது ஒரு மோசமான முன்னுதாரணம் ஆகி விடாதா? எதிர்காலத்தில் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடிக்காத அமைப்புகளுக்குப் பயங்கரவாத அமைப்புகள் என்று பெயர் சூட்டத் தொடங்கினால், இது எங்கே போய் முடியும்? ஆளுநர் தான் ஒரு ஆர்எஸ்எஸ்காரர் என்பதை அடிக்கடி மெய்ப்பித்துக் கொண்டே இருக்கிறார். இஸ்லாமிய அமைப்புகள் கிறிஸ்தவ அமைப்புகள் எல்லாம் பயங்கரவாத அமைப்புகள் என்று ஒற்றை வரியில் சொல்லி விடுவார்கள் போலிருக்கிறது.

உண்மையான பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பக்கத்தில் நின்று கொண்டு ஆளுநர் மற்ற அமைப்புகளைப் பற்றி இப்படிப் பேசுகிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. திட்டமிட்டு இன்னொரு மத மோதலுக்கு வழிவகுப்பது போலவும் தெரிகிறது. தேவையற்ற சிக்கல்களை உருவாக்கிக் கொண்டே இருப்பதன் மூலம் தேவையான சிக்கல்கள் குறித்தும், தீர்வுகள் குறித்தும் பேசுவதற்கு இடமில்லாமல் போய்விடுகிறது.

இப்படி நடந்துகொள்வது ஓர் ஆளுநருக்கு அழகில்லை.

- சுப.வீரபாண்டியன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.