நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தெற்கில், கர்நாடகம் தவிர்த்த எல்லா மாநிலங்களிலும், பாஜகவிற்கும், மோடிக்கும் எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். வடக்கில், பஞ்சாப் தவிர்த்த எல்லா மாநிலங்களிலும், பாஜகவிற்கும், மோடிக்கும் ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளனர்.
"ஒரே நாடு, ஒரே பண்பாடு" என்பது திணிக்கப்படும் வெற்று முழக்கம் என்பதைத் தேர்தல் முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. வரலாறு, புவியியல், பண்பாடு என மூன்று அடிப்படைகளில், வடக்கும், தெற்கும் எப்போதும் பிரிந்தே நிற்கின்றன என்பது உண்மை. இது பிரிவினை வாதமன்று. கள எதார்த்தம்.
ஏன் தேர்தல் முடிவுகள் இவ்வாறு அமைந்தன?
வடக்கில் மக்கள் மோடியை ஆதரித்ததற்கு நியாயமான காரணங்கள் சில இருக்கின்றன என்றே தோன்றுகிறது. மோடிக்கு எதிராக ஓர் உறுதியான அணியோ, ஒரு பிரதமர் வேட்பாளரோ அங்கு இல்லாமல் போய்விட்டது. எதிர்க்கட்சிகள் எல்லாம் பிரிந்தே கிடந்தன. அது மட்டுமின்றி, 'தொங்கு பாராளுமன்றம்' வருமானால், தான் பிரதமர் ஆகிவிடலாம் என்று வடநாட்டுத் தலைவர்கள் பலரும் கருதினர். இந்த நிலை மக்களுக்குத் தெளிவாகவே தெரிந்தது.
எதிர்க்கட்சியினருக்கு வாக்களித்தால், அவர்களுக்குள் மோதல்தான் மிஞ்சும், நிலையான ஆட்சி ஏற்படாது என்ற எண்ணம் மக்களிடையே பதிந்து விட்டது. 1977 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் பல கட்சிகளின் கூட்டாட்சி ஏற்பட்டு அவை ஓரிரு ஆண்டுகளிலேயே கலைந்து போய்விட்டதை மக்கள் இன்னும் மறக்கவில்லை.
தமிழ்நாட்டில், திமுக தலைவர், மிகத் தெளிவாக, பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்று அறிவித்தார். அதனைக் காங்கிரஸ் கட்சி உட்பட யாரும் வழிமொழியவில்லை என்பதே ஒரு பலவீனமாக ஆகிவிட்டது. தனக்கு ஏதும் கிடைக்குமா என்று பார்க்காமல், நாட்டின் நன்மை கருதி ராகுலை நம் தலைவர் முன்மொழிந்தது போல, எல்லோரும் செய்திருந்தால், எதிர் அணி வலிமை பெற்றிருக்கும். ஆனால் அங்கு ஓவ்வொருவரும் பிரதமராக வேண்டும் என்று ஆசைப்பட்டு, இறுதியில் மோடியைப் பிரதமர் ஆக்கிவிட்டார்கள்.
பாஜக வடநாட்டில் பல மாநிலங்களில் நல்ல கூட்டணியையும் ஏற்படுத்திக் கொண்டது. அசாமில், கணபரிஷத்துடன். பீகாரில், ஐக்கிய ஜனதா தளத்துடன், மராத்தியத்தில் சிவசேனையுடன் என்று அவர்களின் கூட்டணி வலிமையாக இருந்தது. இந்தப்பக்கமோ, வடக்கில் எங்கும் சரியான கூட்டணி அமையவில்லை. எடுத்துக்காட்டாக, தில்லியில், காங்கிரசும், ஆம் ஆத்மியும் இணைந்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். கர்நாடகத்தில் காங்கிரசுக்கும், மதச் சார்பற்ற ஜனதா தளத்திற்கும் இடையிலான உறவு ஒவ்வொரு நாளும் சிதைந்து கொண்டே இருந்தது. இவை எல்லாவற்றையும் மக்கள் கவனித்துக் கொண்டுதானே இருப்பார்கள்.
கூட்டணியால் மட்டும்தான் வெற்றி தவறிப் போய்விட்டது என்று சொல்ல வரவில்லை. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் எதிர்க்கட்சிகள் பெற்ற வெற்றிக்கு வேறு காரணங்களும் உள்ளன.
தமிழகத்திலும், கேரளாவிலும் சித்தாந்த அடிப்படைகள் அழுத்தமாக உள்ளன. திராவிட இயக்கம் இங்கும், பொதுவுடைமைக் கட்சி அங்கும் சமூக நீதியையும், சமத்துவத்தையும் ஆழமாக விதைத்துள்ளன. மதச்ச்சார்பற்ற தன்மையும் இங்கு வேரூன்றியுள்ளது. அதனால்தான், மதவாத அரசியல் இங்கு தலைதூக்க முடியவில்லை. தமிழகம் என்பது திராவிட மண் என்பதை மக்கள் மறுபடியும் ஒருமுறை இப்போது மெய்ப்பித்ததுள்ளனர்.
இவை அனைத்துடனும், திமுக தலைவர் அவர்களின் கடும் உழைப்பு எண்ணி எண்ணி வியக்கத்தக்கதாக இருந்தது. இப்படி ஒரு மனிதனால் உழைக்க முடியுமா என்று எல்லோரையும் திகைக்க வைத்தது. அப்பாவுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்துள்ளார் என்றே தமிழகம் சொன்னது. அந்த ஓயாத உழைப்பு நம் வெற்றிக்கு ஒரு பெரிய காரணம். ஆம், அவர் வியர்வையில் விளைந்த வெற்றி இது!
ஒரு தலைவருக்குப் பின்னாலும், அவர் தோற்றுவித்த கட்சி நின்று நிலைப்பதுதான், அத்தலைவருக்குச் சாகாத பெருமையைத் தேடித்தரும். அதனை நம் தளபதி இப்போது தேடித்தந்துள்ளார். பெரியார், பெரியாருக்குப் பின்னால் அண்ணா, அண்ணாவுக்குப் பின்னால் கலைஞர், கலைஞருக்குப் பின்னால் நம் தலைவர் தளபதி என்று வாழையடி வாழையென வளரும் திராவிட இயக்கத்தை மக்கள் வாழ்த்தித் தந்துள்ள பரிசு இது.
இப்போது கிடைத்திருப்பது முதல் வெற்றிதான். இன்னும் பல வெற்றிகளை ஈட்ட, இப்போதிருந்தே நாம் உழைத்திட வேண்டும் - நம் தலைவரைப் போல! நம் இலக்கு ஆட்சி மட்டுமன்று, ஆட்சியின் மூலம், நாம் சாதிக்க வேண்டிய சமூக நீதியும், சமத்துவமும்தான் நம் இலட்சியங்கள்!!
நன்றி: முரசொலி