திமு கழகத்தின் தலைவர், திராவிட நாயகனின் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகளும் எதிரிகளை நிலைகுலையச் செய்துள்ளன. அதனால் புதிது புதிதாய்ச் சில சூழ்ச்சிகள் இங்கே புறப்படுகின்றன!

மார்ச் 1 சென்னையில் நடைபெற்ற தன் பிறந்த நாள் விழாவில், இறுதியாகப் பேசிய நம் கழகத்தின் தலைவர், மூன்று செய்திகளை அழுத்தமாகப் பதிவு செய்தார். அது இந்தியாவின் எதிர்காலத்திற்குத் திசை காட்டும் விடிவிளக்காய் அமைந்தது! அந்த மேடையில் உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவும், பீகார் மாநிலத்தின் இன்றைய துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவும் இருந்தனர்.

இன்றைய ஆளும் கட்சியான பாஜகவிற்கு எதிராக இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓர் அணியில் இணைய வேண்டும் என்றும், காங்கிரசை விட்டுவிட்டு அந்தக் கூட்டணி அமையக்கூடாது என்றும், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி என்பது சந்தர்ப்பவாதம் ஆகிவிடும் என்றும் மூன்று திசைகாட்டிகளை அன்று நம் முதலமைச்சர் மேடையில் பதிவு செய்தார்! மூன்றும் முத்தான கருத்துகள்!migrant laborsதிராவிட நாயகனின் தெளிவான இந்தப் பார்வை, எங்கே எதிர்காலத்தில் நம் கட்சியையும், ஆட்சியையும் நிலைகுலையச் செய்து விடுமோ என்ற அச்சம் காரணமாகவோ என்னவோ, இப்போது ஒரு வதந்தியைத் திட்டமிட்டு இந்தியா முழுவதும் பரப்பி உள்ளனர். தமிழ்நாட்டிற்கு வட நாட்டிலிருந்து வேலைக்கு வந்த தொழிலாளர்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தூக்கிலும் ஏற்றப்பட்டு இருக்கிறார்கள் என்பதே அந்த வதந்தி!

தமிழ்நாட்டில் எந்த ஊரில், எந்த நாளில் அப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றது என்னும் எந்தக் குறிப்பும், அதற்கான எந்தச் சான்றும் இல்லாமல் இப்படி ஒரு வதந்தி பரப்பப்படுகிறது! இதனால் வடநாட்டில் உள்ள தமிழர்களுக்கு ஆபத்து ஏற்பட வேண்டும் என்பதும், இந்தியாவெங்கும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒரு நாளும் ஒருங்கிணைந்து விடக்கூடாது என்பதும் இதன் உள்நோக்கமாக இருக்கக்கூடும்!

இது முற்றிலுமாக ஒரு பொய்ச் செய்தி என்றும், திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி என்றும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், பீகார் மாநில முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்களும் உறுதி செய்துள்ளதால், நல்வாய்ப்பாக, பல கலவரங்களும் உயிரிழப்புகளும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன!

வடநாட்டில் இருந்து இங்கு வந்து பொருளாதார ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயற்சி செய்யும் குஜராத் சேட்டுகள், ராஜஸ்தான் மார்வாரிகளைத்தான் நாம் எதிர்த்திருக்கிறோமே தவிர, வடநாட்டு மக்களை, அதுவும் கூலித் தொழிலாளர்களை ஒரு நாளும் நாம் வன்முறை கொண்டு தாக்கியது இல்லை. மார்வாரிகளை எதிர்த்துத் தந்தை பெரியார் அவர்கள் நடத்திய போராட்டம் கூட, சற்றும் வன்முறை அற்றது என்பதை நாம் அறிவோம்.

அண்மையில் வடநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், வாய் பேச முடியாத தன் குழந்தையைத் தமிழ்நாட்டிற்குத் தூக்கி வந்ததாகவும், தமிழ்நாட்டில் சிகிச்சை பெற்று இன்று மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தமிழ்நாட்டிற்கு நன்றி என்றும் கூறியிருக்கிறார்! அதைப் போலவே தன்னை நரபலி கொடுக்க முயற்சித்த, ஆர் எஸ் எஸ் அமைப்பைச் சேர்ந்த தன் வளர்ப்புத் தாயிடமிருந்து தான் தப்பி வந்துள்ளதாகவும், தமிழ்நாடுதான் பெண்களுக்குப் பாதுகாப்பான இடமாக இருக்கிறது என்றும், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் கூறியுள்ளதும் நாம் அறிந்த செய்திகள்!

எதிரிகள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்பிவிட்டு, பாரத் மாதா கி ஜே என்று சொல்லுவதால், நாட்டிற்கு ஆபத்தும் அவமானமும்தான் வந்து சேருமே தவிர, ஒருபோதும் ஒற்றுமையும் வெற்றியும் வராது!

இன்னொன்றையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் கடந்து வந்த பாதை கரடு முரடானது. காடுகளையே கடந்து வந்த வரலாறு, எங்கள் திராவிட இயக்கத்தின் வரலாறு! நெருஞ்சி முள்களைப் பாதையில் பரப்பி, எங்களின் நீண்ட பயணத்தை இன்றும் என்றும் உங்களால் தடுத்துவிட முடியாது!

- சுப.வீரபாண்டியன்

Pin It