மக்கள் தங்கள் வாக்குகளால் நேரடியாகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்து, முதலமைச்சராகப் பொறுப்பேற்றவர், முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.

ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசால் நியமனம் செய்யப்படுபவரே அன்றி, மக்களுக்கும் அவருக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.

முதல்வர் அரசின் அதிகாரத்திற்கு உரியவர். ஆளுநரின் வேலை கையெழுத்திட்டு ஒப்புதல் அளிப்பது, அவ்வளவுதான்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் விவாதித்து, அமைச்சரவையின் ஒப்புதலுடன் ஆளுநருக்கு அனுப்பப்படும் சட்ட முன்வடிவுக்குக் கையெழுத்திட்டு, ஒப்புதல் தருவது மட்டுமே ஆளுநரின் வேலை.

மாறாகக் கிடப்பில் போட்டு நெடிது காலம் தாழ்த்துவதோ, மறுப்பதோ அல்லது குடியரசுத் தலைவருக்குச் சட்ட முன்வடிவுகளை அனுப்புவதோ ஆளுநரின் வேலை இல்லை என்று பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட .....

# தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்ட முன்வடிவு, 2022,

# தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தச் ) சட்ட முன்வடிவு, 1983,

# தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமைச் சட்ட முன்வடிவு, 2022,

# தமிழ்நாடு பல்கலைக் கழகச் சட்ட முன்வடிவு, 2022 என்று 21 சட்ட முன்வடிவுகள் ஆளுநர் அலுவலகத்தில், ஆளுநர் கையெழுத்திடாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கின்றன.

02-05-2022 அன்று கிண்டி ஆளுநர் மளிகைக்குச் சென்று, ஆளுநர் என்.ஆர்.ரவியைச் சந்தித்தார் முதல்வர்.

அப்போது அரசியல் சாசனத்தின் உணர்வையும், தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலை நிறுத்தும் வகையில், ஆளுநர் மாளிகையில் நிலுவையில் இருக்கும் சட்ட முன்வடிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டுமென ஆளுநரிடம், முதல்வர் வேண்டிக் கொண்டார் என்று அரசுத் தரப்பு அறிக்கை தெரிவிக்கிறது.

தொடர்ந்து மக்களுக்கான நலத்திட்டப் பணிகளை முன்னெடுத்து வரும் முதல்வருக்கு, ஆளுநரும் துணை நிற்பது அவரின் கடமை.

எனவே முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, ஆளுநர் தன்னிடம் இருக்கும் 21 சட்ட முன்வடிவுகளுக்கும் விரைவில் ஒப்புதல் தருவார் என்று நம்புகிறோம்.

Pin It