உ.வே.சாமிநாதரின் கையெழுத்துப் படிகள் அச்சிடுவதற்காக ஆனந்த போதினி அச்சகத்திற்கு வந்தன.

அந்தக் கையெழுத்துகளைப் படித்துப் பார்த்த அச்சகப் பொறுப்பாளர் ஜீவா, அதில் சில பிழைகளைக் கண்டு, அவைகளைத் திருத்தி அச்சுக்கு அனுப்பிவிட்டார்.

narana duraikannanசற்றுத் தாமதமாக அப்பிழையை உணர்ந்த உ.வே.சா, தன் உதவியாளர் இராஜகோபால ஐயங்காரை அனுப்பித் திருத்தி வரச்சொன்னார். இராஜகோபால் அச்சகம் வந்தபோது, படிகள் அச்சாகி இருந்தன - குறிப்பிட்ட பிழைகள் திருத்தத்துடன்.

ஜீவாவின் தமிழறிவை வியந்த இராஜகோபால், ஜீவாவை உ.வே.சாவிடம் தமிழ் கற்க ஏற்பாடு செய்வதாகச் சொன்னார்.

ஆனால் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் என்ற சூத்திரனிடம் தமிழ் பயின்ற உ.வே.சாமிநாத ஐயர், ‘‘நான் ஒரு சூத்திரனுக்குத் தமிழ் கற்றுத்தரமாட்டேன்’’ என்று ஜீவாவைச் சொல்லியிருக்கிறார்.

அந்த ஜீவாதான் நாரண துரைக்கண்ணன். ஜீவா, மைவண்ணன், வேள், துலாம், தராசு, திருமயிலைக் கவிராயர், துரை, லியோ இவைகலெல்லாம் அவரின் புனை பெயர்கள்.

அவரின் இயற்பெயர் நடராசன். அவரின் புகழ்பெற்ற நாவலான உயிரோவியத்தின் நாயகன் நடராசன், தலைவி கற்பகம். இவ்விருவரும் காதலிக்கிறார்கள். அதை அவர்கள் இறுதிவரை பகிர்ந்து கொள்ளவில்லை கற்பகத்திற்கு வேறு திருமணம் நடைபெறுகிறது. இதை இலக்கிய நயத்துடன் உயிரோட்டமாகச் சொல்வதுதான் ‘உயிரோவியம்‘.

இந்நாவல் நாடகமாகவும் ஆனது. இந்நாடகம் பிரான்ஸ் நாட்டில் கலை இலக்கிய இதழால் சிறந்த நாடகமாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

கோணாட்சி வீழ்ச்சி - நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன் - தாசிராணி - தீண்டாதார் யார்? - காதலனா-? காமுகனா? - புதுமைப்பெண் - நடுத்தெரு நாராயணன் - தரங்கினி - அரசியல் வேலைக்காரி - முத்தம்டா - பார்வதி - மேனகா - அழகாம்பிகை - தியாகத்தழும்பு - சீமான் சுயநலம் - சபலம் என நிறைய நூல்கள் எழுதியிருக்கிறார்.

ஏறத்தாழ இவரின் 150 நூல்கள் அரசுடமையாகி உள்ளன.

இவரின் இளம் வயதில் பரலி சு.நெல்லையப்பர் பரிந்துரையில் ‘லோகோபகாரி’ வார இதழின் ஆசிரியரானார். 1932ஆம் ஆண்டு ‘ஆனந்த போதினி’ இதழின் ஆசிரியர் ஆனார். இந்த இதழில்தான் இவரின் முதல் கதையான அழகாம்பிகை வெளியானது.

1934ஆம் ஆண்டில் ‘பிரசண்ட விகடன்’ இதழ் ஆசிரியரானார்.

தொ.மு.சி.இரகுநாதன், ஜீவானந்தம், பாரதிதாசனார், கம்பதாசன், வாணிதாசன், சுரதா, கா.மு.செரிப், தமிழொளி, கண்ணதாசன், அகிலன், தீபம் பார்த்தசாரதி, கு.அழகிரிசாமி, வல்லிகண்ணன் ஆகியோரின் படைப்புகள் இவரின் இதழ்களில் இடம்பெற்றுள்ளன.

ஜீவா பதிப்பகம் என்ற இவரின் சொந்த பதிப்பில் ஏற்பட்ட இழப்பின் காரணமாக, அக்கடனை அடைக்கத் தன் சொந்த வீட்டை விற்றிருக்கிறார்.

செந்தமிழ்ச்செல்வி, திராவிடன், தமிழ்நாடு, சிந்தாமணி, தேசபந்து போன்ற இதழ்களில் இவரின் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர், சென்னை கம்பர் கழகச் செயலாளர், முற்போக்கு சங்க எழுத்தாளர் சங்கத் தலைவர், தென்னிந்தியப் பத்திரிக்கையாளர் பெருமன்றத் தலைவர், தமிழ்க் கவிஞர் மன்றத் தலைவர் - ஆகிய பொறுப்புகளை திறம்பட வகித்தவர் நாரண துரைக்கண்ணன்.

தந்தை பெரியார் ரஷ்யாவுக்குச் சென்று திரும்பியிருந்த நேரம். இவருக்குப் பத்திரிக்கையாளர் சார்பாக பெருமன்றத்தின் மூலம் வரவேற்பு அளிக்க வேண்டும் என்றார் துரைக்கண்ணன்.

பெருமன்றத்தில் எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் அந்த எதிர்ப்பையும் மீறி பெரியாருக்குச் சென்னை தியாகராயர் நினைவு மன்றத்தில் சிறந்த வரவேற்பு விழாவை நடத்தினார் இவர்.

1946ஆம் ஆண்டு தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இரண்டாவது மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் தலைவர் அறிஞர் அண்ணா. இம்மாநாட்டில்தான் அண்ணாவை ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என்று பாராட்டினார் கல்கி கிருஷ்ணமூர்த்தி. இம்மாநாட்டை நடத்தியவர் நாரண துரைக்கண்ணன்.

தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட இவர், 1948ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு மாநாட்டுக் குழுத் தலைவராகச் செயல்பட்டுள்ளார்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசனார் குறித்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

பாவேந்தர் பாரதிதாசனாரின் திருக்குறள் உரையைக் கையெழுத்துப் படியிலேயே படித்த இவர், உரையின் சிறப்பு- குறித்து எழுதிய ஆய்வுக்கட்டுரை ‘முரசொலி’ இதழில் வெளியாகியிருக்கிறது.

1939 - 45 காலகட்டங்களில் இந்திய விடுதலைக்கு ஆதரவாகவும், ஆங்கிலேய அரசுக்கு எதிராகவும் இவர் எழுதிய தலையங்கக் கட்டுரைகளால் ஆங்கிலேயர்களின் நெருக்கடிகளுக்கு ஆளானார். ஆனாலும் தொடர்ந்து எழுதினார் நெருக்கடிகளுக்கு நடுவே.

சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் மரணத்தைத் தொடர்ந்து அவரின் குடும்பம் வறுமையில் ஆழ்ந்தது.

அக்குடும்பத்திற்கு உதவ முன்வந்த நாரண துரைக்கண்ணன் நிதி திரட்டினார்.

அந்நிதியில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் புதுமைப்பித்தனின் மனைவி கமலா அம்மையாரிடம் கொடுத்து விட்டு, எஞ்சிய தொகையில் இராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு வீடு வாங்கி அதையும் கமலா அம்மையாரிடமே ஒப்படைத்து விட்டார்.

சென்னை மயிலாப்பூரில் 1906ஆம் ஆண்டு ஆகஸ்டு 24ஆம் நாள் க.வே.நாராயணசாமி - அலமேலு அம்மையாரின் மகனாகப் பிறந்தார் நாரண துரைக்கண்ணன்.

தொடக்கத்தில் திண்ணைப்பள்ளியில் படித்தார். பின்னர் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.

சென்னை அடிசன் நிறுவனத்திலும் அச்சகங்களிலும் தொடக்கத்தில் இவர் பணியாற்றினார்.

திருவல்லிக்கேணி கெல்லட் உயர்நிலைப்பள்ளியின் ஆசிரியர் மைக்கேலிடம் ஆங்கிலம் கற்றார்.

மறைமலை அடிகளாரிடம் முறையாகத் தமிழ் பயின்றார். சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் திரு.வி.கல்யாணசுந்தரனார், மயிலை சீனிவேங்கட சாமி, கா.நமச்சிவாயம், பா.வே.மாணிக்கம் ஆகியோரிடம் சிறந்த நட்பு கொண்டிருந்த இவர் 1996ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 22ஆம் நாள் தன் 90ஆம் அகவையில் மரணத்தைத் தழுவினார்.  

Pin It