அம்பேத்கர் சிலைக்குக் காவி உடை அணிவிக்க மாட்டேன், விபூதி, குங்குமம் பூசமாட்டேன் என சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தார், இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத்.
டிசம்பர் 6ஆம் நாள் மாமேதை அம்பேத்கரின் நினைவு நாள். அந்நாளில் அம்பேத்கர் மணிமண்டபத்திற்குள் சென்று மாலையிடப் போவதாகவும், அப்போது தனக்குக் காவல்துறைப் பாதுகாப்பு வேண்டுமெனவும் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்த போது, நீதிபதியிடம் மேற்கண்ட உறுதி மொழியை எழுத்து மூலம் கொடுத்துள்ளார் அவர்.
அம்பேத்கர் இந்து மதத்தை எதிர்த்தவர். இந்துவாகப் பிறந்தாலும், இந்துவாகச் சாக மாட்டேன் என்று பவுத்தத்திற்கு மாறியவர்.
அர்ஜுன் சம்பத் இந்து மக்கள் கட்சியின் தலைவர். இந்துத்துவாவைப் பேசி பிறரைப் புண்படுத்தி மத விரோதமாகச் செயல்படுபவர் அவர்.
அம்பேத்கரைக் கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளாத அவர், இந்துத்துவத்தை ஏற்றுக் கொள்ளாத அம்பேத்கர் மணிமண்டபம் செல்ல வேண்டிய அவசியம் என்ன?
அதே நேரம் அம்பேத்கருக்குக் காவிச்சட்டை போட்டும், நெற்றியில் திருநீறுப் பட்டையும், பொட்டும் வைத்து ஒரு படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார், அவரின் இந்து மக்கள் கட்சியின் பொறுப்பாளர் குருமூர்த்தி என்பவர், கும்பகோணத்தில். அவரைக் காவல் துறை கைது செய்திருக்கிறது. இது நீதிமன்றத்தில் கொடுத்த உறுதிமொழிக்கு முரணானது.
இதன் மூலம் அர்ஜுன் சம்பத்தின் எண்ணம் புரிகிறது. அம்பேத்கரை அவர் மதிக்கவும் இல்லை, மரியாதை செய்வது அவரின் நோக்கமும் இல்லை.
மதவேறுபாடுகளை விதைத்து, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் அவரின் உள்ளார்ந்த சிந்தனை, செயல்பாடுகள் கண்டனத்திற்கு உரியது.
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் இவர் போன்றோரிடம் எச்சரிக்கையாக இருப்போம்.