eps at lotusசென்ற தேர்தலில் எந்தக் கட்சி பாஜக வின் கூட்டணிக் கட்சியாக இருந்ததோ, அதே தெலுங்கு தேசம் கட்சி இப்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்குத் தேவையான பெரும்பான்மை ஆதரவு இருப்பதால், ஆட்சி கவிழ்ந்திட வாய்ப்பில்லை. இதற்குமுன் கொண்டுவரப்பட்ட மிகப் பெரும்பான்மையான நம்பிக்கையில்லாத் தீர்மானங்களின் நிலையும் இதுதான். ஆட்சியைக் கவிழ்க்க முடியாது என்று தெரிந்தும், இப்படியொரு தீர்மானத்தைக் கொண்டுவருவதும், அதனைப் பிற எதிர்க்கட்சிகள் ஆதரிப்பதும் ஏன்?

ஆட்சியைக் கவிழ்ப்பது மட்டுமே இதுபோன்ற தீர்மானங்களின் நோக்கம் இல்லை. அரசு பற்றிய விரிவான விமர்சனத்தை வெளிக்கொண்டு வந்து, அதற்கு அரசு விடை சொல்ல வேண்டிய கட்டாயத்தை நாடாளுமன்றத்தில் உருவாக்குவது முதல் நோக்கம். ஒவ்வொரு எதிர்க்கட்சியின் நிலைப்பாடும் என்ன என்பதை நாட்டிற்கு எடுத்துக்காட்டவும் இத்தீர்மானம் உதவும்.

தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில், இங்குள்ள அ.தி.மு.க. ஆட்சி, மத்திய அரசுக்குப் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் அஞ்சி நடுங்கும் ஆட்சி என்பதை நாம் அறிவோம். எனினும் சில நேரங்களில், அமைச்சர்கள் சிலர், வீரர்களைப் போலப் பேசுவதையும் பார்க்கிறோம். இப்போது வாக்கெடுப்பில் அவர்கள் நிலை என்ன என்பது தெளிவாகிவிடும்.

எனினும், முதலமைச்சரின் நேர்காணல், வாக்கெடுப்புக்கு முன்பே அதனைத் தெளிவாக்கிவிட்டது அது ஆந்திரா பிரச்சினையாம். தமிழ்நாட்டிற்குத் தொடர்பில்லையாம். இதுதான் தமிழக முதல்வரின் கருத்து. நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவு இல்லை என்பதை ஏறத்தாழ அவர் சொல்லிவிட்டார்.

நீட் தேர்வை எதிர்த்து இரண்டு தீர்மானங்கள் ஒருமனதாகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு தில்லிக்கு அனுப்பப்பட்டனவே, அவை குறித்து இன்றுவரையில் மத்திய அரசு வாய் திறந்ததா? என்ன ஆயிற்று என்று கேட்பதற்கு இந்தத் தமிழக அரசுக்குத் திராணி இருந்ததா? இவையெல்லாம் தமிழ்நாட்டுப் பிரச்சினை இல்லையா?

தமிழ்நாட்டில் பிரச்சினைகள் உள்ளன. தட்டிக் கேட்க ஓர் அரசுதான் இல்லை.

நாடாளுமன்றத்தில் திமுக விற்கு உறுப்பினர்கள் இல்லை. எனினும், தீர்மானத்திற்குத் தங்களின் தார்மீக ஆதரவு உண்டு என்று திமுக செயல்தலைவர் தளபதி கூறியுள்ளார். ஓர் உறுப்பினரை வைத்துள்ள பாமக என்ன செய்யப் போகிறது என்பது வாக்கெடுப்பில் தெரியும்.

மதவெறியை, வன்முறையை நெஞ்சு நிமிர்த்தி எதிர்க்கப் போகின்ற கட்சிகள் எவை, அவற்றின் முன்னால் அடிபணிந்து நிற்கப் போகின்ற கட்சிகள் எவை என்பது, வாக்கெடுப்பின் முடிவில் தெரிந்துவிடும்!

Pin It