திமுகவை எதிர்ப்பது, அதிமுகவை அழிப்பது என இரண்டு வழிகளில் தங்கள் வேலையைத் தமிழ்நாட்டில் முடுக்கிவிட்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி!

அதிமுகவை அழிப்பது என்னும் நோக்கில் அவர்கள் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 2016 டிசம்பர் 5ஆம் நாள் முன்னாள் முதலமைச்சர், அதிமுகவின் அன்றைய பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைந்தார். ஆறு ஆண்டுகள்தான் நிறைவடைந்து இருக்கின்றன. அதற்குள் கட்சி ஆறு துண்டுகளாக உடைந்து கிடக்கிறது.

அறிஞர் அண்ணா அவர்கள் இறந்து அரை நூற்றாண்டு வரையிலும் கூட, கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொண்டவர் தலைவர் கலைஞர்! அவர் இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று முன்பு இருந்ததைவிடக் கட்சி வளர்ந்து நிற்கிறது. அதற்குக் காரணமாக இருப்பவர் தளபதி மு.க. ஸ்டாலின்!modi and stalin 476ஆனால் அதிமுகவைக் காப்பாற்ற அங்கு யாரும் இல்லை. அதை அழிப்பதற்கு பாஜக பக்கத்திலேயே இருக்கிறது!

 தங்களின் அடுத்த ஆசையையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். திமுக அரசைக் கலைத்து விட முடியுமா என்று கூடப் பார்க்கிறார்கள். அந்த நோக்கத்தில்தான், கடந்த நவம்பர் 29ஆம் தேதி பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆளுநரைச் சந்தித்து, நான்கு மாதங்களுக்கு முன்பு பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்திருந்த போது பாதுகாப்பு சரியாக வழங்கப்படவில்லை என்று கூறி இருக்கிறார்! நான்கு மாதங்கள் அவரும் அவர் கட்சியினரும் வெளிநாடு சென்று இருப்பார்கள் போல் இருக்கிறது! இப்போதுதான் அதைக் கண்டுபிடித்து இருக்கிறார் அண்ணாமலை. அந்தப் புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட ஆளுநர், தலைமைச் செயலாளர் அல்லது தலைமைக் காவல்துறை அதிகாரியிடம் அது குறித்துக் கேட்டிருப்பதாகச் சில செய்திகள் கசிகின்றன!

ஆண்டுக் கணக்கில், தமிழ்நாடு அரசின் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களைக் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் தமிழக ஆளுநர், அண்ணாமலை கொடுத்த புகாருக்கு மூன்றே நாள்களில் நடவடிக்கை எடுக்கத் தொடங்கி இருப்பதாக வரும் செய்திகள் அவர்களின் உள்நோக்கத்தை நமக்குப் புலப்படுத்துகின்றன

சட்டம், ஒழுங்கு தமிழ்நாட்டில் கெட்டுவிட்டது என்னும் பொய்ச் செய்தியைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமும், பொய்யான பல குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போவதன் மூலமும், ஆட்சியைக் கலைப்பதற்கு அவர்கள் முயற்சி செய்யக் கூடும்!

ஒரு நாடு எப்படி ஜனநாயகமற்றுப் போய்க் கொண்டிருக்கிறது என்பதற்குத்தான் இதுவெல்லாம் சாட்சியாக இருக்கிறது! அண்ணாமலையின் நடவடிக்கைகளும், அதற்கு ஆர். என். ரவி துணை போகும் விதமும் மக்களிடையே இவர்களுக்கு எதிர்க் கருத்தைத்தான் உருவாக்கும்.

திமுக அல்லது அதிமுக தோளில் ஏறி அமர்ந்து, நான்கு நான்கு இடங்களைச் சட்டமன்றத்தில் அவர்கள் பெற்றிருக்கிறார்கள். தனியாகத் தங்கள் காலில் அவர்களால் நிற்க முடியுமா என்று கேட்டால், கால் இருப்பவனால்தான் அது முடியும். பாஜகவால் ஒருநாளும் தமிழ்நாட்டில் தனித்து நிற்க முடியாது.

எனவே அடுத்தவனை அழித்தும், நடக்கின்ற நல்ல ஆட்சியைக் கலைத்தும், தாங்கள் பதவிக்கு வந்து விட வேண்டும் என்று கருதும் பாஜகவிற்கு மக்கள்தான் சரியான பாடத்தைப் புகட்ட வேண்டும்!!

- சுப.வீரபாண்டியன்

Pin It