கடந்த 09.07.2018 அன்று, தமிழக சட்டப் பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டுச் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டால், அவர்களை விசாரணை வரம்புக்குள் கொண்டுவருவதற்காக 2013-ஆம் ஆண்டு, நடுவண் அரசு லோக்பால், லோக் ஆயுக்தா சட்டத்தை (The Lokpal and Lokayukta Act, 2013) நிறைவேற்றியது. 2014-ஆம் ஆண்டு இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. நடைமுறைக்கு வந்த ஓராண்டுக்குள் அந்தந்த மாநில அரசுகள் தங்களது மாநிலத்தில் லோக் ஆயுக்தா சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்கிறது லோக்பால் சட்டம். எனினும் லோக் ஆயுக்தா சட்டத்தைக் கொண்டுவராமல் காலம் தாழ்த்திய அ.தி.மு.க. அரசு, கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வருவது குறித்த அறிக்கையினை ஜூலை 10-க்குள் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவசர கதியில் இச்சட்டத்தை சட்டப்பேரவையில் தற்போது நிறைவேற்றியுள்ளது.

இவ்வமைப்பு அதிகாரமில்லாத ஓர் அமைப்பு என்று சொல்லப்படுவதற்கான காரணங்களை இங்கு ஆராயலாம்.

லோக் ஆயுக்தா அமைப்பு, தலைவர் உள்ளிட்ட நான்கு உறுப்பினர்களைக் கொண்டது. லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் குழுவானது முதல்வர், சட்டப்பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்டது. இக்குழுவின் பெரும்பான்மை ஆளுங்கட்சியாக இருப்பதால் ஆளுங்கட்சியின் விருப்பப்படியே நியமனங்கள் நடைபெறும் என்பது வெளிப்படையான செய்தி.

நடுவண் அரசின் தெரிவுக் குழுவின் அமைப்பை நோக்கும் போது, இந்த வேறுபாடு எளிதில் புரியும். அக்குழுவில் பிரதமர், மக்களவையின் தலைவர், மக்களவையின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது அவரால் பரிந்துரைக்கப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் மற்றும் சட்ட வல்லுநர் ஒருவர் ஆகியோர் உள்ளனர். இதன் மூலம் லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனங்களில் அதிகாரம், ஆளுங்கட்சியின்பால் செல்வது தவிர்க்கப்படும். நீதித் துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவுக் குழுவில் இடம்பெறுவது, குழுவின் பணியினை மேம்படுத்தும்.

மேலும், சட்டப் பிரிவு 3(2)(A) - இன் படி, லோக் ஆயுக்தாவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதிபதியையோ அல்லது ஊழல் தடுப்புக் கொள்கை, பொது நிர்வாகம், சட்டம், நிதி, விழிப்புணர்வு உள்ளிட்ட துறைகளில் 25 ஆண்டு அனுபவமிக்க ஒருவரை நியமிக்க முடியும். இது லோக் ஆயுக்தா அமைப்பினை அதிகாரிகள் தலைமையிலான அமைப்பாக மாற்றிவிடக் கூடும்.

அதுமட்டுமன்றி லோக் ஆயுக்தாவின் சட்டப்பிரிவு 13(1) - இன் படி அரசு ஒப்பந்தங்களைப் பற்றிய புகார்களையோ, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளோர் மீதான புகார்களையோ விசாரிக்க முடியாது. சட்டப்பிரிவு 26(2) - இன் படி லோக் ஆயுக்தா அமைப்பு, அரசுக்கு வெறும் பரிந்துரைகளை மட்டுமே அளிக்கும் அமைப்பாக இருக்கிறது. அவ்வமைப்பால் ஆணை எதுவும் பிறப்பிக்க முடியாது.

இவைபோன்ற காரணங்களாலேயே தமிழக அரசின் லோக் ஆயுக்தா அமைப்பு, அதிகாரம் அற்ற அமைப்பு என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், சட்டப்பேரவையின் தேர்வுக் குழுவிற்கு (Selection Committee) அனுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் புறந்தள்ளப்பட்டுள்ளது.

அதிகாரத்தை ஆளுங்கட்சியிடம் குவித்து வைத்துக் கொள்வது ஜனநாயகமாகாது. அதிகாரப் பரவலாக்கமே உண்மையான ஜனநாயகத்திற்கு வித்திடும். லோக் ஆயுக்தா சட்டம், அதிகாரத்தை ஆளுங்கட்சியிடம் முழுவதுமாக ஒப்படைத்துவிட்டு பேருக்கு ஓர் அமைப்பாகச் செயல்படவிருக்கும் அட்டைக்கத்தியே என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

Pin It