முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களைத் தரக்குறைவான சொற்களால், பாட்டு பாடியும், ஏசிப்பேசியும் வரும் சீமான் உள்ளிட்ட அவர் கட்சியினருக்கு எச்சரிக்கை விடும் வகையில், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் 12.7.2024 அன்று சென்னை, அன்பகத்தில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. பேரவையின் தலைவர் தோழர் சுபவீ ஒரு மணி நேரம் கடுமையான கண்டன உரையை ஆற்றினார்.

வழக்கமாக அமைதியாகவும், நிதானமாகவும், புள்ளி விவரங்களுடனும் பேசும் அவர், அன்று தன்னுடைய இன்னொரு முகத்தைக் காட்டும் வகையில், கடும் சீற்றத்துடன் உரையாற்றினார். அது ஓர் அறச்சீற்றம்!

இதுபோன்ற பேச்சுக்களையும், ஏச்சுக்களையும் ஏராளமாகத் தலைவர் கலைஞர், தான் வாழ்ந்த காலத்திலேயே பார்த்திருக்கிறார். இவையெல்லாம் ஒரு செடியின் வேரில் வீசப்படுகிற சாணமும், மலமும் போல! அவற்றை உரமாக்கிக் கொண்டு அந்தச் செடி வளர்ந்து மரமாகும். நானும் அப்படித்தான் என்று சொன்னவர் கலைஞர்!subavee condemns seemanஇதோ தரக்குறைவான சொற்களால் நான் கலைஞரைப் பற்றிப் பாடுகிறேன். முடிந்தால் என்னைக் கைதுசெய் என்று சவால் விட்ட சீமானுக்கு, அந்த மேடையில் இன்னொரு சவாலை சுபவீ அரங்கேற்றினார்.

விஜயலட்சுமி என்று ஒரு பெண் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக, வலையொளிகளில் இந்தச் சீமானை மிகத் தரக்குறைவாக, மானங்கெடப் பேசி வருகிறார். "சீமானே, உனக்குத் தைரியம் இருந்தால், அந்தப் பெண் மீது வழக்குப் போடு. இல்லையென்றால், அதை எடுத்து இந்த மேடையில் பேசியிருக்கும் என் மீதாவது வழக்குப் போடு. சந்திக்க நான் தயார். நீ தயாரா?" என்று கேட்டார்.

இனிமேல் எங்காவது தலைவர் கலைஞரைப் பற்றி சீமான் பேசினால், விஜயலட்சுமியின் காணொளியை அதற்குப் பதிலாக ஒளிபரப்புங்கள் என்றும் திமுகவினரை அவர் கேட்டுக் கொண்டார்.

ஒரு மணி நேரம் அன்று அவர் ஆற்றிய உரை, கலைஞர் செய்திகள் தொலைக் காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இப்போதும் பல்வேறு வலையொளிகளில் பல லட்சம் மக்களிடம் சென்று பரவிக் கொண்டிருக்கிறது.

"அண்ணாவின் வழி நின்று, அறமான வழி செல்லும் அதிமேதை கருணாநிதி! குண்டேந்தும் பீரங்கி வந்தாலும் கொள்கை மாறாத கருணாநிதி! சீராளன் கருணாநிதி! அன்புப் பேராளன் கருணாநிதி! கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே!" என்னும் பாடல் வரிகளோடு, அவர் தன் உரையை நிறைவு செய்தார்.

 - எழில்.இளங்கோவன்