நெய்வேலி நிலக்கரி பட்டென்று பற்றி எரிகிறது. பா.ம.க.வின் தலைவர்களில் ஒருவரான அன்புமணியின் பேச்சு, அனலினும் சூடாய்க் கொதிக்கிறது. என்ன நடக்கிறது நெய்வேலியில்?

என்எல்சி நிர்வாகம், விவசாயிகளின் விளைநிலங்களைப் பறித்துக் கொள்கிறது என்பது குற்றச்சாட்டு. அதனை எதிர்த்து நெய்வேலி நுழைவாயிலில் அன்புமணி தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர் பாமகவினர். அவர்களைக் காவல்துறை கைது செய்த போது, ஒரு கலவரம் உண்டானது. அன்புமணியை ஏற்றிச் சென்ற காவல் ஊர்தியை, அக்கட்சியின் தொண்டர்கள் மறித்தனர். வாகனத்தின் மீது கற்களை வீசித் தாக்கினர். எதிர் வினையாகக் காவல்துறை தடியடி நடத்தியது. இருதரப்பிலும் காயங்கள் ஏற்பட்டன.

அனல் மின் நிலைய விரிவாக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப் படுகின்றன. ஆனால் அது இப்போது தொடங்கவில்லை. 2006 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.anbumani 5002006 ஆம் ஆண்டு ஒரு ஏக்கருக்கு இரண்டரை லட்சம் ரூபாயும், பிறகு 2013 ஆம் ஆண்டு அதே ஒரு ஏக்கருக்கு 6 லட்ச ரூபாயும், இப்போது 25 லட்ச ரூபாயும் கொடுக்கப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தப் பட்டுள்ளன. மக்களின் ஒப்புதலோடுதான் இது தொடர்ந்து நடைபெற்று இருக்கிறது. ஆனால் இறுதியாக கையகப்படுத்திய நிலங்களை, என்எல்சி நிர்வாகம் உடனே எடுத்துக் கொள்ளாததால், அந்த நிலங்களை விளை நிலங்களாக விவசாயிகள் மாற்றி உள்ளனர்.

அவை விளைநிலங்கள் என்றாலும், ஏற்கனவே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அதற்கான ஈட்டுத்தொகையையும் பெற்றுக் கொள்ளப்பட்ட நிலங்கள் அவை என்பதை மறந்து விடக்கூடாது.

இப்போது பா.ம.க. களத்தில் இறங்கி சட்ட ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்குகிறது. அன்புமணி தன் பேச்சில், இனிமேல் கடலூர் மாவட்டத்தில் எதுவும் அசையாது என்று கூறுகிறார். அவருடைய பேச்சு மென்மேலும் வன்முறையைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.

பொதுமக்களில் ஒரு பகுதியினர், இப்போது 25 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை தரப்படுகிறது. ஆனால் எங்களுக்கு ஆறு லட்சம் தான் கிடைத்தது. எனவே இன்னொரு 19 லட்சம் ரூபாயை ஒவ்வொரு ஏக்கருக்கும் தர வேண்டும் என்கின்றனர்.

பாமகவினரோ நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதை நிறுத்திவிட்டு, என்எல்சி நிர்வாகம் வெளியேறட்டும் என்கிறார்கள். நீர் மின்சாரம், சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் ஆகியனவே சரியாக இருக்கும் என்பது அவர்களின் கருத்து.

அண்ணாமலை நடைப்பயணம் தொடங்கும் அதே நாளில், அன்புமணி முற்றுகைப் போராட்டம் நடத்தி இருக்கிறார். காலையில் கைது செய்யப்பட்ட அன்புமணி மாலையில் விடுவிக்கப் பட்டிருக்கிறார்.

நம் நாட்டில் எல்லாவற்றுக்குள்ளும் ஓர் அரசியல் உண்டு. இதற்குள் இருக்கும் அரசியல் என்ன என்பது இன்னும் சில நாள்களில் புரிந்துவிடும்.

- சுப.வீரபாண்டியன்

Pin It