சட்டமன்ற நூற்றாண்டு நிறைவு ஆண்டில், திராவிட இயக்கத்தின் அடிப்படையான சமூக நீதிப் போராட்டத்தில் முக்கியமான ஒரு வெற்றியைத் தி.மு.கழகம் இந்தியாவிற்கே பெற்றுத் தந்திருக்கிறது.

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதரப் பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மருத்துவ இளநிலைப் படிப்புகளில் 15% இடங்களும் முதுநிலைப் படிப்புகளில் 50% இடங்களிலும் அகில இந்திய தொகுப்புக்கு மாநில அரசுகள் அளித்து வருகின்றன. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பட்டியல் பிரிவினருக்கு மட்டுமே இடஒதுக்கீடு இருந்து வந்தது.

நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட வகுப்புவாரி இட ஒதுக்கீடு, 1951 இல் கொண்டு வரப்பட்ட முதல் சட்டத் திருத்தம், மண்டல் குழு அமைக்கப்பட்டு சமூகநீதிக் காவலர் விபி சிங் ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டப் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு என இந்தியச் சமூகநீதி வரலாற்றைத் திராவிட இயக்கம் தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகிறது.

ஆட்சிப் பொறுப்பில் இல்லாத போதும் திமுக சமூக நீதிக்காக எப்போதும் தொடர்ந்து போராடி வருகிறது. அப்படி இதரப் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்காக உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து  போராடி வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பையும் அது பெற்றது. இந்த நிலையில் 2021-22 கல்வி ஆண்டில் இருந்து இதரப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கிடைக்கப் போகிறது என்கிற இந்தச் செய்தி சமூகநீதியின் மாபெரும் வெற்றியாகும்.

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான தளபதி ஸ்டாலின் அவர்கள் கூறியிருப்பது போல விரைவில் இந்த 27 சதவீதம் என்பது தமிழ்நாட்டில் இருக்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டின் படி பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இடஒதுக்கீடாக வழங்கப்படுவதற்கான தொடர் சமூகநீதிப் போராட்டத்தை நாம் மேற்கொள்வோம்.

இதரப் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு என்பது சாதி ஒழிப்பில் மிக முக்கியக் கருவியாகும். பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு உறுதிப்படும்போதுதான் பட்டியல் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் அவர்களால் கை வைக்க முடியாது. இது பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் நலனையும் தாண்டி சாதியக் கட்டுமானத்தை அசைக்கக் கூடிய ஒன்றாகும்.

Pin It