amit shah and modi 774இந்தியாவின் எதிர்காலம் என்ன ஆகப்போகிறது என்று அஞ்சும் அளவுக்கு, மூன்று புதிய சட்டங்கள் அல்லது ஆணைகளை, ஒன்றிய அரசும் வேறு சில அரசுகளும் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.

1. இந்திய ஒன்றிய அரசு எல்லா மாநிலங்களிலும் எல்லா அரசு விழாக்களிலும், இனி "வந்தே மாதரம்" பாடல் பாடப்பட வேண்டும் என்ற ஆணையைக் கொண்டு வர இருக்கிறது!

2. 2014 ஆம் ஆண்டு மராத்திய அரசினால் வழங்கப்பட்ட, இஸ்லாமியர்களுக்கான 5% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக, இன்றைய பாஜக அரசின் முதலமைச்சர் பட்நாவிஸ் தெரிவித்திருக்கிறார்!

3. பதிவுத் திருமணம் செய்து கொள்ள யாரேனும் இளைஞர்கள் விரும்பினால், உடனடியாக அந்தத் தகவல் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று குஜராத் அரசு ஒரு சட்டம் கொண்டு வரப் போவதாகத் தெரிவித்திருக்கிறது!

-இவை சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும், காதல் உரிமைக்கு எதிராகவும் தொடுக்கப்படும் அம்புகள் என்பது தெளிவாகப் புரிகிறது!

வந்தே மாதரம் பாடல் நாட்டு வாழ்த்துப் பாடல் போல வெளித்தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், அதன் உள்ளடக்கம் வேறு வகையானது! 19 ஆம் நூற்றாண்டில் வங்காளத்தைச் சேர்ந்த பங்கிம் சந்திரர் எழுதிய ஆனந்த மடம் என்னும் நாவலில் இடம்பெற்றிருக்கும் ஒரு பாடலே இந்த வந்தே மாதரம் ஆகும்! இந்துச் சாமியார்கள் இஸ்லாமியர்களின் பகுதிகளில் தாக்குதல் நடத்தி முடித்த பின்பு ஆடும் களியாட்டத்தில் பாடப் பெறும் பாடலாகவே இது அமைந்திருக்கிறது! அதனால்தான் இந்தப் பாடலை சுபாஷ் சந்திர போஸ், ரவீந்திரநாத் தாகூர் முதலிய பெருமக்களே அன்று எதிர்த்தார்கள்! இன்று மீண்டும் அந்தப் பாடலைப் பாடச் சொல்வதன் மூலம் இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒரு வெறுப்புணர்வை இந்திய ஒன்றிய அரசு ஏற்படுத்த விரும்புகிறது!

இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை ஒழிக்கப் போவதாக மகாராஷ்டிரா அரசு கூறியிருப்பது, சிறுபான்மையினர் மீதான இன்னொரு பெரும் தாக்குதலாகும்! காங்கிரஸ் - தேசியவாதக் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, அஜித் பவார் துணை முதல்வராக இருந்தபோது அந்த இட ஒதுக்கீட்டுச் சட்டம் கொண்டுவரப்பட்டது! இப்போது அஜித் பவாரும் மரணித்து விட்டார். அந்தச் சட்டமும், இன்று ஆபத்திற்கு உள்ளாகி இருக்கிறது!

சிறுபான்மை, பெரும்பான்மை என்கிற வேறுபாடு எதுவும் இல்லாமல், அனைவரது காதல் உரிமையையும் அழிக்க முயற்சி செய்கிறது குஜராத்தின் பாஜக அரசு! பதிவுத் திருமணங்களுக்குப் பெற்றோரின் ஒப்புதல் வேண்டும் என்று அந்தப் புதிய "குஜராத் அரசு திருமணச் சட்டம் (2025 - 26) " கூறுகின்றது!

இந்தியாவை ஒரு பாசிச கட்சி ஆள்கிறது என்பதற்கு இவற்றை விட வேறு என்ன சான்றுகள் வேண்டும்? அந்த பாசிச பாரதிய ஜனதா கட்சியோடுதான் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி அமைத்திருக்கிறது!

தங்களின் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி, இந்தக் கட்சிகளை கண்டிப்பாக மக்கள் தண்டிப்பார்கள்!

- சுப. வீரபாண்டியன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.