தமிழ்நாட்டின் 2025-26ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை மாநிலத் திட்டக் குழுவின் துணைத்தலைவர் பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் 16.02.2026 அன்று முதலமைச்சரிடம் வழங்கினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்துள்ள பொருளாதார ஏற்றத்தினைச் சிறப்பாக ஆவணப்படுத்தியுள்ளது இந்த ஆய்வறிக்கை.

economic survey of tn 2026பொதுவாக ஒன்றிய அரசு, வரவுசெலவுத் திட்டத்தினை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள், இந்தியாவின் பொருளாதார ஆவறிக்கை வெளியிடப்படும். ஆனால் தமிழ்நாட்டில் இவ்வாறு ஆய்வறிக்கை வெளியிடும் வழக்கம் சென்ற ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில்தான் தொடங்கியது. தற்போது இரண்டாவது ஆண்டாக இவ்வறிக்கை வெளிவருகிறது.

மொத்தம் 263 பக்கங்களைக் கொண்ட இந்த ஆய்வறிக்கையில், தொழில்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, சமூகநலத் திட்டங்களினால் ஏற்பட்ட பயன் ஆகியவற்றோடு, இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியைவிட அதிகமாக இருப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 3.62 இலட்சம். அதே வேளையில், இந்தியாவில் தனிநபர் வருமானம் 2.05 இலட்சம் மட்டுமே.

சமூகநலத் திட்டங்களுக்காகத் தமிழக அரசால் ஒதுக்கப்படும் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதையும் இவ்வறிக்கையின்மூலம் அறிய முடிகிறது. 2021-22ஆம் ஆண்டில் சமூகநலத் திட்டங்களுக்காக ரூ. 1,13,265 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2025-26இல் இத்தொகை ரூ. 1,57,864 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதுமைப்பெண், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட பல்வேறு சமூகநலத் திட்டங்கள் பெண்களின், குறிப்பாக மாணவ சமுதாயத்தினரின் சமூக, பொருளாதாரப் படிநிலைகளில் மாற்றம் கொண்டு வருவதில் பெரும் பங்களிப்பைச் செய்தன. இதற்குக் காரணமாக அமைந்தது அரசின் நிதி ஒதுக்கீடு.

தமிழ்நாட்டில் 15 வயது முதல் 49 வயது வரையுள்ள பெண்களில் கல்வி கற்றவர்கள் 84 விழுக்காடு உள்ளனர். அதே நேரம் இந்தியாவின் விழுக்காடு 71.5% மட்டுமே.

இவை மட்டுமின்றி, இன்னும் சில முக்கியமான விவரங்களையும் ஆய்வறிக்கை நமக்குத் தருகிறது. நேரடி அந்நிய முதலீட்டினை ஈர்ப்பதில் இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் தொடர்ந்து தமிழ்நாடு இருந்து வருகிறது. 2022-23-இல் 2,436 மில்லியனாக இருந்த முதலீடு, 2024-25இல் 3,681 மில்லியனாக அதிகரித்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.9 விழுக்காடு. இது இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தில் ஏறத்தாழ இருமடங்காகும். 2024-25க்கான சராசரி விகிதமான 16% தொடர்ந்து நீடித்தால், 2031ஆம் ஆண்டில் தமிழ்நாடு டிரில்லியன் டாலர் வளர்ச்சியை எட்டுவது சாத்தியமாகும் என்கிறது ஆய்வறிக்கை.

இவ்வாறு பல வளர்ச்சிக் கூறுகளைத் தமிழ்நாடு முதல்வர் அவர்களின் திராவிட மாடல் ஆட்சி சாத்தியமாக்கி இருக்கிறது. மேற்காணும் வளர்ச்சிப் போக்குகள் தொடர வேண்டும் எனில், தற்போது இருக்கும் நல்லாட்சியே தொடர வேண்டும். அதற்கான சான்றாக எதிர்வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தல் அமையும் என்றால் அதில் மிகையில்லை.

- வெற்றிச்செல்வன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.