மதம் - மக்கள் - புரட்சி

ஃபிடல் காஸ்ட்ரோ

தமிழில்: அ. குமரேசன்

புத்தகம் என்பது காகிதக் கற்றைகளின் அடுக்கப்பட்ட ஒரு கட்டல்ல; எழுத்துகளின் குவிய லல்ல; அடுக்கிக் கோர்க்கப்பட்ட சொற்களின் வெற்று அணிவரிசையல்ல. புத்தகம் ஓர் உலைக் களம். நம்மை உருக்கிப் புதிதாக வார்க்கும்.

நல்ல புத்தகம் என்பது தேவதையின் மென் விரல்கள். உயிரின் அடிமடியில் மயிலிறகினால் வருடிவருடி ஆன்மாவைப் புல்லரிக்கச் செய்து புதுமைப்படுத்தும். அறிந்து சேகரித்து, கற்றுத் தேர்ந்து, அனுபவித்து, வாழ்ந்து, கற்ற பல நூறு மனிதர்களின் பேராற்றல்மிக்க ஞானப்பெருங் கடலை ஒரு நல்ல புத்தகம் சட்டென்று வாசக உள்ளத்தில் கவிழ்த்து கொட்டிவிடும். வாசகன் மந்திரக் கோலால் வருடப்பட்டவனைப்போல, திடுமென்று அறிவு உள் அகலம் பெற்று, ஆகாய விரிவு கொள்வதை உணர்வான்.

நேற்றுவரை சிந்திக்காத ஒரு சிந்தனை, உள்ளுக்குள் முகிழ்க்காத ஓர் உணர்வு, அனுபவ மாகாத அறிவு இவற்றை ஒரு புத்தகம் வாசிக்கப் பட்ட பிறகு ஒருவன் உணர முடியும்.

ஒரு நல்ல புத்தகம் வாசிப்பதற்கு முன்பு இருந்த நான், வாசித்த பிறகு நிச்சயமாக மாற்ற மடைந்திருப்பேன். உள்ளுக்குள் கூடுதலான ஒளி. . . ஓர் உலகை தரிசித்த பிரமிப்பு, ஒரு புதிய சூரியனை உள்வாங்கிய ஞானப் பிரகாசிப்பு.

நிறைய புத்தகம் வாசிக்கிற பழக்கம் உள்ளவர் களுக்கு இயல்பாகவே பெருமிதம் இருக்கும். சராசரி மனிதர்கள் அறியாதவற்றை தாம் வாசித்து அறிந்திருக்கிறோம். நாம் சராசரியல்ல, சாதாரண மல்ல, அசாதாரண வகையைச் சேர்ந்த தனித்துவம் நிரம்பிய உயர்ந்த மனிதன். கர்வமில்லாத இந்தச் சுயபெருமிதம் நிறைய வாசிப்பவரின் மூளையை ஒளிமகுடமென அலங்கரித்திருக்கும்.

அப்படியொரு புத்தகம் ஒன்று சமீபத்தில் வாசித்தேன். அ. குமரேசன் மொழிபெயர்த்து, அலைகள் வெளியீட்டகம் பதிப்பித்திருக்கிற ஓர் அற்புதமான நூல். மதம் - மக்கள் - புரட்சி என்ற நூல். கியூபா நாட்டின் அதிபரும், உலகப் புரட்சித் தலைவர்களில் ஒரு நாயகருமான பிடல் காஸ்ட்ரோ ஒரு கிறிஸ்தவப் பாதிரியாருக்கு அளித்த பல நாள் பேட்டி. அவரும் அயல்நாட்டுப் பாதிரியார். வாட்டிகன் என்கிற போப்பாண்டவர் நகரத்தின் முக்கிய தலைமைப் பாதிரியார்களில் முக்கிய மானவர்.

தமது வேலைப் பளுவுக்குமிடையே அப் பாதிரியார், பிடல் காஸ்ட்ரோவின் ஒரு நேர் காணல் எடுப்பதற்காக சில நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. வேலை நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒவ்வொரு நாளும் இரண்டு மணி, மூன்று மணி நேரம் நேர்காணலுக்காக ஒதுக்கி வந்து சந்திக்கிறார் காஸ்ட்ரோ.

நேர்காணலுக்கான யோசிப்புகளின் தீவிரமும், காத்திருத்தல் தருணங்களின் சிந்தனைகளும், பிடல் காஸ்ட்ரோவின் சந்திப்புத் தருணங்களும், அப் போதைய நலவிசாரிப்புகளும், வருத்தம் தெரிவிக் கிற உயர் பண்புமாய் அதுவே ஒரு நாவலுக்குரிய சுவாரஸியத்துடன் விவரிக்கப்பட்டிருக்கிறது நூலில்.

நேர்காணல் முழுக்க கிறிஸ்தவ மதம் குறித்தும், மக்களின் விடுதலைக்கான புரட்சி குறித்தும், அந்தப் புரட்சிக்கு மதம் தடையாக இருக்குமா, துணையாகவும் இருக்க முடியுமா என்பது குறித்தெல்லாம் விவாதங்களாய் விரிகிறது.

நேரடியாக இந்தப் பிரச்சனைகள் குறித்தான கருத்து விவாதமாக மட்டுமே இருந்திருந்தால், அலுப்பூட்டுகிற ஒரு கட்டுரை நூலாக முடிந் திருக்கும். அது அப்படியாகிவிடவில்லை.

காஸ்ட்ரோவின் பால்யப் பருவ பள்ளிநாட்கள் நினைவு கூரப்படுகிறது. கிறிஸ்தவ நிறுவனத்தின் ஆளுகைக்குட்பட்ட கல்வி நிலையங்கள் - விடுதிகளில் தங்கியிருந்த அனுபவம் - பள்ளி ஆசிரியர்கள் பற்றிய குணாம்ச சித்தரிப்பு என்று விவரணை களுடன் கூடிய அனுபவம் சார்ந்த சித்தரிப்பு. இப்படியாக காஸ்ட்ரோ என்ற மாமனிதர்-அவர் குடும்பம்-அவரது முன்னோர் களின் கிறிஸ்தவ நம்பிக்கை என்று நீண்டு போவதுடன், கியூபாவின் விடுதலைப் போராட்ட வரலாறும் உடன் எழுந்து வருகிறது.

கியூபாவின் பக்கத்து நாடுகளின் புரட்சி அனுபவ வரலாறுகள் உடன் வரும். தென் அமெரிக்க நாடுகளின் கிறிஸ்தவ மத நிறுவனத்தின் தனித்துவ வரலாறு சேர்ந்து வரும்.

காஸ்ட்ரோ மதம் குறித்த சிந்தனைகளை சொந்த நடைமுறை அனுபவங்களிலிருந்து எடுத்து முன் வைக்கிற நேர்மையும் கண்ணியமும் நம்மை மட்டுமல்ல, பாதிரிமார்களையும் பிரமிக்க வைக்கும்.

விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர்களுக்கு எதி ராக தண்டனைகள் வழங்கிய மதத்தின் கோலத்தை முன் வைக்கிற காஸ்ட்ரோ, விடுதலைக்கான ஜனநாயகப் போராட்டங்களில் முக்கியப் பங் காற்றிய கிறிஸ்தவப் பாதிரிகளின் இறப்பையும் துல்லியமாகச் சுட்டிக்காட்டுகிறார்.

புரட்சி, மக்களுக்கு விடுதலை பெற்றுத் தரும். மதநம்பிக்கையுள்ள கிறிஸ்தவ மக்களுக்கும் சமத்துவம் தரும். புரட்சிக்குக் கிறிஸ்தவப் பாதிரிகள் துணை செய்ய முன் வந்தால் புரட்சி அதை வரவேற்கும் என்று கம்பீரமாகப் பிரகடனம் செய்கிறார் காஸ்ட்ரோ.

இந்த நூலை வாசித்தபிறகு, எனக்குள் ஓர் உழவு நடந்திருப்பதை உணர முடிகிறது. மதம் குறித்து ஒற்றையான எதிர்மறைத் தாக்குதல் மட்டுமே போதாது, மதம் குறித்து பன்முக நோக் கிலான யோசிப்புகளும் அணுகுமுறைகளும் தேவை என்பதை உணர முடிகிறது.

நிறுவனமயப்பட்ட மதம், ஒரு நிறுவனம் என்ற முறையில் அதற்கு ஒருவர்க்கப் பின்புலம் இருக்கும் என்கிற தத்துவத் தெளிவு இருக்க வேண்டும். அதே நேரத்தில் மத நிறுவனத்தையும், மத நம்பிக்கை உணர்வாளர்களையும் ஒற்றைத் தட்டில் வைத்து எடைபோட்டுவிடவும் கூடாது என்கிற துல்லியமான நிதானமும் வேண்டும்.

மூடநம்பிக்கைக்கு இரையாகிவிடாமலேயே விஞ்ஞானபூர்வமான சிந்தனைகளில் உறுதியாக நின்றுகொண்டே இறை நம்பிக்கையுள்ள சாமானிய மக்களின் ஜனநாயக சிந்தனையைப் புரட்சிக்கு சாதகமாக பயன்படுத்த முடியுமா என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது. மதம் - மக்கள் - புரட்சி என்ற இந்த நூல் ஒரு நேர்காணலாக மட்டுமல்லாமல், ஒரு நாவலுக்குரிய இலக்கிய நுட்ப அழகுடன் விரிகிறது. ஒரு தீவிரமான தத்துவார்த்த சமுதாய சித்தாந்தம் குறித்த விவாதம், மிகுந்த வாசிப்பு ருசி யுடன் இருப்பது ஓர் ஆச்சரியம்.

சோவியத் யூனியன் சிதறுண்ட பின்பு ஏற்பட்ட உலகின் புதிய நிலையில், கேட்பாரற்ற சண்டியராக அமெரிக்க ஏகாதிபத்தியம் எழுகிற நிலையில், அதன் மூக்கின் கீழுள்ள சின்னஞ்சிறு கியூபா தனது சுயாதிபத்தியத்தையும் சோசலிசத்தையும் காப்ப தற்கு ஏகப்பட்ட புதிய அணுகுமுறைகளை உருவாக் குகிறார் காஸ்ட்ரோ.

அவற்றுள் ஒன்றுதான், பாதிரியாருக்கு தந்த இந்த நேர்காணலின் விரிவான விவரிப்பு. உலக வங்கிக்கு எதிராக ஒரு மாற்று வங்கியை உருவாக்குவதில் வெனிசுலாவின் சாவேஸ் முன் நிற்கிறார் என்றால், அதற்கான ஆதர்ச பலமாக இருப்பது கியூபாவும், பிடல் காஸ்ட்ரோவும்தான்.

இந்த நூல், தென் அமெரிக்க நாட்டு மக்களின் கல்வி, பண்பாடு குறித்த நுணுக்கமான ஞானத்தை யும் தருகிறது. கியூபா, வெனிசுலா, உருகுவே நாட்டு மக்களின் வாழ்க்கை முறைமைகளும், பண்பாட்டு ஆளுமைகளும் உணர முடிகிறது. அ. குமரேசனின் நுட்பமும், அழகும் அறிவார்த்த மும் நிறைந்த மொழி பெயர்ப்பு, நூலை ஒரு தமிழ் நூலாகவே உணர வைக்கிறது.

வெளியீடு: அலைகள் வெளியீட்டகம்,

4/9, 4வது முதன்மைச் சாலை,

யுனைட்டெட் இந்தியா காலனி,

கோடம்பாக்கம், சென்னை- 600 024,

பக்கங்கள் 416. விலை ரூ 220.

Pin It