தமிழ் இலக்கியத் தளத்தில் திராவிடத்தை முன்னிறுத்திப் பாடல்களை இயற்றித் தமக்குப் பின்னர் ஒரு பாட்டுப் பரம்பரையையே உருவாக்கிச் சென்றவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

bharathidasan 301புதுவையில் அவர் தமிழாசிரியராகப் பணிபுரிந்தபோது, பள்ளிக் குழந்தைகளுக்கான பாடநூல்கள் கடினமான முறையில் அமைந்திருப்பதைக் கண்டார். பாடநூலில் ‘அ’ என்ற எழுத்தைக் கற்பிக்க, அணிலின் படம் வரையப்பட்டு ‘அ – அணில்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். எழுதுவதற்குக் கடினமான ‘ணி’ என்னும் சொல்லைவிடத் தனக்கு நன்கு பழக்கப்பட்ட ‘அம்மா’ என்ற சொல்லை எளிதாகப் புரிந்து கொண்டு குழந்தைகள் கற்றுவிட முடியும் என்பது பாரதிதாசனின் கருத்து. இந்தத் திருத்தத்தை அரசாங்கம் செய்ய வேண்டும் என்று காத்திருக்காமல், எளியமுறையில் பாடநூல் ஒன்றைத் தாமே எழுதிப் பயிற்றுவித்தார். இதேபோல, ‘வ’ என்ற எழுத்திற்கு வண்ணான் என்றும், ‘ஐ’ என்ற எழுத்திற்கு ஐயர் என்றும் வார்த்தைகள் அமைக்கப்பட்டிருந்தன. குழந்தைகளின் உள்ளத்தில் ஜாதிய வேற்றுமையைக் கற்பிக்க விரும்பாத பாரதிதாசன், அச்சொற்களை மாற்றியமைத்துப் பயிற்றுவித்தார்.

பாரதிதாசனின் கருத்தியல் பாதையில் தாக்கத்தைச் செலுத்தியவர்கள் இருவர். ஒருவர் மகாகவி பாரதியார், மற்றொருவர் தந்தை பெரியார். பாரதிதாசன் பாரதியாருடன் கொண்டிருந்தது தனிப்பட்ட நட்பு. பெரியாருடனான தொடர்போ ஓர் இயக்கத்துடனான பயணம். தன்னைத் திராவிடராகவே பாரதிதாசன் அடையாளப்படுத்திக் கொண்டார். ‘நான்தான் திராவிடன்’ என்று கவிதை பாடினார்.

1938 இல் பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுப்பு வெளியானது, சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த குஞ்சிதம் – குருசாமி இணையர்களின் முயற்சியால்தான். அத்தொகுப்பிற்கு எழுதிய சிறப்புரையில் பாரதிதாசனைச் ‘சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவி’ என்று பெரியார் பாராட்டுகிறார்.

ஜாதி ஒழிப்புத் தளத்தில் எளிமையான முறையில் நகைச்சுவையுடன் கூடிய கதைகளைப் படைப்பதில் பாரதிதாசனுக்கு நிகர் அவரே. ‘செவ்வாயுலக யாத்திரை’ என்ற அவரது கதையில், ஆறு நண்பர்கள் செவ்வாய்க் கோளுக்குச் செல்கிறார்கள். அங்கு வசிக்கும் மனிதர்கள் தங்கள் தலையில் பெரிய கல்லை எப்போதும் சுமந்தவாறே இருக்கிறார்கள். அதற்குக் காரணம் கடவுள் ஏற்பாடு என்கிறார்கள். பூமியில் இருந்து சென்றவர்கள் இதைக் கண்டு சிரிக்கிறார்கள். சில நாட்களில் பூமியிலிருந்து சென்றவர்களுக்கிடையில் ஜாதியின் காரணமாகச் சண்டை வருகிறது. ஜாதியைப் பற்றிச் செவ்வாய்வாசிகள் கேட்டறிகிறார்கள். இறுதியில், ’நாங்கள் தலையில் தூக்கிச் சுமக்கும் கற்களால் ஆபத்தில்லை; ஆனால் நீங்கள் சுமக்கும் ஜாதி என்னும் கற்கள் கண்ணுக்குத் தெரியவில்லை, ஆனால் ஆபத்தானவை. கண்ணுக்குத் தெரியாத அந்தச் சுமையை இறக்கி வையுங்கள்’ என்று அறிவுரை சொல்கிறார்கள்.

பாரதிதாசனின் தமிழ்ச் சமூகத்திற்கான பணிகளை அங்கீகரிக்கும் பொருட்டு, அவருக்குச் சிறப்புச் செய்ய வேண்டும் என்று கருதினார் அண்ணா. பாரதிதாசனுக்குப் பொற்கிழி வழங்கும் ஏற்பாட்டினைச் செய்து அதற்கான நிதியைத் திரட்டுவதற்கான கோரிக்கையைத் திராவிட நாடு ஏட்டின் வழியாக முன்வைத்தார். தந்தை பெரியார் ரூ. 150 வழங்கி நிதி வழங்குவோர் பட்டியலைத் தொடக்கி வைத்தார். 1946ஆம் ஆண்டு பாரதிதாசனுக்கு ரூ. 24,399 பொற்கிழியாக வழங்கப்பட்டது.

தனது வாழ்நாளின் இறுதிவரை தமிழ்மொழியையும், தன்மானத்தையும் இறுகப் பற்றிக் கொண்டவர் பாரதிதாசன். அவர்தம் புகழ் என்றும் இம்மண்ணில் நிலைத்திருக்கும்.

- வெற்றிச்செல்வன்

Pin It