தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருந்தாலும், தேர்தல் வெயில் நிறைவடைந்திருக்கிறது! 20 நாள்களுக்கு மேலாக, திரும்பும் திசையெல்லாம் பல்வேறு முழக்கங்கள், பேரணிகள், மக்களை ஈர்க்க வேட்பாளர்கள் செய்து காட்டிய விதவிதமான வித்தைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து, தேர்தலும் நடந்தேறி விட்டது!

stalin and rahul 223தமிழ்நாட்டில் எப்போதும் போல் 70 விழுக்காடு வாக்குகள் சராசரியாகப் பதிவாகி இருக்கின்றன. புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள வேங்கைவாசலில், கடைசி நேரத்தில் 1500 பேர் ஒன்றாகத் திரண்டு வந்து வாக்களித்திருக்கின்றனர்.

சென்னை வியாசர்பாடிப் பகுதியில், எந்தச் சின்னத்தில் வாக்களித்தாலும், அது தாமரைச் சின்னத்திற்கே போயிருக்கிறது. இது போல வேறு எங்கும் நடந்திருக்குமோ, கவனிக்காமல் விட்டிருப்பார்களோ என்கிற கவலை ஏற்படுகிறது!

கோவைத் தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அத்தனை பேரும் பாஜக ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் என்று இரு பெரும் செய்திகளை அண்ணாமலை கூறி உள்ளார்! அது உண்மையாக இருக்குமானால், தேர்தலுக்கு முந்திய நாள் வரை அதனைக் கூட கண்டுபிடிக்க முடியாத ஒரு கட்சியா பாஜக என்னும் ஐயம் எழுகிறது! இல்லை, அண்ணாமலை நேற்று வரை கோமாவில் இருந்தாரா என்றும் கேட்கத் தோன்றுகிறது! ஒரு நண்பரின் கூற்றுப்படி, தான் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கப் போவது உறுதி என்பது புரிந்து விட்ட காரணத்தால்தான் அண்ணாமலை இப்படி ஒரு புதிய புரளியைக் கிளப்பி விடுகிறாரோ என்னவோ தெரியவில்லை!

நேற்று இந்தியா முழுவதும் நடைபெற்றுள்ள 102 தொகுதிகளின் தேர்தல் நிலவரங்கள் முழுமையாக இன்னும் வெளி வரவில்லை. இருப்பினும், கிழக்கு நாகாலாந்தில் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 4 லட்சம் மக்கள் வாக்களிக்க மறுத்துவிட்டனர் என்பது ஒரு குறிப்பிடத்தக்க செய்தியாக உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இறுதி வரையில் ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை என்பது வியப்பாகவே இருக்கிறது!

தமிழ்நாட்டைப் பொறுத்தளவு, சேலம், கரூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் ஏறத்தாழ 75 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளில் மட்டுமே எழுபதுக்கும் குறைவான விழுக்காடு அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன!

சென்னை மாநகர மக்கள், தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதில், ஏனோ எப்போதும் பின்தங்கி நிற்கின்றனர்!

தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்திய அளவில் கூட நல்லதொரு திருப்பமாகத் தேர்தல் முடிவுகள் வரக்கூடும் என்று தெரிகிறது. வரும் ஜூன் 3 ஆம் தேதி, நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா! அந்தக் கொண்டாட்டம், நான்காம் தேதியும் அதற்குப் பிறகும் தொடரும் என்று தோன்றுகிறது!

தொடரட்டும்!!

- சுப.வீரபாண்டியன்

Pin It