நடந்து முடிந்த ஐந்து மாநில சட்ட மன்றத் தேர்தலின் முடிவுகள் நாட்டில் இடதுசாரிகளின் வீழ்ச்சியையும், வலதுசாரிகளின் எழுச்சியையும் அடிக்கோடிட்டுக் காட்டுவதாய் அமைந்துள்ளது. கேரளா தவிர மற்ற மாநிலங்களில் இடதுசாரிகளின் பெரும் பின்னடைவை சந்தித்து இருக்கின்றார்கள். அதே வேளையில் வடகிழக்கு மாநிலமான அசாமை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றி உள்ளது. இடதுசாரிகள் தாம் போட்டியிட்ட மாநிலங்களில் கேரளாவில் மட்டுமே 2011 சட்டமன்றத் தேர்தலைக் காட்டிலும் கூடுதல் வாக்குகளைப் பெற்று இருக்கின்றார்கள். மற்ற மாநிலங்களில் அவர்களின் வாக்கு சதவீதமானது பெரும் பின்னடைவை சந்தித்து இருக்கின்றது.
அசாம் மாநிலத்தை எடுத்துக் கொண்டால் 2011 ஆண்டு 1.7% இருந்த ஒட்டு சதவீதம் 2016 ஆம் ஆண்டு 0.8 சதவீதமாக சரிந்துள்ளது. அதே போல தமிழ் நாட்டில் 4.4 லிருந்து 1.5 சதவீதமாகவும், மேற்குவங்கத்தில் 40 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்து இருக்கின்றது. மோடி அரசு பதவியேற்ற இந்த இரண்டு ஆண்டு காலத்தில் இந்தியா மிக மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து உள்ளது. எந்தவித வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படவில்லை. அப்படி இருந்தும் பா.ஜ.க ஒவ்வொரு மாநிலத்திலும் தனது வாக்கு எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. அசாமில் 11.5 சதவீத்தில் இருந்து 29.5 சதவீதமாகவும், கேரளாவில் 6.0 சதவீதத்தில் இருந்து 10.5 சதவீதமாகவும், தமிழ்நாட்டில் 2.2 சதவீதத்தில் இருந்து 2.8 சதவீதமாகவும், மேற்கு வங்கத்தில் 4.1 சதவீதத்தில் இருந்து 10.2 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
இடதுசாரிகளின் வாக்குவங்கி கடுமையாக சரிந்திருப்பதற்கும், வலதுசாரிகளின் வாக்குவங்கி கணிசமாக அதிகரித்திருப்பதற்கும் என்ன காரணம்? அது கண்ணுக்குத் தெரியாத நுணுகி ஆராயப்பட வேண்டிய காரணமெல்லாம் ஒன்றும் இல்லை. அது வெளிப்படையாகத் தெரியும் காரணங்கள் தான். தேர்தல் பாதையே ஜனநாயகத்தை அடைவதற்கான சிறந்த பாதை, அதை கண்ணும் கருத்துமாக வழிபடுவதே ஒவ்வொரு இடதுசாரிகளின் தலையாய கடமை என அது தனது தொண்டர்களை நம்ப வைத்துள்ளது. தொண்டர்களும் தேர்தல் பாதையை விட்டால் வேறு மாற்றே கிடையாது என உறுதியாக நம்புகின்றார்கள். இங்கிருந்துதான் எல்லாவித சீரழிவுகளும் தொடங்குகின்றது.
தேர்தல் பாதையே சோசலிசத்தை அடைவதற்கான ஒரே மாற்று என முடிவு எடுத்தபின் அவர்கள் இந்திய சமூகத்தில் செய்து முடித்திருக்க வேண்டிய பல பணிகளை அவர்கள் செய்யாமல் விட்டுவிட்டார்கள் என்பதுதான் உண்மை. இரண்டாயிரம் ஆண்டுகள் தீவிரமான மூடநம்பிக்கையிலும், பிற்போக்குத்தனத்திலும், சாதிய ஒடுக்குமுறைகளிலும் முழ்கிப்போன ஒரு சமூகத்தில் வர்க்க வேறுபாடுகள் கூர்மையடையாத ஒரு சமூகத்தில், பார்ப்பனர்களும், சாதி இந்துக்களுமே ஆதிக்கம் செலுத்தும் ஒரு சமூக அமைப்பில் தங்களுக்கான இடம் எது என்று அவர்கள் முடிவு செய்திருக்க வேண்டும். சரி சமமாக பலம் பொருந்தியவர்கள் பங்கேற்பதுதான் சரியான போட்டியாக இருக்க முடியும். அப்படி இல்லாத நிலையில் அந்த நிலையை எட்டுவதற்கான முயற்சிகள் கடுமையாக மேற்கொள்ளப்பட்டு இந்நேரம் நிறைவேற்றப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அந்தப் பணி அரைகுறையாகக் கூட செய்து முடிக்கப்படவில்லை.
முதலில் அவர்கள் இங்கிருக்கும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், பிற்போக்குத்தனங்களுக்கு எதிராகவும், சாதிய மேலாதிக்கத்திற்கு எதிராகவும் கடுமையான போரை தொடுத்திருக்க வேண்டும். இந்திய தரகு முதலாளிகளையும், ஏகாதிபத்திய அடிவருடிகளையும் மக்கள்முன் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதை அவர்கள் பெரிய அளவில் செய்யவில்லை. இந்தியா முழுவதும் தமக்கான களத்தை விரிவுபடுத்திக் கொள்ள முடியாமல் சில மாநிலங்களில் மட்டுமே அவர்களின் செயல்பாடுகள் நின்று போனது. அங்கும் கூட அதை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ளும் திராணியற்ற நிலையிலேயே இருக்கின்றார்கள்.
இப்போது களநிலவரம் முற்றிலும் மாறிவிட்டது. இந்தியத் தேர்தலை இன்று நிர்ணயக்கும் சக்திகளாக சாதியும், மதமும், பணமும் பெரும்பங்கு வகிக்கின்றது. அதற்கு ஏற்றாற்போல இடதுசாரிகளும் தங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. வலதுசாரிகளுக்குச் சவால் விடும் அளவிற்கு அவர்களது செயல்பாடுகள் இன்று சீரழிந்துள்ளன. கட்சிகளுக்குள் இருக்கும் தொண்டர்களுக்கு எந்தவித சித்தாந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவது கிடையாது. அவர்கள் அனைத்துவித பார்ப்பனிய மூடநம்பிக்கைகளையும் கடைபிடிப்பவர்களாய் உள்ளனர். அதை கண்டிக்க வேண்டிய கட்சியில் உள்ள அறிவுஜீவிகளோ அதற்கு அறிவியல் பூர்வமான விளக்கம் கொடுப்பவர்களாய் உள்ளனர்.
முதலாளித்துவ கட்சிகளுக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் இன்று அவர்கள் தங்களது வேட்பாளர்களை நிறுத்துகின்றார்கள். கொலை வழக்கிலும், ஊழல் வழக்கிலும் தொடர்புடைய தளி ராமச்சந்திரனை வேட்பாளாராக நிறுத்தியதில் இருந்தே அவர்களது இயலாமையைப் புரிந்து கொள்ளலாம். அவர்கள் போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் மிக மோசமான தோல்வியை சந்தித்து இருக்கின்றார்கள். அதிலே பல தொகுதிகள் அவர்கள் ஏற்கெனவே வெற்றிபெற்ற தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 44 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்பதும் 62 சதவீதம் பேர்மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் அதிலே கணிசமான நபர்கள் இடதுசாரிகள் என்பதும், இடதுசாரிகள் எந்த அளவிற்கு தேர்தல் பாதையில் முதலாளித்துவ கட்சிகளுக்குச் சவால்விடும் அளவிற்குச் சீரழிந்திருக்கின்றார்கள் என்பதைக் காட்டுகின்றது.
இந்தச் சீரழிவு என்பது ஏதோ தற்செயலாக நடந்த ஒன்று அல்ல. இது திட்டமிட்டே கட்சித் தலைமைகளால் நிகழ்த்தப்பட்ட ஒன்றாகும். தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டோம் என்றால் ஒவ்வொரு தேர்தலிலும் திமுக, அதிமுக என மாறிமாறி கூட்டணி வைத்து சில இடங்களில் வெற்றிபெறுவதை மட்டுமே குறிக்கோளாக தங்களது கட்சித் திட்டத்தை சுருக்கிக் கொண்டவர்கள். திமுக கூட்டணியில் இருக்கும் போது அதிமுக வை விமர்சனம் செய்வதையும், அதிமுக கூட்டணியில் இருக்கும் போது திமுகவை விமர்சனம் செய்வதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள். அதற்காக அவர்கள் எப்போதுமே கூச்சப்பட்டது கிடையாது.
மாற்று அரசியலை முன்வைக்கின்றேன் என்று இன்று அவர்கள் அமைத்துள்ள கூட்டணி ஒன்றே போதும் இடதுசாரிகளின் இன்றைய சித்தாந்த பிடிப்பைக் காட்டுவதற்கு. ஒரு பக்கம் ராமகிருஷ்ணன் சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக குரல் கொடுக்கின்றார். இன்னொரு பக்கம் வைகோ தேவர்சிலைக்கு மாலை அணிவிக்காமல் விடமாட்டேன் என கலகம் செய்கின்றார். அருணனோ ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, தன்னுடைய மார்க்சிய அறிவை எல்லாம் திரட்டி ஊடகங்களில் காரசாரமாக சண்டை போடுகின்றார். கட்சியின் சிறந்த தலைவர்கள் என்று இடதுசாரிகளால் பெருமையாக சொல்லப்படும் சங்கரய்யா, நல்லக்கண்ணு போன்றவர்கள் விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்ததை ஒரு வரலாற்று நிகழ்வாகக் கொண்டாடினர். விஜயகாந்த் ஒரு தேர்ந்த பிழைப்புவாதி என்பதையோ, மதவாத பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்தவர் என்பதையோ, தனியார் கல்லூரிகள் நடத்தி மாணவர்களிடம் கட்டணக்கொள்ளை அடிக்கும் கல்வி வள்ளல் என்பதையோ இவர்கள் வசதியாக மறந்துவிட்டார்கள்.
இடதுசாரிகளின் இந்த வீழ்ச்சி என்பது அவர்களின் சித்தாந்த வீழ்ச்சியுடன் தொடர்புள்ளது. அன்று பல தோழர்கள் தங்களுடைய வாழ்க்கையையே கட்சிக்காக தியாகம் செய்தனர். அப்படிப்பட்ட தோழர்களின் அந்தத் தியாகங்களை சொல்லித்தான் இன்றும் அவர்கள் தங்களை கம்யூனிஸ்டுகளாக காட்டிக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால் இன்று அப்படி ஒரு தலைவரைக்கூட அவர்களால் உருவாக்க முடியாது. ஒட்டுமொத்த இடதுசாரிகள் அணியே சித்தாந்தத்தை தொலைத்துவிட்டுத் தவித்துக் கொண்டு இருக்கின்றது.
இன்று மதவாத, சாதியவாத ஏகாதிபத்தியத்திற்கு எதிராக களத்தில் நிற்பவர்கள் தேர்தல் பாதைக்கு வெளியே நிற்கும் கம்யூனிஸ்டுகள் தான் என்பதை அவர்கள் நன்றாக உணர்ந்திருக்கின்றார்கள். அதனால் தான் தொடர்ச்சியாக அவர்களுக்கு எதிராக மிக மோசமான கழுத்தறுப்பு செயல்களை செய்துகொண்டு இருக்கின்றார்கள். அவர்களது பல வெளியீடுகளே இதை தோலுரித்துக் காட்டும். இந்தியாவில் இன்று புரட்சிகர இயக்கங்களின் வளர்ச்சிக்கு எப்படி ஆர்.எஸ்.எஸ், பிஜேபி கும்பல் தடையாக உள்ளதோ அதற்கு சற்றும் குறைந்தது அல்ல தேர்தல் பாதையில் நிற்கும் இடதுசாரிகளின் செயல்பாடுகள்.
இந்தியாவில் புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கங்களின் வளர்ச்சியைத் தடுப்பது என்பது தங்களது சீரழிந்து போன தேர்தல் பாதையைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரே வழியாக அவர்கள் பார்க்கின்றார்கள். அதனால் தான் வன்மத்தோடு அவர்கள் மீது பாய்கின்றார்கள். இன்று இடது சாரிகள் மிகப்பெரிய அளவிற்கு வீழ்ச்சி அடைந்ததற்கு காரணமும் வலதுசாரிகள் தனக்கான ஆதரவு மட்டத்தை கணிசமாக உயர்த்திக் கொண்டதற்கும் அவர்களின் இந்த முறையற்ற செயல்பாடே காரணமாகும்.
இந்த வீழ்ச்சி என்பது இத்தோடு நின்றுவிடப் போவதில்லை. எப்போது அவர்கள் மார்ச்சிய- லெனினியத்திற்கு உண்மையாக நடந்து கொள்கின்றார்களோ, எப்போது அவர்கள் முதலாளித்துவக் கட்சிகளுடன் கூட்டணி சேர்வதை கேவலமான ஒன்றாகப் பார்க்கின்றார்களோ, எப்போது அவர்கள் தேர்தல் பாதைக்கு வெளியே போராடிக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் தோழர்களுடன் கரம்கோர்த்துச் செயல்படப் போகின்றார்களோ அப்போதுதான் அவர்களின் எதிர்காலம் என்பது குறைந்த பட்சமாவது இங்கே உத்தரவாதப்படுத்தப்படும். ஆனால் அதற்கான வாய்ப்பு என்பது சுத்தமாக இந்தப் பிழைப்புவாதிகளிடம் இல்லை என்பதே அப்பட்டமான உண்மை.
- செ.கார்கி