கடந்த 10.04.2023 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். “சட்டப்பேரவைகளில் மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு, ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க, குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசு மற்றும் குடியரசுத் தலைவரை வலியுறுத்தும்” அத்தீர்மானம் சட்டப்பேரவையில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் அவர்கள் பேசியபோது, “சட்டத்தை உருவாக்கி நிறைவேற்றும் அதிகாரத்தைச் சட்டப் பேரவைகளுக்கு வழங்கிவிட்டு, அதற்கு ஒப்புதல் கையெழுத்துப் போடும் உரிமையை ஒரு நியமன ஆளுநருக்கு வழங்கியது மக்களாட்சி மாண்பு ஆகாது. எனவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தும் முன்னெடுப்புகளை நாம் மேற்கொள்ள வேண்டும்” என்று பேசியுள்ளார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் 1963 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் பேசும்போது, “அரசியல் சட்டத்தை ஆராய வேண்டும். அரசியல் சட்டம் பற்றிய புதிய மதிப்பீடு (reappraisal) பெற வேண்டும்” என்று பேசினார். மாநில சுயாட்சித் தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் 1974ஆம் ஆண்டு கொண்டு வந்தார் தலைவர் கலைஞர் அவர்கள். அத்தீர்மானமானது, “பல்வேறு மொழி, நாகரிகம், பண்பாடு ஆகியவைகளைக் கொண்ட இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேணிக் காக்கவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மாநில ஆட்சிகள் தடையின்றிச் செயல்படவும், மாநில சுயாட்சி பற்றியும், இராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் மீதும் தமிழ்நாடு அரசு அளித்திருக்கும் கருத்துகளை மத்திய அரசு ஏற்று மத்தியில் கூட்டாட்சி, மாநிலங்களில் சுயாட்சி கொண்ட உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கும் அடிப்படையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உடனடியாகத் திருத்தப்பட வேண்டும் என்று இப்பேரவை முடிவு செய்கிறது” என்பதே.
பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர், தலைவர் கலைஞர் இருவரும் உயர்த்திய குரலின் தொடர்ச்சியாக நமது முதல்வர் அவர்களின் தீர்மானத்தை நம்மால் பார்க்க முடிகிறது.
இந்தியா பன்முகத்தன்மை கொண்ட பல்வேறு தேசிய இனங்களின் நாடு. இந்த நாட்டில் உள்ள தேசிய இனங்களின் கலாச்சாரத்தையும், உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் மாநிலங்களுக்கு உரிமைகள் பகிர்ந்தளிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு உரிமைகள் பகிர்ந்தளிக்கப்படாதது மட்டும் அல்லாமல், ஒன்றிய அரசை ஓர் அதிகாரக் குவிமையமாக ஆக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப் பட்டிருக்கிறது.
அந்த அதிகார மையத்தின் ஓர் அங்கமாகத்தான் ஒவ்வொரு மாநிலத்திலும் நியமிக்கப்படும் ஆளுநர் இருக்கிறார். மாநில அரசு செயல்படாத வகையில் பார்த்துக் கொள்வதுதான் ஆளுநரின் அன்றாடப்பணியாக அமைந்திருக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் ஆதரவினை வாக்குகள் மூலமாகப் பெற்று, மக்களின் பிரதிநிதிகள் மூலமாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டங்களை ஆளுநர் சட்டை செய்வதே இல்லை என்பது ஜனநாயகத்தின் பேரவலம். நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரைக்கூட, பதவியில் இருந்து அகற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் வெறும் நியமனப் பதவியில் இருக்கும் ஆளுநரை அகற்ற மாநில சட்டமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை. இப்படி ஒரு ஜனநாயகமற்ற அரசியலமைப்புச் சட்டம் வேறெந்த நாட்டிலும் இருக்கிறதா என்று தெரியவில்லை.
இந்தித் திணிப்பில் தொடங்கி, நீட் தேர்வு திணிப்பு வரை மறுக்கப்படும் உரிமைகள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்தின் பேரால் நிகழ்ந்து வருகின்றன. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைகளுக்குத் தற்காலிகத் தீர்வுகள் போதாது. அடிப்படையான மாற்றங்கள் அரசியலமைப்பில் கொண்டு வரப்பட வேண்டும்.
அப்போதுதான் எல்லா தேசிய இனங்களுக்கும், மொழிகளுக்கும் சம உரிமை வழங்கும் அரசியலமைப்பாக இந்திய அரசியலமைப்பு இருக்கும். அவ்வகையில் முதல்வர் அவர்களின் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான கோரிக்கை மிகவும் நியாயமானது; அவசியமானது. தீர்மானம் நிறைவேற்றியதோடு நில்லாமல், தமிழ்நாடு அரசின் இத்தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குமாறு 12.04.2023 அன்று பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களுக்குக் கடிதமும் எழுதியுள்ளார், நமது முதல்வர்.
திராவிட முன்னேற்றக் கழகம் மற்ற மாநிலங்களையும் கூட்டி மாநில சுயாட்சி மாநாட்டை விரைந்து நடத்த வேண்டும். அதன் மூலமாக மாநிலங்களின் உரிமை சார்ந்த உணர்வு மற்ற மாநிலங்களுக்கும் சென்று சேர வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து எழும் இந்தக் கோரிக்கை மற்ற மாநிலங்களுக்கும் பரவ வேண்டும். அப்போதுதான் இக்கோரிக்கை வலிமை பெறும். அப்பணியை நமது முதல்வர் திறம்படச் செய்வார் என்ற நம்பிக்கை தமிழர்களுக்கு உள்ளது.
- வெற்றிச்செல்வன்