தங்களுக்கெனத் தனி ஒழுக்கத்தையும், சமயத்தையும், மொழியையும் பின்பற்றிக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட, வரையறுக்கப்பட்ட நிலப்பகுதியில் நெடுங்காலமாக வாழும் பூர்வகுடிகளே ஆதிவாசிகள் எனப்படும் பழங்குடியினராவர். (எல்.எம்.லெவிஸ்)

சாதி அல்லது இந்துக்களின் கீழ் வராத பழங்குடியினரைக் குறிக்க tribes)) என்ற சொல், ஆங்கிலேயரால் பயன்படுத்தப்பட்டது. விடுதலைக்குப் பின்னர், பட்டியல் பழங்குடியினர் (Scheduled tribes) என்ற சொல் பழங்குடியினரைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆதிவாசி, வனவாசி போன்ற சொற்களும் பழங்குடியினரைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் பத்துகோடிக்கும் மேற்பட்ட பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். மகாராஷ்டிரம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான பழங்குடியினர் வாழ்கின்றனர். இந்தியாவில் வாழும் பழங்குடியினரில் 59 விழுக்காட்டினரே எழுத்தறிவு பெற்றவராவர்.

விடுதலைக்கு முன்னும் பின்னும், வளர்ச்சி என்ற பெயரில் கடுந்துயரங்களை அனுபவித்தவர்கள் பழங்குடியினரே ஆவர். தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல், அணைகள் கட்டுவது, சுரங்கம் மற்றும் குவாரி அமைப்பது ஆகியவற்றிற்கு அவர்கள் கொடுத்த விலை மிகப்பெரியது. காட்டு விலங்குகளையும், பல்லுயிர்களையும், தேசிய பூங்காக்களையும் அமைக்க இதுவரை இலட்சக்கணக்கான பழங்குடியினர் தமது வாழிடங்களைவிட்டு வெளியேற்றப் பட்டுள்ளனர். தான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த இடத்தை இழந்து விரட்டப்படும் மக்கள் பல்வேறு வகையான அடக்குமுறைகளுக்கும் ஆளாகி வருகின்றனர். பழங்குடியினருள்ளும் மிகவும் ஒடுக்கப்பட்டவர் ஆங்கிலேய அரசால் சட்டத்தின் மூலம், குற்றமரபினர் என்று அறிவிக்கப்பட்டவர்களே. 1952ஆம் ஆண்டு அச்சட்டங்கள் திரும்பப்பெறப்பட்ட போதும், அவர்கள் தொடர்ந்து ஒதுக்கப்பட்டும், இழிவுபடுத்தப்பட்டும் வருகின்றனர்.

இம்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தீர்வு காணவும், அவர்களுக்கான உரிமைகளை வழங்கவும், 2006ஆம் ஆண்டு பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாகக் காடு சார்ந்து வாழ்வோர் (காடுகளின் மீதான உரிமைகளை அங்கீகரிக்கும்) சட்டம் [[The Scheduled Tribes and Traditional Forest Dwellers (Recognition of Forest Rights) Act]] நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வன உரிமைச் சட்டம், 2006 என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதில் இடதுசாரிகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

வன உரிமைச் சட்டத்தின் முக்கிய அம்சங்களாவன:

  • காடுகளை வாழிடத்திற்கும், வாழ்வாதாரத்திற்கும் சார்ந்திருக்கும் உரிமை பழங்குடியினருக்கு உண்டு.
  • வனச் சிறு மகசூல்களை இலவசமாகச் சேகரிக்கவும், விற்கவும் உரிமை; தங்கள் சொந்த தேவைக்கு மட்டும் வியாபார நோக்கமில்லாமல் மரம், மூங்கில் உள்ளிட்ட வனப்பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ள உரிமை; பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த பாதைகள், நீர்நிலைகளைப் பயன்படுத்த உரிமை; மேய்ச்சலுக்கான உரிமை.
  • தனிநபர் அல்லது சமூகத்திற்கான வன உரிமைகளை நிர்ணயம் செய்வதில் கிராம சபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

சில குறைபாடுகளைக் கொண்டுள்ள போதிலும், பழங்குடியின உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முக்கிய அங்கமாக வன உரிமைச்சட்டம் விளங்குகிறது. எனினும், பிரதமர் மோடி தலைமையிலான நடுவண் அரசு இச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கும், நலிவடையச் செய்வதற்குமான எல்லா வழிமுறைகளையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

முதலாவதாக, பழங்குடியினரைக் காடுகளிலிருந்து அப்புறப்படுத்தி, மறுவாழ்விடங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் அரசுத் திட்டங்களில், கிராம சபைக்கான அதிகாரங்கள் பல்வேறு சட்டத்திருத்தங்கள் மூலம் குறைக்கப்பட்டுள்ளன. இத்திருத்தங்கள் பழங்குடியினர் சமூகத்தைக் கலந்தாலோசிக்காமலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுரங்கங்கள் மற்றும் தாதுப்பொருட்கள் சட்டம், காடு வளர்ப்பு இழப்பீட்டு நிதிச்சட்டம் (CAMPA)மற்றும் வன உரிமைச் சட்ட விதிகள் ஆகியனவற்றில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களே இதற்குச் சான்றாகும்.

நடுத்தர அளவுள்ள நிலக்கரிச் சுரங்கங்களுக்கு (mid - sized coal mines)  கிராம சபையின் அனுமதி தேவை யில்லை என்ற விதிமுறை அமலாக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க. ஆளுங்கட்சியாகவோ அல்லது கூட்டணியிலோ இருக்கும் மாநில அரசுகள், இவ்விதிமுறைகளை அமல்படுத்தி வனஉரிமைச் சட்டத்தை மீறி வருகின்றன. சான்றாக, மகாராஷ்டிரத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ‘கிராம விதிமுறைகள்’ ((Village Rules) கிராம சபைக்குள்ள அதிகாரங்களை அரசால் அமைக்கப்படும் குழுக்களுக்கு வழங்கியுள்ளது.

அடுத்ததாக, தொழில் செய்வதை எளிதாக்குவது (ease of doing business) என்ற பெயரில் பழங்குடியினர் வாழிடங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் செயலாகும்.

காட்டுயிர்களுக்கான தேசிய வாரியம்  (NationaBoard for Wildlife) என்பது தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் அருகில் கொண்டுவரப்படும் திட்டங் களுக்கு அனுமதி அளிக்கிற அமைப்பாகும்.

பிரதமரைத் தலைவராகக் கொண்ட இவ்வமைப்பில், சார்பிலா வல்லுனர்கள் (independent experts)15 நபர்கள் இருக்க வேண்டும். அதை வெறும் மூன்றாகக் குறைத்து வெறும் அரசு அலுவலர்களை மட்டும் கொண்ட அமைப்பாக இதை மாற்றியது மோடி அரசின் சாதனையாகும் (!).

பதவியேற்ற மூன்று மாதங்களில் 41 திட்ட முன் மொழிவுகளில், 33 திட்டங்களுக்கு அனுமதி அளித்து, 7000 ஹெக்டேர் வனப்பரப்பில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள வளைந்து கொடுத்தது மோடி அரசின் மற்றுமொரு சாதனையாகும். இதில் பெருமளவு ஆதாயம் அடைந்தது குஜராத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் என்பது கூடுதல் செய்தி.

கடந்த இரு ஆண்டுகளில் 1.34 இலட்சம் ஹெக்டேர்களுக்கும் மேலான வனப்பரப்பு, வளர்ச்சித் திட்டங்களுக்காக மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது பல்வேறு பகுதிகளில் பழங்குடியினர் சமூகங்களின் இடப்பெயர்வுக்கு வழிவகுத்துள்ளது. ஆந்திரப்பிரதேசம், பொலாவரம் திட்டத்தால் மட்டும், 2 இலட்சம் ஹெக்டேர் காடு மூழ் கடிக்கப்படுவதால், 85,000-த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. இவற்றுள் பாதிக்கும் மேல் பழங்குடியினத்தவராவர். இதில் பெரும்பாலான திட்டங்களில், பழங்குடியினர் தமது நிலங்களுக்கான பட்டாவை இன்னும் பெறாதது, வன உரிமைச்சட்டம் விதித்திருக்கும் நிபந்தனைகளுக்குப் புறம்பானது.

அண்மையில், புலிகளின் வாழிடங்களில் வசிக்கும் பழங்குடியினருக்கோ, வேறு சமூகங்களுக்கோ வன உரிமைகள் எதையும் அளிக்க வேண்டாம் என்று மாநிலங்களுக்கு நடுவண் அரசு அறிவுறுத்தியுள்ளது (‘தி இந்து’ (ஆங்கிலம்), ஏப்ரல் 13, 2017) பழங்குடியினர் உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும்.

பா.ஜ.க. ஆட்சியில் பசு, புலி போன்ற விலங்குகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், மனிதர்களுக்கு அளிக்கப் படாதது கண்டனத்துக்கு உரியது. வெட்கக்கேடானது. சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் தமது உரிமைகளுக்காக வீதிக்கு வந்து போராடும் நாள் வெகு தொலைவில் இல்லை.

நன்றி : விடுதலை        

Pin It