ஆங்கில ஊடகம் 'தி பிரிண்ட்' இந்தியப் பொருளாதார நிலையை விளக்க ஒரு கதையை வெளியிட்டுள்ளது.

ஒரு மன்னர் தன் யானையிடம் மிகுந்த அன்பு கொண்டவராக இருந்தார். ஒரு நாள் அந்த யானை கடுமையான நோய்க்கு ஆட்பட்டது. இன்றோ நாளையோ இறந்துவிடும் என்னும் நிலை. மன்னருக்குத் தாள முடியாத வருத்தம். யானை இறந்த செய்தியை யார் என்னிடம் வந்து சொல்கிறானோ அவன் தலையை எடுத்துவிடப் போகிறேன் என்று அருகில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார். செய்தி எல்லா இடத்திற்கும் பரவி விட்டது.

nirmala seetharaman and elephantஅடுத்த நாள் யானை இறந்துவிட்டது. மன்னரிடம் போய்ச் சொல்ல யாருக்கும் துணிவு இல்லை. சொல்லாமல் இருக்கவும் முடியாது. இறுதியில், யானைப்பாகன் மன்னரைச் சந்தித்து, "மன்னர் மன்னரே, நம் யானை இன்று காலையிலிருந்து உணவு உட்கொள்ளவில்லை, அசையவில்லை, மூச்சு விடவும் இல்லை" என்றார். "அப்படியானால் யானை இறந்துபோய் விட்டதா?" என்று மன்னர் சினத்துடன் கேட்டார். "அது எனக்குத் தெரியாது. நீங்கள்தான் வந்து பார்த்து எல்லோருக்கும் செய்தி சொல்ல வேண்டும்" என்றார் யானைப்பாகன்.

இப்படித்தான் இருக்கிறது இன்றைய இந்தியப் பொருளாதாரத்தின் நிலை. வீழ்ச்சியை நோக்கி விரைந்து செல்லும் நம் பொருளாதாரம் ஏறத்தாழச் செத்துவிட்டது என்று பொருளியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால் அதனை அரசு மூடி மறைக்கின்றது. வேறு வேறு செய்திகளைச் சொல்லி உண்மையைத் திசை திருப்புகிறது.

குறிப்பாக, ஆட்டோமொபைல் துறையும், கட்டுமானத் துறையும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அதுபற்றிக் கேட்டால், முத்தலாக்கைத் தடை செய்துவிட்டோம் என்கின்றனர். மொத்தப் பொருளியல் உற்பத்தி 5% அளவிற்குக் குறைந்தது ஏன் என்று கேட்டால், காஷ்மீரைச் சொர்க்க பூமியாக்கப் போகிறோம் என்கின்றனர். நாளைய இந்தியாவின் பொருளாதாரம் பற்றி மக்கள் கவலையுடன் கேள்வி எழுப்பினால், அமெரிக்காவில் ஹவுடி மோடி நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது என்று சொல்கின்றனர். எல்லாவற்றையும் மீறிக் கேள்வி கேட்டால். 'இவர்களெல்லாம் ஆன்டி இந்தியன்' என்று சொல்லிக் கதையை முடித்து விடுகின்றனர்.

எந்த நிதி நெருக்கடியும் இல்லை என்று சொல்லும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்போது பல வரிச் சலுகைகளை அறிவித்துள்ளார். எந்த நெருக்கடியும் இல்லாதபோது வரியில் சலுகைகளை ஏன் அறிவிக்க வேண்டும்? ரிசர்வ் வங்கியிலிருந்து 1,76,000 கோடியை ஏன் பெறவேண்டும்? வங்கிகளை ஏன் இணைக்க வேண்டும்?

எந்தக் கேள்விக்கும் விடை இல்லை. யானை செத்துவிட்டது. அறிவிக்கத்தான் ஆள் இல்லை!

Pin It