அண்ணல் பாபாசாகேப் டாக்டர் பீம ராவ் அம்பேத்கர் அவர்கள் அறிவு நாணயத்தின் அரிய இலக்கணம் ஆவார்.
இந்தியாவில் இந்து சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட உழைப்பாளிகள் கூட்டத்தில், அறிவொளி வீசும் பல்துறைக் கல்வியைப் பெற்றவர் அம்பேத்கர். அவர் ஒரு சமுதாய அறிவியல் அறிஞர்; பொருளியல் மேதை; அரசியல் ஆய்வறிஞர்; மானிட உரிமைக்காவலர்; தான் பிறந்த வகுப்பின் அனைத்துத் துறை அடிமைத்தனங்களையும் அடித்து நொறுக்கி அவர்ளைச் சமஉரிமை பெற்ற மக்களாக ஆக்கிட அல்லும் பகலும் அயராது பாடுபட்டவர்.
அம்பேத்கர் ஓர் அறிவுக் கருவூலம். இந்தியாவிலுள்ள இந்துக்களில், ஆறில் ஒரு பங்கு உள்ள மக்கள், சமூகத்தில் இழிந்தவர்களாகவும் தீண்டத்தகாதவர்களாகவும் வாழ்க்கையை அனுபவிப்பதற்கு வேண்டப்படும் பெறுமானம் உள்ள எதையும் பெற்றிருக்க உரிமை அற்றவர்களாகவும் ஆக்கப்பட்டதை எண்ணி நெஞ்சம் நொந்தார். அவர்களின் விடுதலைக்கு அவர் அளித்த பங்களிப்பு ஈடு இணையற்றது.
அன்னார் வாழுங்காலத்திலேயே அவருடைய முழு வரலாற்றை எழுதி, அவரிடமே காட்டி அய்யங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டு, 1954 ஆம் ஆண்டே அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டார் அறிஞர் தனஞ்செய்கீர். அது ஆங்கிலத்தில் அமைந்தது.
அம்பேத்கரை - அவரின் பல்துறை அறிவாற்றலை - அவருடைய சாதனைகளை அறிந்திட ஏற்ற இந்நூலை, சோழிங்கபுரம் அறிஞர் க.முகிலன் என்கிற அ.கிருட்டிணன் தமிழாக்கம் செய்து அளித்தார். அதனை அழகிய நூலாக, 12. 06.1992 இல் வெளியிட்டுத் தமிழக மக்கள் அண்ணல் அம்பேத்கரை அறிந்திட உதவும் அரிய பணியை, மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி ஆற்றியது.
1915 இல் ஒட்டுமொத்த இந்தியாவில் வாழ்ந்த மக்களில் எழுத்தறிவு பெற்றவர்கள் 5% பேரே ஆவர். அவர்கள் இந்து மேல் வருணத்தைச் சார்ந்த பிராமணர், சத்திரியர், வைசியர் வகுப்பில் பிறந்தவர்கள்.
அப்படிப்பட்ட அறிவு இருள் சூழ்ந்த இந்தியாவில் தம் இடையறா முயற்சியால் மிக உயர்ந்த கல்வித் தகுதியைத் தேடிப் பெற்றார் அம்பேத்கர். அவர் பெற்றிருந்த செழுமையான அறிவுதான், எதிரிகளோடு மோதிட அவருக்கு அற்றம் காக்கும் ஆற்றல் வாய்ந்த கருவியாகப் பயன்பட்டது.
அவர் பிறப்பால் தாழ்ந்தவர் என்று இழித்துக் கூறி, அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அன்று பரோடா சுதேச அரசில் அவர் ஓர் உயர் அதிகாரி; கற்றறிந்த மேதை; ஆயினும் தீண்டத்தகாதவர். அவருடைய வாழ்நாளில் இதை எண்ணிக் கதறிக் கண்ணீர் விட்ட முதலாவது நிகழ்ச்சி அதுதான்.
சமுதாயத்தில் சமஉரிமையும், அரசியலில் விகிதாசாரப் பங்கு உரிமையும், பொருளாதாரத்தில் தற்சார்பும் பெற்றாலொழிய - இழிவாக நடத்தப்படுவதிலிருந்து தீண்டப்படாதார் மீளமுடியாது என்பதில் உறுதிப்பட நின்றார், அம்பேத்கர்.
தீண்டப்படாத வகுப்பினரின் சமூக விடுதலைக்காக அவர் தொடுத்த முதலாவது போராட்டம் 1927 இல் நடைபெற்றது. பொதுக்குளத்தில் குடிநீர் எடுக்கும் போராட்டமே அது.
அத்தகைய போராட்டத்தை, பொதுச்சாலையில் தீண்டப்படாத வகுப்பினர் நடப்பதற்கான உரிமையைப் பெறவேண்டி 1924 - 25 இல், திருவாங்கூரில் வைக்கத்தில் நடத்துவதில் முதன்மையாக விளங்கினார், ஈ.வெ.இராமசாமி. அதை அப்போதே அறிந்து பெருமிதங்கொண்ட அம்பேத்கர், தீண்டாமையையும், பிறவி சாதி வருண வேறுபாட்டையும் கற்பித்துச் சுமத்திய மனுநீதியை 1927 இல் எரித்துக் காட்டினார்.
அரசியல் சட்டங்கள் உருவாக்கப்படும் அவைகளில் தீண்டப்படாதோருக்குத் தனி இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை வென்றெடுத்திட 1930,1932,1933 ஆகிய நான்கு ஆண்டுகளில் இலண்டனில் பெரும்பகுதி நாள்கள் தங்கி, பிரிட்டிஷ் அரச அமைச்சர்களையும், உயர் அதிகாரிகளையும் மக்கள் அவை உறுப்பினர்களையும் கண்டுபேசி, தம் கோரிக்கையில் உள்ள பொருத்தப்பாட்டையும் நியாயத்தையும் அவர்களுக்குப் புரிய வைத்தார்.
அதற்காக அமைக்கப்பட்ட கூட்டுக்குழுக் கூட்டம், 1933 மார்ச்சில் இலண்டனில் நடைபெற்றது. பிரிட்டிஷ் இந்தியப் பேராளர்கள் 17 பேர்; சுதேச இந்திய அரசுகளின் பேராளர்கள் 7 பேர்; பிரிட்டிஷ் நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் 32 பேர் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர்; அய்ந்தாம் ஜார்ஜ் மன்னர் என 58 பேர் கூடிய அக்கூட்டத்தில் - முறையான ஆராய்ச்சிக் கல்வியைக் கற்று டாக்டர் பட்டத்தைப் பெற்றிருந்த ஒருவர் டாக்டர் அம்பேத்கர் மட்டுமே ஆவார்.
அதனால்தான் அன்று அவருடைய அரசியல் கோரிக்கையை அவையினர்க்கு விளக்கவும், வென்றெடுக்கவும் முடிந்தது. ஆயினும் அவருடைய திட்டத்தை முடப்படுத்திட, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மேற்கொண்ட போராட்டத்தினால், அம்பேத்கர், இன்று நடைமுறையிலுள்ள தனித்தொகுதி முறையை ஏற்க வேண்டியவரானார்.
சட்ட அவைகளில் விகிதாசாரப் பங்கினை வென்றெடுத்த அவர், அரசு ஆட்சி அதிகாரத்தில் - பதவிகளிலும் வேலைகளிலும் பங்குபெறும் முயற்சியை 1942 இல் மேற்கொண்டார். அன்று அவர் இந்திய அமைச்சர் அவையில் தொழிலாளர் நல அமைச்சராக விளங்கினார். அவர் கோரிய 12.5 விழுக்காட்டுக்குப் பதிலாக, 8.33 விழுக்காட்டு இடஒதுக்கீட்டை 11.08.1943 இல் மத்திய அரசு வேலைகளில் பெற்றுத்தந்தார்.
அத்தகைய ஓர் இடஒதுக்கீட்டை, 1935 இல் சென்னை மாகாண எல்லைக்குள் இருந்த மத்திய அரசுத் துறை வேலைகளில் தீண்டப்படாத வகுப்பினருக்கும், பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கும் நீதிக்கட்சி ஆட்சியின் முதலமைச்சர் பொப்பிலி அரசரும், ஈ.வெ.இராமசாமியும், ஏ.இராமசாமி முதலியாரும் வருந்தி முயன்று பெற்றுத் தந்தனர்.
இதற்கு முன்னரே, 1930 முதலே அம்பேத்கரின் பெருமையை அறிந்திருந்த ஈ.வெ.ரா 1931 இல் விருதுநகரில் நடைபெற்ற சென்னை மாகாண மூன்றாவது சுயமரியாதை மாநாட்டுக்குத் தலைமை ஏற்றிட, எம்.ஆர். ஜெயகர் மூலம் அவரை அழைத்தார். ஆயினும் பம்பாய் மாகாணத்தில் சுயமரியாதை மாநாட்டை நடத்துவதில் முனைந்திருந்த அம்பேத்கர், சென்னை மாகாண மாநாட்டுக்கு வர இயலவில்லை.
வருண ஒழிப்பில் அம்பேத்கர் மேற்கொண்டிருந்த ஆர்வம், மிகவும் திண்ணிய சட்டமேதைத் தன்மையைக் கொண்டிருந்தது.
வெள்ளையர் ஆட்சிக்காலத்திலேயே இந்துச் சட்டத்திருத்த மசோதா ஒன்றை, காங்கிரசுக் கட்சியின் சார்பில் பி.என்.ராவ் (B.N.RAU) என்பவர் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்திருந்தார். அதில் இல்லாத சிறப்புக் கூறுகளைக் கொண்ட இந்துச் சட்டத்திருத்த மசோதா ஒன்றை டாக்டர் அம்பேத்கர், சட்ட அமைச்சர் என்ற முறையில், 1947 இல் முன்மொழிந்தார்.
இந்துப் பெண்களுக்கு மறுக்கப்பட்ட பல உரிமைகளைப் பற்றிய கூறுகள் இரண்டு மசோதாக்களிலும் இருந்தன. ஆயினும் அம்பேத்கர் முன்மொழிந்த மசோதாவில், “அன்று வரையில் நடப்பில் இருந்த இந்துமதப் பழக்க வழக்கச் சட்டங்கள் இனிமேற்கொண்டு செல்லாது” என்கிற உயிரான வருண ஒழிப்புக் கொள்கையும் அடங்கியிருந்தது. இதனை காங்கிரசாரும், இந்து மதத்தலைவர்களும் தொடக்கத்திலேயே வன்மையாக எதிர்த்தனர். 1951 இல் இப்பகுதியைத் தள்ளுபடி செய்தனர். இதில் மனம் நைந்த டாக்டர் அம்பேத்கர், 1951 செப்டம்பர் 27 அன்று அமைச்சர் பதவியைத் துறந்தார்.
அரசமைப்புச் சட்டம் 26.11.1949 இல் நிறைவேற்றப்பட இருந்தது. அச்சட்டதில் உள்ள குறைபாடுகளை முன்கூட்டியே நன்கு அறிந்திருந்த அம்பேத்கர், ஒளிவு மறைவு இன்றி, 25.11.1949 அன்றே, பின்வரும் தன்மையில், தம் நிலைப்பாட்டைக் குறித்து விளக்கம் அளித்திருந்தார்.
“தீண்டப்படாத வகுப்பு மக்களின் உரிமைகளைக் காப்பதற்காக மட்டுமே நான் அரசியல் சட்ட அமைப்பு அவையில் நுழைந்தேன்...
அரசியல் சட்டம் கொண்டுள்ள கோட்பாடுகள் இன்றைய தலைமுறையினரின் கருத்துக்களைப் பிரதிபலிப்பவையாகும். இக்கூற்று மிகைப்படுத்திக் கூறப்படுவதாகக் கருதப்பட்டால், இக்கோட்பாடுகள் இந்த அவையினுடைய உறுப்பினர்களின் கருத்து எனக் கொள்ள வேண்டும்...” என்பதே அவர் வெளிப்படையாக அளித்த கருத்து ஆகும்.
இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும், மேதை அம்பேத்கர், இந்தியாவில் உண்மையான மக்கள் நாயக ஆட்சியை நிறுவுவதற்கான ஓர் அரசியல் கோட்பாட்டை 1948 இல் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் முன் வைத்தார். அது யாது?
“தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் ஒன்றுபட வேண்டியது பற்றிக் குறிப்பிட்டேன். அம்மாநாட்டில் பங்கு கொண்ட பிற்படுத்தப்பட்டோர் தலைவர்களின் வேண்டுகோளின் பேரில் இதைச் செய்தேன். இந்த இரு பிரிவு மக்களின் தேவைகள் ஒன்றுபோல் உள்ளவையாக இருந்துங்கூட, இவர்கள் ஒன்று சேராதது கவலைக்குரியது என்பதை நான் அங்குக் குறிப்பிட்டேன்”.
“தாழ்த்தப்பட்டோருடன் நாம் ஒன்று சேர்ந்தால் அவர்களுடைய சமுதாய நிலைக்குத் தாழ்ந்து விடுவோம் என்று பிற்படுத்தப்பட்டவர்கள் நினைப்பதுதான் இந்த நிலைமைக்குக் காரணம் ஆகும்...”
“தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் இந்நாட்டு மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் என்று நான் குறிப்பிடும்போது, இவர்கள் இந்த நாட்டை ஏன் ஆளக் கூடாது என்பதற்குத் தடையாக எந்தக் காரணமும் இல்லை”.
“நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் இவர்களை ஒன்று திரட்ட வேண்டியதுதான். வயது வந்தோருக்கு வாக்குரிமை வந்துவிட்ட நிலையில், அரசியல் அதிகாரம் இவர்களுக்கு உரிமை உடையதாகும்”.
(லக்னோவில், 25.04.1948 இல் தாழ்த்தப்பட்டோர் பேரவை மாநாட்டில் உரை)
மேதை அம்பேத்கரின் கூர்த்தமதி தந்த இந்த அறிவுரை, இந்திய அரசு அமைப்பில், இந்நாட்டின் பெரும்பான்மையான மக்களே ஆட்சியாளர்ளாக இருக்க வேண்டும் என்பதைத் துல்லியமாக விளக்குகிறது. ஆயினும் அம்பேத்கரின் மேதைத் தன்மையை வியந்து பாராட்டும் பிற்படுத்தப்பட்டோரோ, தாழ்த்தப்பட்டோரோ - தென்னாட்டிலோ, வடநாட்டிலோ, 62 ஆண்டுகளுக்குப் பின்னரும், 2010 ஆம் ஆண்டிலும் இதை உணரவில்லை. அதற்கு நேர்மாறாக இவர்களைப் பிரித்து வைப்பதிலேயே ஆளும் மேல் சாதி வகுப்பினர் கண்ணுங்கருத்துமாக உள்ளனர்; இவ்விரு வகுப்பினரும் இதற்குப் பலியாகிப் பிரிந்து பிரிந்து கிடப்பதிலேயே நாட்டம் கொண்டுள்ளனர்; அதனால் நலிவுறுகின்றனர்.
மக்கள் நாயகத்தில் நம்பிக்கை கொண்டோரும், மார்க்சியம் - லெனினியம் பற்றிப் பேசுவோரும், பெரியாரியம் - அம்பேத்கரியம் பற்றிக் கூரை மீதிருந்து கூவுவோரும் இனியேனும் இதுபற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
1946 - 1949 களில் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டம் அன்றைய பழைய தலைமுறையினரின் கருத்துகளைக் கொண்டது என்பதை, 25.11.1949 அன்றே நாடாளுமன்றத்தில் முழங்கிய மேதை அம்பேத்கர், அவருடைய அறிவு நாணயத்தின் உயரிய சிந்தனையின் வெளிப்பாடாக, 02.09.1953 முற்பகலில், நாடாளுமன்ற மேலவையில் பின்வரும் அரிய உண்மைகளை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.
நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், 02.09.1953 அன்று ஆந்திர மாநிலப் பிரிவினை பற்றிய மசோதா மீது தீவிரமான விவாதம் நடைபெற்றது.
அதுசமயம், பெரும்பான்மையாக உள்ளவர்களின் (சாதி இந்துக்களின்) அடக்குமுறைகள், சாதியக் கொடுமைகள் ஆகியவற்றிலிருந்து தீணடப்படாத வகுப்பு மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திட, தீண்டாமை ஒழிப்பு மசோதாவில் வழிவகை செய்யப்படவில்லை என்பதற்காக, உள்துறை அமைச்சர் கட்ஜுவின் (லுழிமிளூற்) பேரில் அம்பேத்கர் குற்றஞ் சுமத்தினார். அவர் தொடர்ந்து பேசுகையில் :
“நம்மிடையே ஒரு மரபு இருக்கிறது. நீங்கள்தானே அரசியல் சட்டத்தை உருவாக்கிய தந்தை என்று என்னிடம் எப்போதும் பலரும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு என்னுடைய பதில் இதுதான் : நான் ஒரு வாடகைக் குதிரைக்காரன் போல் பயன்படுத்தப்பட்டேன். என்னை என்ன எழுதச் சொன்னார்களோ, அதை, என் விருப்பத்துக்கு மாறாகச் செய்தேன்” என, ஓங்கி அறைந்தார்.
விவாதம் மேலும் சூடு பிடித்தது; உணர்ச்சி கொப்பளித்தது. உள்துறை அமைச்சர் கட்ஜு, அம்பேத்கரை நோக்கி, “நீங்கள்தானே அரசியலமைப்புச் சட்டத்தை வரைவு செய்தீர்கள்” என்று கூறி, அவருடைய சினத்தீயில் எண்ணெயைக் கொட்டினார். வெகுண்டெழுந்த அண்ணல் அம்பேத்கர், “நான்தான் இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியதாக நண்பர்கள் என்னிடம் சொல்கிறார்கள். ஆனால் இங்கே நான் ஒன்றைச் சொல்லத் தயாராக இருக்கிறேன். இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தைக் கொளுத்துகின்ற முதல் ஆளாக நான் இருப்பேன். இந்த அரசியல் அமைப்புச் சட்டம் எனக்கு வேண்டாம். யாருக்குமே இது நன்மை செய்யாது - I do not want it. It will not help any body” என இடிபோல் முழங்கினார் அம்பேத்கர்.
மேதை அம்பேத்கரின் அறிவு நாணயத்தை (intellectual honesty)அனைத்துலகுக்கும் பறைசாற்றும் அரிய இலக்கணமாக அவர்தம் மேற்கண்ட கூற்றுகள் இலங்குகின்றன என்பது உண்மையிலும் உண்மை.
இந்தியா முழுவதிலும் உள்ள இந்து பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மதச் சிறுபான்மையினரான சீக்கியர், இஸ்லாமியர், கிறித்துவர் ஆகியோரை உள்ளடக்கிக் கொண்டுள்ள 85 விழுக்காடு மக்களாகிய வெகுமக்கள் - அரசியல், சமூக, பொருளாதாரத் துறைகளில் விடுதலை பெற்றிட வேண்டி இவர்கள் ஒன்றுபட வேண்டும்; போராட வேண்டும் இவர்களுக்கான புதியதொரு அரசமைப்புச் சட்டத்தை - புதியதோர் இந்தியாவை உருவாக்க வேண்டும்.
பெரியாரிய - அம்பேத்கரிய நெறியில் சமதர்ம - மதசார்பற்ற - பிறவி வருண வேறுபாடு அற்ற - பெண்ணடிமை ஒழிந்த புதிய சமுதாயத்தைப் படைக்க வேண்டும் என்ற உணர்வையும் உந்துதலையும் பெற - அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் ஒரு திறவு கோல் ஆகும். இத்திறவு கோலை நுழைத்து இருட்டறையின் கதவுகளைத் திறந்திடுங்கள்.
வீடுதோறும் இந்நூலின் ஒரு படியைப் பெற்று வையுங்கள். படியுங்கள்! கற்றிடுங்கள்! போராடுங்கள்! ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் புதிய விடுதலைக்கான படையை உருவாக்குங்கள்!