ஒரு தேசத்தில் கடன் வாங்க மற்றும் கொடுக்க அரசால் நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதம் மிக முக்கியமானதாகும். இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு வட்டி விகிதத்தைக் கட்டுப்படுத்துகின்றது. தேசத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வட்டி விகிதத்தைக் குறைப்பது ஒரு வகை யுக்தி. குறைந்த வட்டிக்கு கடன் கிடைப்பதனால் நிறுவனங்களின் வளர்ச்சி மேம்படும். இதனால் வேலை வாய்ப்புகளும் அதிகரித்து வேலையின்மை விகிதம் குறைய ஆரம்பிக்கும். இது மிகவும் நல்ல விசயமாகும். இதனால ஏற்படும் ஒரு பாதிப்பு என்னவென்றால் பணவீக்கமாகும். தேசத்தின் நாணய மதிப்பும் உலக பொருளாதாரத்தில் குறைந்து விடும். இந்திய ரிசர்வ் வங்கியின் கடந்த 4 வருட வட்டிவிகிதத்தைப் பற்றி ஆய்வு செய்து அதன் விளைவுகள் இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் 2008-ஏப்ரல் 2009 ஆறு மாத கால கட்டத்தில் வட்டி விகிதம் 47 விழுக்காடு குறைப்பு

அக்டோபர் மாதம் 2008இல் வட்டி விகிதம் 9 விழுக்காடாக இருந்தது. பண வீக்க விகிதம் 6 விழுக்காடு இருந்தது. இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவைக் கட்டுப்படுத்தவும், வீட்டின் விலை மதிப்பைச் செயற்கையாக உயர்த்தவும், இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைப் படிப்படியாக ஆறுமாத காலத்திற்குள் குறைத்து 4.75 ஆக மாற்றியது. இதன் பக்க விளைவால் இந்தியாவின் பணவீக்க விகிதம், 6லிருந்து 14 விழுக்காடாக உயர்ந்தது. பங்குச் சந்தை புள்ளியும், வீட்டின் விலை மதிப்பும் உயர ஆரம்பித்தது.

வீட்டின் விலை மதிப்பு உயரக் காரணம் செயற்கையாக உண்டாக்கப்பட்ட தேவையே!

மார்ச் மாதம் 2009இல் வட்டி விகிதம் 4.75 விழுக்காடாக இருந்ததால், வீடு வாங்க தவணை முறை கடனின் வட்டி விகிதமும் குறைந்து 7 விழுக்காடாக மாறியது. குறிப்பாக இது அக்டோபர் மாதம் 2008இல் 11.25ஆக இருந்தது. இந்த அதிரடி வட்டி விகிதக் குறைப்பால் வீடு வாங்க முனைவோர் எண்ணிக்கையும் மிக அதிகமானது. இந்த செயற்கையான தேவையால் வீட்டின் விலை மதிப்பும் கிடுகிடுவென ஏறத் தொடங்கியது. இதில் மிக முக்கியமான விசயம் என்னவென்றால், இந்த குறைந்த வட்டி வீடு வாங்கியோர்க்கு ஓராண்டு காலம் வரைதான். அதன் பிறகு அவர்களது மாத தவணை மிகவும் கூடவும் வாய்ப்புள்ளது. இந்த நிலைதான் இன்றைய நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் அதிரடியான வட்டி விகித ஏற்றமும் வீட்டின் விலை மதிப்பு குறைவும்:

2009-2010இல் பணவீக்க விகிதம் கட்டுக்கடங்காமல் 14 விழுக்காடு வரை சென்றது. இதன் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் கீழ்கண்ட அட்டவணைப்படி உயர்த்தியது. இதன்படி ஏப்ரல் 2009இல் வீடு வாங்கியுள்ளோர் தற்போது 7 விழுக்காட்டிலிருந்து 9.25 விழுக்காடு வட்டி கட்ட வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொடர்ந்து ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை ஏற்றினால், வீடு வாங்கியவர்களின் நிதி நிலை கவலைக்கிடமாகத்தான் இருக்கும்.

தேதி   வட்டி விகிதம்%

மே 03,2011  7.25%

மே 17,2011  6.75%

சனவரி 25,2011      6.50%

நவம்பர் 02,2010     6.25%

செப்டம்பர் 16,2010   6.00%

சூலை 27,2010       5.75%

சூலை 02,2010       5.50%

ஏப்ரல் 20,2010      5.25%

மார்ச் 19,2010 5.00%

ஏப்ரல் 21,2009      4.75%

தற்போதுள்ள அதிக வட்டி கடனால் வீடு வாங்குவோர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. வீட்டின் விலை மதிப்பு இப்போதுதான் குறையத் தொடங்கியிருக்கிறது. ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை ஏற்றினாலோ அல்லது இந்தியாவின் வேலையின்மை விகிதம் அதிகரித்தாலோ, வீட்டின் விலைமதிப்பு 30 விழுக்காடு வரை குறைவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.

இணையம்: http://www.softwareandfinance.com

Pin It