சாதி ஆதிக்கத்தை மோதி மிதித்த தந்தை பெரியாரின் சிந்தனைகளை, சொல்லணா சிரமங்களுக்கு ஆட்பட்டு, அலைந்து திரிந்து, எங்கெங்கோ தேடிப் பிடித்து தருவதாக சொன்னவர்கள் எல்லாம் தராமல் ஏமாற்றிய பிறகும், எண்பது ஆண்டுகள் கடந்ததால் சிதைந்தும் நொறுக்கியும் இருந்த இதழ்களை சேகரித்து படியெடுத்து ஒவ்வொரு கட்டுரையை தயாரிப்பதற்கும், இரண்டு மூன்று இதழ்களை ஒப்பிட்டு இறுதியாக்கி அவற்றை தட்டச்சு செய்து ஒன்றுக்குப் பல முறை பிழை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அச்சேற்றப்பணி மேற்கொள்ளப்பட்டு அவ்வாறாக பணி மேற்கொண்ட தோழர்களுக்கு தங்களுக்குள் முறை வைத்து ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் சமைத்து பேருந்துகளிலும் வாகனங்களிலும் கொண்டு வந்து குடும்ப உறுப்பினர்களைக் கொண்டே பரிமாற வைத்து, புத்தகங்களை தூக்கி சுமந்து அவற்றை நீதிமன்ற வழக்கு காரணமாக பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்து தீர்ப்புக்குப் பின்னர் முன்பதிவு செய்தவர்களுக்கு தேடி வழங்கியது என பட்டியலிடவே மலைப்பாக இருக்கிற பணிகளை ஆற்றிய எத்துணையோ முகம் தெரியாத பெரியாரியல் தொண்டர்களின் உழைப்பை முதலீடாக்கி குடிஅரசு தொகுப்புகள் நம் கைகளில் தவழ்கிறது என்று எண்ணுகையில், இந்த மாபெரும் வரலாற்றுப் பணியில் நம் உழைப்பு இல்லாமல் போய்விட்டதே எனும் ஏக்கம் நெஞ்சை நிறைக்கிறது. 

இடையில், முன்வெளியீட்டு திட்டத்துக்காக, ஓயாது பயணித்து நிதி சேகரித்த தோழர்கள், குடிஅரசு ஏடுகளை சேகரிக்கவும்,கணினியாக்கவும், அச்சேற்றவும் உதவியாக இருந்த எண்ணற்ற தோழர்களின் அர்ப்பணிப்பு மிக்க தோழர்களின் உழைப்பு என்றென்றும் தமிழர் சமுதாயத்தால் நன்றி பாராட்டத்தக்கதாகும். நெருக்கடியான கழகப் பணிகளுக்கு இடையில் தோழர்களோடு தோழர்களாக சின்ன சின்ன வேலைகளைக்கூட இழுத்துப் போட்டு செய்து, இன்று 1925 முதல் 1938 வரையிலான குடிஅரசு தொகுப்புகளில் முழு செய்திகளையும் அறிந்தவராக உள்ள கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தொகுப்பு முழுவதையும் படித்து ஒவ்வொரு தொகுப்புக்கும் தொகுப்புரை வழங்கியுள்ள பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், தொகுப்புப் பணிகளில் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தோழர்கள் தமிழ்க்குரிசில் தாமரைக்கண்ணன் உள்ளிட்ட தோழர்களின் உழைப்பு என்றென்றும் வீண் போகாது.

- என்றும் சாதி ஒழிப்புப் பணியில் நீலவேந்தன், ஆதித் தமிழர் பேரவை, கோவை.

Pin It