ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பே, அம்மையார் கொடுத்த முதல் அடி அன்னைத் தமிழுக்குத்தான்! எழிலார்ந்த புதிய சட்டமன்றக் கட்டிடத்தைப் புறக்கணித்து, பழைய கோட்டைக்கே மீண்டும் அவர் பயணப்பட்டார். மிகப்பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டை இனிமேல் உதவாது என்று சொல்லி, ராணி மேரிக் கல்லூரியைத் தலைமைச் செயலகம் ஆக்க முயன்றதும், பின்பு கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய சட்டமன்றக் கட்டிடத்திற்கு கால்கோள் விழா நடத்தியதும் அவர்தான். ஆனால் இப்போது பழைய கோட்டைதான் பரவசமானது என்கிறார். போகட்டும், அதன் விளைவு என்ன என்பதுதான் நமக்குக் கவலையை ஏற்படுத்துகிறது. புதிய சட்டமன்றம் அமைந்த பிறகு, பழைய கோட்டையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரால் செம்மொழி ஆய்வு நூலகம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கே அரிய செவ்வியல் இலக்கியங்கள் பலவும், பழம் ஓலைச் சுவடிகள் பலவும் வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தையும் அகற்றிவிட்டுத்தான் புதிய சட்டமன்ற வளாகம் இப்போது அங்கு உருவாக்கப்பட்டுள்ளது. பழம் நூல்கள், ஓலைச் சுவடிகள், தமிழ் அறிஞர்களின் படங்கள் என்னாகுமோ என உணர்வாளர்கள் கவலை கொள்கின்றனர். அம்மையார் ஆட்சியில் தமிழுக்குத்தான் முதல் அடி விழுந்திருக்கிறது.
சந்தேகம்
1 நான் ஆட்சிக்கு வந்தவுடன் சங்கிலித் திருடர்கள், கொள்ளைக்காரர்கள் எல்லோரும் ஆந்திராவுக்கு இரயிலேறி விட்டார்கள் என்றார் ஜெயலலிதா. அடுத்தடுத்த நாட்களிலேயே ஒரு சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் நகை பறிப்பு, ஒரு காவல்துறை அதிகாரியின் வீட்டில் திருட்டு என்று வரிசையாய்ச் செய்திகள் வருகின்றன. ஒரு வேளை ஆந்திராவுக்குப் போன திருடர்கள், அங்கிருந்த கொள்ளைக்காரர்களையும் அழைத்துக்கொண்டு அடுத்த இரயிலில் இங்கு வந்துவிட்டார்களோ ?
2 கலைஞர் கட்டிய புதிய சட்டமன்றக் கட்டிடத்தைப் பயன்படுத்த மறுத்துவிட்டார் ஜெயலலிதா. கலைஞர் உருவாக்கிய புதிய புதிய பாலங்கள், பெரிய பெரிய சாலைகளையும் இனி அவர் பயன்படுத்த மாட்டாரோ?
விடுதலைக்குத் தடை
புதிய ஆட்சி பொறுப்பேற்றவுடன், ஏராளமான பணிகளை எதிர்கொள்ள வேண்டிய தேவை இருக்கும். ஆனால் அம்மையாரின் ஆட்சி அவசர அவசரமாக ஓர் ஆணையை எல்லா மாவட்ட நூலகங்களுக்கும் அனுப்பி வருகிறது. தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பெற்று, அறிஞர் அண்ணா ஆசிரியராகப் பணியாற்றிய, இன்றும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிற விடுதலை நாளேட்டினை இனிமேல் அரசு நூலகங்களில் வாங்கக் கூடாது என்பதுதான் அந்த ஆணை. திராவிட இயக்கக் கருத்துகள் மக்கள் மத்தியில் பரவிவிடக் கூடாது என்பதில்தான் இந்த அரசுக்கு எவ்வளவு அக்கறை !