அண்மையில் கைது செய்யப்பட்டுள்ள, நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்ச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மாண்புமிகு தமிழக முதல்வர், தலைவர் கலைஞர் அவர்கள், அச்சட்டத்தின் பிடியிலிருந்து அவரை விடுவிக்க வேண்டுமென்று, 17.07.2010 அன்று, சென்னை, தியாகராய நகரில் நடைபெற்ற, கூட்டத்திலேயே ஒரு வேண்டு கோளைத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை முன்வைத்தது.
இவ்வேண்டுகோள், சீமானையோ, அவர் வழி நடத்தும் நாம் தமிழர் இயக்கத்தின் போக்குகளையோ நாம் அப்படியே ஆதரிக்கின்றோம் என்று பொருள் தராது.
திராவிட இயக்கம் குறித்த அவர்களின் பார்வையிலிருந்து நாம் முற்றிலுமாக வேறுபடுகின்றோம். தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது திராவிடம் என்னும் நச்சுக் கருத்தை வெளியிடும் கட்டுரைகள், அவர்களின் இணையத்தளத்தில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. விரைவில் வெளிவரவிருக்கும், “வென்றது ஆரியம், துணைநின்றது திராவிடம்” என்னும் நூலுக்கான விளம்பரமும் இணையத்தளத்தில் காணக்கிடக்கிறது. அந்த நூலை யாரோ ஒருவர் எழுதவில்லை. அந்நூலின் இரண்டு ஆசிரியர்களில் ஒருவர் ‘செந்தமிழன் சீமான்’ என்று இருக்கிறது.
“சாதிச் சகதியிலிருந்து பிடுங்கி, இந்த மண்ணில் என்னை மனிதனாக நட்டவர் தந்தை பெரியார்” என்று பேசியவர் சீமான். இப்போது அந்த முகம் ஏனோ மங்கலாகிக் கொண்டிருக்கிறது.
இதனை விடவும் துயரமானது - சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர் நடந்துகொண்ட முறை. ஜெயலலிதாவைப் பார்த்து ‘ஈழத்தாய்’ என்று சொன்னபோது, ஜெயலலிதாவிற்கே சிரிப்பு வந்திருக்கும். ‘ இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்றும் அவர் பேசினார். அப்படிச் சொல்லும்போது, கூட்டத்திலிருந்து திடீரென அ.தி.மு.க. கொடிகள் மேலெழுந்து அசைந்தாடின. எனவே அவருடைய தமிழக அரசியல் போக்குடன் நமக்கு எந்த உடன்பாடும் இல்லை.
எனினும், ஈழ மக்கள் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்ததிலும், ஆதரிப்பதிலும், நமக்கும், நாம் தமிழர் இயக்கத்திற்கும் ஒத்த கருத்துகளே உள்ளன. பின்பற்றும் முறைகளிலும், பேசும் விதத்திலும் வேண்டுமானால் வேறுபாடுகள் இருக்கலாம்.
தமிழக மீனவர் செல்லப்பன் சிங்களப் படையினரால், அடித்துக் கொல்லப்பட்டபோது, தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தின. அனைவரும் கண்டித்துப் பேசினர். அவற்றுள், சீமான் பேச்சு சற்றுக் காரம் மிகுந்ததாக இருந்திருக்கலாம்.
அது உணர்வின் வெளிப்பாடுதானே! தன் உறவுகளின் உயிர்கள் பறிக்கப்படும்போது, இயல்பாக எழும் கொந்தளிப்புதானே! தலைவர் கலைஞர் அவர்களே, அது நீங்கள் ஊட்டிய உணர்வுதானே!
ஆதலால், நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானை விடுதலை செய்து, தன்னுடைய ஜனநாயகப் பண்பை மீண்டும் ஒரு முறை தலைவர் கலைஞர் நிலைநாட்ட வேண்டுமென்று, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
- சுப.வீரபாண்டியன்