ஆசியாவில் முக்கியத்துவம் வாய்ந்த இரு நாடுகளில் ஒன்று இந்தியா, மற்றொன்று சீனா. ஆசியான் என்று அழைக்கப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அமைப்பின் 15ஆவது உச்சி மாநாடு கடந்த 2009 அக்டோபர் 23, 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் தாய்லாந்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட சீனப் பிரதமர் வென் ஜியாபாவுடன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,

“இந்தியா-சீனா இடையிலான எல்லைப்பிரச்சனை மிகவும் சிக்கலானது. இது தொடர்பாக அண்மையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க இருநாடுகளும் ஒத்துழைக்க வேண்டும். இரு நாடுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் உறவுக்குத் தடையாக இருக்கக் கூடாது என்று இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைப் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடியும். இரு நாடுகளுக்கு இடையே அரசியல் ரீதியான நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்த உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை இருவரும் ஏற்றுக் கொண்டோம்” என்று மன்மோகன் சிங் கூறியிருக்கிறார். china_srilankan_leaders
பாராட்டப்பட வேண்டிய, நடைமுறைப்படுத்தப்படவேண்டிய, வரவேற்கத்தக்க அறிக்கை இது. ஆனால் சீனாவின் கடந்தகால - நிகழ்கால அணுகுமுறைகளைப் பார்க்கும் போது, சீனா, இந்தியப் பிரதமரின் கருத்துக்கு மதிப்பளிக்குமா? ஒத்துழைக்க முன்வருமா? என்பது ஐயப்பாட்டிற்குரியதாக உள்ளது.

அக்டோபர் திங்கள் 1, 1949 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசை நிறுவிய மாசேதுங், திபெத் பிரச்சினையில் இந்தியாவுடன் முரண்பட்டார்.

1954 ஆம் ஆண்டு இந்தியா வெளியிட்ட வரைபடம் தொடர்பாக ஏற்பட்ட சீன அத்துமீறல் பற்றி அன்றைய பிரதமர் நேரு ‘மக்மோகன் எல்லைக் கோடு’ எனக் குறிப்பிட்டு சீனப்பிரதமர் சூயயன்லாய்க்கு எழுதிய கடிதத்தை சீனா நிராகரித்தது. இந்திய வரைபடத்தில் உள்ள 1,04,000 கிலோ மீட்டர் நிலப்பரப்பு அல்லது பகுதிகள் சீனத்துக்குச் சொந்தம் என்று அவர் சொன்னார்.

1962 அக்டோபர் 20 ஆம் நாள் எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்திய- சீனப் போர் மூண்டது. 1967 இல் மீண்டும் மோதல்கள்.

1971 இல் இந்திய சோவியத் ஒப்பந்தத்தின் போது, இந்தியாவை சோவியத்தின் கைக்கூலி என்று ஐக்கிய நாடுகள் சபையில் பேசியது சீனா! 1984 இல் அத்து மீறி அருணாசலப்பிரதேசத்தில் சீனப்படை நுழைந்தது. இந்தியப்படை அதன் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியது.

2008 ஆம்ஆண்டு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அருணாசலப்பிரதேசத்திற்குச் சென்ற போதும், பின்னர் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் சென்ற போதும் சீனா கண்டனம் செய்தது.

2009ஆம் ஆண்டு அருணாசலப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலை ஒட்டிப் பிரச்சாரத்திற்குச் சென்றார் பிரதமர். இது அக்டோபர் 3. ஆனால் அம்மாநிலத் தேர்தல் நாளான 13 ஆம் நாள் பிரதமரின் அருணாசலப்பிரதேச வருகையைச் சீனா, கண்டிக்கிறது “எங்களது கடும் ஆட்சேபங்களைப் பொருட்படுத்தாமல் சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு இந்தியத் தலைவர் ஒருவர் வருகை புரிந்தது குறித்துக் கடும் அதிருப்தி அடைந்துள்ளோம். பிரச்சினையைக் கிளர வேண்டாம் என எச்சரிக்கிறோம். ”

இவைகளைப் பார்க்கும் போது ஆசியான் உச்சிமாநாட்டிற்குப் பிறகு பிரதமரின் அறிக்கை எந்த அளவுக்குப் பயன் தரும்? அதற்குச் சீனா ஒத்துழைக்குமா என்ற கேள்வி மீண்டும் எழத்தான் செய்கிறது - காரணம் நிகழ்காலச் சீன அணுகுமுறை.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் அருணாசலப் பயணம் குறித்துக் கண்டனம் வெளியிட்ட அதே அக்டோபர் 13ஆம் நாள் சீன அதிபர் ஹுவைச் சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியிடம் இரண்டு வாக்குறுதிகளைச் சீன அதிபர் அளித்துள்ளார். ஒன்று, பாகிஸ்தான் சீனா இணைப்பு கரகோரம் நெடுஞ்சாலைக்கு உதவி. மற்றொன்று, பாகிஸ்தான் பிடியிலுள்ள காஷ்மீரில் ‘சீலம்-சீனாப்’ ஆகிய இரு நதிகளின் மீது அணைகள் கட்டி நீர்மின்நிலையம் அமைப்பதற்கான உதவிகள். இங்கே இரண்டாவது வாக்குறுதியில் காஷ்மீர் பாகிஸ்தானுக்குச் சொந்தம் என்பதைச் சீனாஅங்கீகரிக்கிறது. 

காஷ்மீர்ப் பிரச்சினையை அந்த மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இந்தியாவோ பாகிஸ்தானோ அல்ல. இந்நிலையில் மேற்சொன்ன சீன வாக்குறுதிகளை அடுத்துச் சீன அதிபர் ஹு , ‘சீன மக்களும் பாகிஸ்தான் மக்களும் இதயத்தாலும் கைகளாலும் இணைந்தவர்கள்’ என்று கூறியிருப்பது இந்தியாவின் சிந்தனைக்கு உரியது.

வடக்கே பாகிஸ்தான், வடகிழக்கே நேபாளம், சீனா, தென்கோடியில் இலங்கை -இப்போது கைகோத்துள்ள நாடுகள் இவை. இலங்கையை அவ்வளவு எளிதில் நாம் ஒதுக்கிவிட முடியாது. சீனாவின் ஆளுமை இன்று இலங்கையில் காலூன்றிக் கொண்டிருக்கிறது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால் 1939 ஆம் ஆண்டு, கொழும்பில், வெள்ளவத்தை ராமகிருஷ்ண மி­ன் மண்டபத்தில் பேசிய ஜவகர்லால் நேரு, “இந்தியா விரைவில் சுதந்திரம் அடைந்து விடும். அதனைத் தொடர்ந்து இலங்கை முதலான அண்டை நாடுகளுக்கும் சுதந்திரம் கிடைத்துவிடும். அப்படிச் சுதந்திரம் அடையும் நாடுகள் தங்கள் வெளியுறவுக் கொள்கையை இந்தியாவுடன் இணக்கம் உள்ளதாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

மேலும், பிரதமர் பதவி ஏற்ற நேரு இலங்கையைப் பற்றிக் குறிப்பிடும்போது, “இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை ஒரு கேந்திரமாக உள்ளது. அது எதிரிபக்கம் சேர்ந்தாலும், நடுநிலை வகித்தாலும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தலாகவே இருக்கும்” என்ற தொலைநோக்கு எச்சரிக்கையைச் செய்கின்றார். சற்று இலங்கையைப் பார்ப்போம்.

“சுதந்திரம் பெற்ற நாள் முதலாய் வெளிவுறவுக் கொள்கையில் இந்தியாவை அடியயாற்றி வந்த இலங்கை, ஜெ.ஆரின் (ஜெ.ஆர்.ஜெயவர்தனா) காலத்தில் தடம் புரண்ட போதுதான் இந்தியா தன் அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கியது. அவரது அணுகுமுறைகள் இலங்கைத் தமிழர் மற்றும் இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழர் பிரச்சினைகளில் இந்தியத் தலையீட்டைத் தவிர்க்கத் தவறியது. இலங்கை விசயத்தில் இந்திய நிலை, மாற்றம் அடைந்து வருவதையும் அவர் பொருட்படுத்தவில்லை. இந்திய உணர்வுகளை மதிக்காமல், அமெரிக்காவின் வாய்ஸ் ஆப் அமெரிக்கா ஒலிபரப்பு நிறுவனம் அமைக்கப் புத்தளம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் தென்னந் தோட்டங்களை ஜே. ஆர் தாரை வார்த்தார்.

இந்தியாவை உளவு பார்க்கவும், இந்தியாவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யவும் இந்த நிலையத்தை அமெரிக்கா பயன்படுத்தும் என்று இந்தியா கூறியதை ஜே. ஆர் சட்டை செய்யவில்லை. திரிகோணமலைத் துறைமுகம் இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களுக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அதை அமெரிக்காவுக்குத் தரவேண்டாம் என இந்திய அரசு கூறியதையும் கூட அலட்சியம் செய்துவிட்டு, அமெரிக்காவின் ஏஜண்டான சிங்கப்பூர் நிறுவனத்துக்கு ஜே. ஆர் குத்தகைக்குக் கொடுத்தார், ” என்று ஒரு பதிவைத் தரும் எழுத்தாளரும், இலங்கை வீரகேசரி, சென்னை தினமணி நாளேடுகளில் பணியாற்றியவருமான எஸ். எம். கார்மேகம், ஜெ. ஆரின் இச்செயலுக்குப் பி. வி. நரசிம்மராவை இலங்கைக்கு அனுப்பி, அமைச்சர் ஏ. சி. எஸ். அமீதிடம் கண்டித்ததாகவும் கூறுகிறார்.

இலங்கை அரசு இதைக் காதில் வாங்கவில்லை. அதேநேரம் ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான அரசபயங்கர வாதம் தலைவிரித்து ஆடியது. ஈழத் தமிழ் அகதிகள் தமிழகத்திற்கு வரத் தொடங்கினார்கள். அப்போது திருச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆர். வெங்கட்ராமன், ‘இலங்கைக்கு நாம் படை அனுப்பக்கூடாது. அனுப்பினால் இலங்கைக்கு ஆதரவான நாடுகள் ஒன்று சேரும், பெரும் போர் மூளும்’ என்று பயமுறுத்தினார்.

அதைப்பற்றிக் கவலைப்படாத பிரதமர் இந்திராகாந்தி 1983 ஆம் ஆண்டு சைப்ரஸ் நாட்டில் கூடிய அணிசேரா நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில், இலங்கைத் தொழிற்சங்கத் தலைவர் எம். எஸ். செல்லச்சாமியின் சிங்கள வெறிச்செயல் பற்றிய பேச்சை மேற்கோள் காட்டி, “ஒரு பொறுப்பான தொழிற்சங்கத் தலைவர் இப்படிப் பேசுகிறார் என்றால் என்ன அர்த்தம்? தமிழ் மக்களுக்கு இலங்கையில் போதிய பாதுகாப்பு இல்லை என்றுதானே? இந்தத் தமிழர்கள் யார்? இந்திய வம்சாவளியினர். அவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் உதவிக்கு விரைய வேண்டிய பெரும்பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு. அப்பொறுப்பை யாரும் தட்டிக் கழிக்க முடியாது” என்று உலகறியப் பிரகடனம் செய்தார்.

அதுமட்டுமல்ல, புதுதில்லி திரும்பிய இந்திரா, இதே செய்தியை தனித்தூதுவர்கள் மூலம் பல நாடுகளுக்கு அனுப்பினார். ‘இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட எங்களுக்கு உரிமை உண்டு. அப்படி நாங்கள் தலையிட நேர்ந்தால், யாரும் அதைக் கண்டு கொள்ளக் கூடாது’ என்பது இத்தூதுவர்கள் மூலம் இந்திரா அனுப்பிய எச்சரிக்கை செய்தி என்கிறார் கார்மேகம்.

இந்த எச்சரிக்கையால் இலங்கை அதிர்ச்சி அடைந்தது. “சோழர் படையயடுத்த போது சேரனிடம் ஓடினோம். சேரன் படையயடுத்த போது சோழனிடம் ஓடினோம். இந்தியா வல்லரசு. இதை நினைவில் இருத்தியே எமது வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்,” என்ற ஜே. ஆர். ஜெயவர்தனா லண்டன் டைம்ஸ், நியுயார்க் டைம்ஸ் பத்திரிகைகளில் அளித்த பேட்டி கவனிக்கத் தக்கது.

நேருவின் எச்சரிக்கையும், இந்திராகாந்தியின் அயலுறவுக் கொள்கை நடைமுறையும் இலங்கையை எவ்வாறு அடக்கிவைத்தது என்பதை இதன்மூலம் அறியமுடிகிறது. இங்கே இரண்டு செய்திகள் பின்னிக் கிடக்கின்றன. ஒன்று இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை இந்தியாவுக்குச் சாதகமாக்குவது, இன்னொன்று ஈழத்தமிழர்களின் பிரச்சினை. அவர்களின் உரிமைக்காக இந்தியா தலையிடுவது. அதே சமயம், ஈழப் போராளிகளும் இலங்கையில் அந்நிய நாடுகளைக் காலூன்ற விடாமல் செய்தனர்.

ஆனால் இன்று நிலைமை வேறு. இலங்கைக்குச் சீனா பெரும் அளவில் நிதி உதவி செய்து வருகிறது. குறிப்பாக இலங்கையில் சார்நிலைத் துறைமுகங்கள் அமைக்க சீனா பெரும் உதவி செய்கிறது. சார்நிலைத் துறைமுகம் என்றால், அது இலங்கை அரசிடம் தான் இருக்கும். தேவைப்படும்போது சீனா அதைப் பயன்படுத்தவும் முடியும்.

இது குறித்து இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா சென்னையில் கடந்த 10 ஆம் தேதி அளித்த பேட்டியில், “இந்தியப் பெருங்கடலில் நாம் செல்வாக்கோடு விளங்குவதில் அவர்களுக்கு மகிழ்ச்சி இல்லை. அவர்கள் அதைக் குறித்துக் கவலையடைந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் இதில், அதாவது, சார்நிலைத் துறைமுகங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் இங்கு வருவதற்கு இதைச் செய்கிறார்கள். இந்தியப் பெருங்கடலில் பெரிய எண்ணிக்கையில் அவர்கள் தங்கி இருக்க எண்ணுகிறார்கள் ” என்று கூறுகிறார்.

இந்திரா காந்தி சொன்னது போல ஈழத்தமிழர் பிரச்சினையில் தலையிட இந்தியாவுக்கு உரிமை உண்டு என்பதைக் கிடப்பில் போட்டுவிட்டு, சமீபத்தில் நடந்த ஈழத்தமிழர் இனப்படுகொலையின் போது ‘இறையாண்மை’ பேசிக் கொண்டிருந்த இந்தியா, இலங்கைக்குக் கொடுத்த ஆயுதங்களை விட அதிகமான ஆயுதங்களைச் சீனா இலங்கைக்கு அளித்தது-ஓர் இனம் லட்சக்கணக்கான உயிர்களை, உடைமைகளை இழந்தது.

இறையாண்மை பேசிக்கொண்டு இலங்கைக்கு ஆயுதம் கொடுத்துதவிய இந்தியாவின் அயலுறவுக் கொள்கையின் பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு, சீனாவிடம் ஆயுதம், பொருளாதார உதவிகளைப் பெற்று சீனாவைச் சார்ந்து, தன் அயலுறவுக் கொள்கையை தனக்குச் சாதகமாக மாற்றியது இலங்கை. ஆனால் சீனா, இலங்கையையும் மீறி தன் வல்லாண்மையை அங்கே நிறுவிக் கொண்டு, இந்தியாவைப் பார்க்கிறது.

பாகிஸ்தானுடனும், நேபாளத்துடனும் கைகோத்துக் கொண்டு, இலங்கையில் சீனா கால் ஊன்றுவது, இந்திய நலனுக்கு உகந்ததல்ல.

ஈழத்தில் முள்வேலி வாழ் வதைபடும் தமிழர் பிரச்சினை இன்னும் தீரவில்லை. இந்திரா காந்தியின் அயலுறவுக் கொள்கை இப்போது தேவை.

ஈழ மக்களின் வாழ்வியலைப் பாதுகாக்க, அதை மையப்படுத்தி இந்தியா, இலங்கையின் மீது தலையிட வேண்டும். அதன் மூலம் சீன வல்லாண்மையை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு சர்வதேச ராஜதந்திர உறவை இந்திராவைப் போல பயன்படுத்த இந்தியா முன்வர வேண்டும்.

நேற்று சீனாவுக்கு திபெத். இன்று பாகிஸ்தான், அருணாசலபிரதேசம். நாளை இலங்கை!

Pin It