போதியானவன்
விளம்பிக் கொண்டிருப்பதில்லை
தன்னை புத்தனென்று
*
ஆதியின் முதற்குறிப்பை
அந்தமாக்கிய
சூட்சுமமறிந்தவள்
நிறைந்து கொண்டிருந்தாள்
அதிகாலைக் காற்றில்.

இசை பீடித்த
உடலொரு புல்லாங்குழல் வழியே
வெளியேறிய உயிரின் மறுநாள்

மரணமொரு
மாறுவேட கௌதமனாய் உள்நுழைய
அகலிகையாய் சமைந்த குரல்
காற்றின் விரல் தீண்ட
இசையின் நிறுத்தக் குறியீட்டை
உதிர்த்திருந்தாள்
சிறகுகளாக
அச் சாதகப்பறவை

உதிர்த்த சொற்களை
முனுத்த உதடுகளே இசையாகும்
விற்பனம் அறிய
மரணம் விரும்பிக் கேட்டது - அவளை
யோர் பாடலை
இப்படி-

நினைவின் மணற்கிளர்த்தி
கரை நனைத்துப் போக
யெங்கும் படிந்துகிடக்குமவள்
இறுதிப் பாடலின் ஈர ராகமெதுவோ...?
இனி
அதன் வேரடியில்
மலர்ந்திருப்பாள்...

இசையொரு வரமாக
குரலொரு சாபமாக.
அல்லது
குரலொரு வரமாக
இசையொரு சாபமாக.

- அகாலத்தில் மரணமாகும் இசைஞர்களுக்கு....

Pin It