கடவுள் உண்மையைப் போன்றது, உண்மை தீயைப் போன்றது. அதனால்தான் தீண்டும் இன்பத்தை தீயினில் உணர்ந்துரைத்தான் மகாகவி. உணர்ந்துரைக்கும் உண்மைகள் ஒரு படைப்புக்கு ஆன்மாவைப் போன்றது. அந்த உண்மையை, உணர்தலை, அனுபவத்தை இந்த பறத்தலை விரும்பும் பறவைகள் மூலம் பதிவு செய்திருக்கிறார் கவிஞர் க. அம்சப்ரியா.

பறவை - இயற்கையின் எளிய அழகு ; குழந்தை - இயற்கையின் பேரழகு. ஆனால்... நாம் குழந்தைகளை, குழந்தைகள் போலவா வளர விடுகிறோம்...? நம் விருப்ப முகமூடிகளை அணிவித்து அவர்களை விகாரித்துக் கொண்டிருக்கிறோம். குழந்தைகளின் இயல்பான பால்யங்களையும், பள்ளிப் பருவங்களையும் படம் பிடித்துள்ள கவிஞர், இத் தொகுப்பின் மூலம் பெற்றோர் - ஆசிரியர் மற்றும் சமூகத்துக்கு பாடத்தை நடத்தி உள்ளார்.

உண்மைக்கு மிக அருகில் அல்லது உண்மையாலேயே நிரப்பப்பட்ட இக்கட்டுரைகளின் எளிமையும், எதார்த்தமும் வாசிப்பதை நேசிக்க செய்து விடுகிறது. மாணவ, பெற்றோர், ஆசிரியர் மற்றும் சமூகத்துக்கென கட்டுரைகளை வரிசைப் படுத்தியதில் ஒரு ஒழுங்கு தெரிகிறது.

மாண்புமிகு மாணவன் எனத் துவங்கும் கட்டுரையில் "ஒழுக்கத்தைப் பற்றி இடைவிடாமல் போதிக்கும் சமுதாயம், உண்மையில் அப்படி இல்லை என்பதை அறிகிறபோது, தமது கல்வி, வாழ்க்கைக்கு எந்த வகையிலும் உதவாது என்பதை மாணவர்கள் அறிந்து கொள்கிறார்கள்" என்ற எதார்த்தத்தை முன்வைக்கிறார்.

பறத்தலை விரும்பும் பறவைகளில் மாணவர்களுக்கு பெற்றோர்களே முதல் ஆசிரியர்கள். பெற்றோர்கள் குடும்பக் கொந்தளிப்புகளால் மாணவனுக்கு அமையும் நட்பு வட்டங்கள் சரியில்லாமல் போனால் தீய பழக்கங்களுக்கு அடிமையாகிறான். வகுப்பறையில் கற்றுத்தரும் கல்வியைவிட புற உலகத் தாக்குதல்கள் குழந்தைகளை கூடுதலாக பாதிக்கிறது என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும் என பெற்றோர்களின் பொறுப்புணர்வைச் சுட்டுகிறார்.

"மறுத்தலில் மலரும் மாற்றம்"-ல் ரௌத்திரம் பழகச் சொல்லும் நூலாசிரியர், பாரதியாரின் சொற்சாட்டை கொண்டு சுழற்றுகிறார். சாட்டையடியில் சமூகத்தின் மறத்தோல்கள் கிழிவது சர்வ நிச்சயம். அநியாயம் கண்டு பொங்கும் சமூகக் கோபம் எழுத்தாளனிடம் இருப்பதில் ஆச்சரியமில்லை... ஆனால், அதை சரியான இடத்தில் சுழற்றி இருப்பதற்காக "சபாஷ்" போடலாம். "பள்ளி ஆண்டுவிழா" என்ற பெயரில் உள்ளூர் தொலைக்காட்சியில் சிறுவர் சிறுமியரின் சினிமா ஆபாச நடனத்தைக் காணும் நமக்கு சொரணையற்ற ஆசிரிய சமூகமெப்படி இதை அனுமதிக்கிறது? என்ற நமது கோபத்தை, இவர் போலுள்ள சில ஆசிரியர்களும் எதிர்க்கத்தான் செய்கிறார்கள் எனும் போது மனம் சற்றே அமைதி கொள்கிறது.

அடுத்ததாக, "காலத்தை மாற்றும் ஆசிரியர்" கட்டுரையில் ஆசிரிய சமுதாய மேன்மையைக் கூறி, "தற்போது வாழ்வியல் தேவைக்காக ஆசிரியப் பணிக்கு வருபவர்களால் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது" என தான் சார்ந்த துறை பற்றி இடித்துக் கூறுகையில் இவர் இன்னொரு நக்கீரராகிறார். (குறிப்பு : நூலாசிரியர் தனியார் பள்ளி ஆசிரியர். ஒருவேளை அரசுப்பணி ஆசிரியரானால் இப்படிக் கூற முடியாதோ.... என்னவோ?) மேலும். "அரசின் விதிமுறைகளை மீறுகிறவர்களாகவும், சுய ஒழுக்கத்திற்கு சற்றும் பொருந்தாதவர்களாகவுமே இவர்கள் ஓய்வு காலம் வரை பணியாற்றுகிறார்கள். மக்களின் வரிப்பணத்தை வீணாக்க வந்த ஊதாரிகள் இவர்கள்" என்று கடுமையாகவே சாடி இருக்கிறார்.

"பொறுப்பற்ற ஆசிரியர்களா? பெற்றோர்களா?" என்ற கட்டுரையில் 'தகாத வார்த்தைகளால் திட்டியதாக பொய் சொல்லுகிற மாணவர்களை நம்பி, ஆசிரியர்களை விரோதிகளாக பார்க்கும் பெற்றோர்களால் அந்த மாணவன் திருந்துவது நடக்கக் கூடியதா?' 'இடைவிடாமல் தன் ஆண் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டும், சிறு சேட்டைகள் செய்து கொண்டும் இருக்கின்ற மாணவியை ஆசிரியர் எந்த வழிமுறைகளில் கண்டிப்பது? தன்னிடம் தவறாக பேசுகிறார் என்று பொய் சொல்கிற அம்மாணவி ஒரு ஆரோக்கியமான பெண்ணாக வளரும் வாய்ப்புத்தான் இருக்குமா?' என நடைமுறைகளைக் கூறி சிந்திக்க வைக்கிறார்.

இத்தொகுப்பில் இன்னொரு செய்தியைக் குறிப்பிட்டேயாக வேண்டும்... மாணவ மாணவியர்தான் ஆசிரியரிடம் கற்க வேண்டும் என்ற தட்டையான சிந்தனையை மாற்றி தன் வகுப்பில் படிக்கும் மாணவிகளின் கவிதைகள் இரண்டை சுட்டிக்காட்டி மாணவ சமுதாயத்தின் திறமையை சிலாகித்திருப்பது பாராட்டுக்குரியது.

அதேசமயம், ஆசிரிய பயிற்சி முடித்த ஆசிரியைகளின் வாசிப்பனுபவம் கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறுவதை யாவரும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். 'படித்துக் காட்ட எழுத்தறிவு, எண்ணறிவு போதும். கற்றுக் கொடுக்க வாசிப்பனுபவம் வேண்டும்' என்கிறார். யார் மறுக்க முடியும்? எத்தனை பேர் இதை உணர்ந்திருக்கிறார்கள்? பள்ளிப்படிப்பு முடித்து வெளி வரும் மாணவர்களில் தாய் மொழியில் சரியான உச்சரிப்பும், எழுத்துப்பிழையும் இன்றி பேச, எழுதத் தெரிந்தவர்கள் எத்தனை பேர்? குறை யாரிடம் உள்ளது?

"மதிப்பீடுகளில் சரியும் திறன்" கட்டுரையில் 'அண்மையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கென மாற்றி அமைக்கப்பட்ட பாட திட்டங்களில் அறிவியல், கணிதம் போன்றவை அந்தந்த வயதுக்குரிய கற்றல் திறனைவிட கூடுதலான சுமையுடன் இருப்பதைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு மாணவனுக்கும் புரிதல் திறன் வேறு வேறு, அதற்கேற்றாற் போல் தயார் செய்ய வேண்டும். மேலும் ஒரு மாணவனை, தேர்வுக்காக தயார் செய்வது எப்படி? என்கிற பயிற்சி ஒவ்வொரு ஆசிரியருக்கும் தேவை. மாணவனுக்கு கற்பனை ஆற்றலைத் தூண்டுகின்ற பயிற்சி ஒவ்வொரு ஆசிரியருக்கும் கொடுக்கப்பட வேண்டும்.' என்கிறார். அதுமட்டு மின்றி, அனைவருக்குமான கல்வியை அளிக்கும்போதே அனைவருக்குமான பாடத்திட்டமாக அது இருக்கிறதா என்று ஆய்வும் செய்யவேண்டும்.' என்கிறார். மேலும் இன்றைய மாணவர்களில் சிலரேனும் கல்வித்துறைக்கு வரக்கூடும். அவர்களால் இந்த மாற்றங்கள் கைவசமாகும் என்கிறார் மிகுந்த நம்பிக்கையோடு!

இது போல், கவிஞர் க.அம்சப்ரியா அவர்கள் சமூகத்தின் மேல் வைத்துள்ள கேள்விகள் மற்றும் நம்பிக்கைகள் மூலமும் தன் முதல் கட்டுரைத் தொகுப்பிலேயே முத்திரை பதிக்கிறார். இந்த நூலினை வாசிக்கும் யாவரும் தங்கள் குழந்தைகளையும் வாசிக்கச் செய்து ஒரு உயர்தரமான சமூகப் பார்வையை அறிமுகம் செய்யலாம்.

இப்படி நூலின் பொருள் பற்றிக் கூறிக் கொண்டு செல்கையில் அச்சுப் பிழைகள் (பக் : 21, 26, 31, 41) ஆங்காங்கே தென்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. மெய்பு திருத்தலில் உள்ள குறை இது. மேலும் 'பூக்கள் மலரும் காலம்' கட்டுரை மாணவர்களுக்கா? ஆசிரியர்களுக்கா? அந்தக் கட்டுரையில் நடை மயக்கம் உள்ளது. 75-ம் பக்கத்தில் உள்ள நகைச்சுவைத் துணுக்கில் "புத்தகங்களைக் காட்டி" என்ற வார்த்தை விடுபட்டதையும், 88-ம் பக்கம் "குற்றம் செய்ய தூண்டுகிறவனாகவும்" என்ற வார்த்தை தவறுதலாக உள்ளதையும் இரண்டாம் பதிப்பில் சரி செய்தால் இது "கற்கும் தலைமுறைக்கான கையேடாக இருக்கும்" என்பதில் சந்தேகமில்லை.

மாணவ வாசிப்புக்கேற்றார் போல எழுத்து சற்று பெரிதாக்கி அச்சிட்டிருப்பதாக தெரிகிறது. இது அவசியமா என்பதை அடுத்த பதிப்பில் யோசிக்க வேண்டும். கண்களை உறுத்தாத அட்டைப்படம் வெகு நேர்த்தி. தரமான தாளில் அழகான வடிவமைப்பு சித்தன் கலைக்கூடத்துக்கு பாராட்டுக்கள். "துடிப்பு" மாத இதழில் தொடராக வந்த இக்கட்டுரைத் தொகுப்பு நெறியான மாணவ - ஆசிரியர் - பெற்றோர் உறவு முறையின் இதயத்துடிப்பு.

நூல் : பறத்தலை விரும்பும் பறவைகள்
ஆசிரியர் : க.அம்சப்ரியா
விலை : 40.00
வெளியீடு : வ.செ.உ. பதிப்பகம், 63/5, பார்க்துகார், இராமாபுரம், சென்னை - 89.

Pin It