எங்கிருந்து வருகிறது.
எங்கே செல்கிறது.
எப்புள்ளியில் நிறைகிறது.
எப்புள்ளியில் கரைகிறது.

*

நின்றுபோன ஊழ்ச்சுழலில்
சிக்கிக் கொண்டவன்
கடிகாரத்தை
முன்னும் பின்னும் உதறுகிறான்
விரல் தட்டிப் பரிசோதிக்கிறான்
காது மடல் பொருத்தி
நிசப்தம் தின்னும்
நொடிகளின் முருங்கை வனத்துள்
நுழைந்தேறுகிறான்
பின்னோக்கிப் பல யுகங்கள் கடந்து
காலத்தை அரூபித்தவனை சபித்தபடி.
தன் முயற்சியில் சிறிதும் தளராதவன்
இடக்கரத்தால் பிணைந்து
உப்படர்ந்த வியர்வையில்
பசிய வெண்நிறம் பூத்துத்
தொங்குமதன் பழுதான புதிருக்கு
தன் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து
மடித்த
முழுக்கை சட்டையை
நீட்டிப்
பொத்தானிட்டுக் கொள்கிறான்
ஒரு பதிலாக.
எங்கிருந்து வந்தததோ
எங்கே சென்றதோ
எப்புள்ளியில் நிறைந்ததோ
எப்புள்ளியில் கரைந்ததோ
பதிலில் திருப்தியுற்ற
அக்
காலமொரு
வேதாளமாகி மீண்டும்
கதை சொல்லத் தொடங்கியது
கடிகாரமற்ற
அவன் நிராசையின்
ஒவ்வொரு நொடியிலும்
விலையுயர்ந்ததொரு கடிகாரத்தைப் பற்றியும்
மணிக்கட்டில்லா மனிதர்களைப் பற்றியும்.

Pin It