இதைத்தானே நாம் சொல்ல நினைத்தோம் என்றோ, அடேங்கப்பா இதையும் சொல்லிட்டாங்களா என்றோ, பெருமூச்சுவிடவும், பொறாமைப்படவும் வைக்கும் கவிதைகளை எப்போதாவதுதான் வாசிக்க நேர்கிறது. சமூக அவலங்களை பொய்யின்றி சொல்லும் ஒரு உண்மைக் கவிதையையும் எப்போதாவதுதான் தரிசிக்க இயலும்.

அப்படியான ஒரு கவிதைத் தொகுப்பை அண்மையில் வாசிக்க வாய்த்தது. உண்மையில் தலைப்பிலிருந்தே நல்ல கவிதைத் தொகுப்பு கவிதைகளை துவங்கிவிடுகிறது. ராசை.கண்மணிராசாவின் தொகுப்பும் இப்படித்தான் துவங்குகிறது. கவிதையாவது கழுதையாவது என்று கேலியாக, கோபமாக, வக்கனையாக துவங்கும் இக்கவிதைத் தொகுப்பிற்குள் ஒவ்வொரு சொல்லிலும் வெடிகுண்டை பதுக்கித்தான் வைத்திருக்கிறார்.

சாணிப்பால் முற்றத்தில்
நிலாக்காயும் இரவொளியில்
உன்னோடு கவிதை பேச ஆசை
ஆனால்
பகலெல்லாம் பாரவண்டி
இழுத்த களைப்பில் நானும்
தீப்பெட்டி ஆபிசில்
தீயாய் பறந்த களைப்பில் நீயும்
கண்ணயர்ந்து உறங்குகையில்
கவிதையாவது?
கழுதையாவது? என்று துவங்குகிறார் கவிஞர்.

சமூக அவலத்தை கவிதைக்குள் கொண்டு வருவதில் கவிதை எதிர்கொள்ளும் சிக்கல் எதுவென்றால் அதனுள் தேங்கிக் கிடக்கும் மொழி வறட்சி. அம்மொழி வறட்சியின் மையம் அனுபவங்கள் இன்றியும், சமூகத்தின் வலியைத் தனதாக்கிக் கொள்ளும் உள்வாங்கும் திறன் இல்லாமலும் கவிதைக்காக வலிந்து தனக்குள் திணித்துக் கொள்கிற கவிதைத் தொழில் தந்திரம்.

ராசை.கண்மணிராசாவின் சமூக வெளிப்பாட்டுக் கவிதைகள் வெற்றியின் தளத்திற்குச் செல்வதற்கு மிக முக்கிய காரணமே அவர் மக்களை நேசிக்கிற கவிஞர் என்பதால்தான்! மக்களின் மீது கொண்டுள்ள அபரிதமான அன்பு, அவர்களைப் பற்றி யோசிக்க வைக்கிறது. அவர்களுக்காக கண்ணீர் சிந்த வைக்கிறது. போராட களத்திற்குத் தயாராகிறது. அவர்களின் அசட்டுத்தனங்களுக்கு முகம் சுளிக்க வைக்கிறது.

அக்னி மூலை,
வாயு மூலை,
ஈசான மூலை,
அந்த மூலை, இந்த மூலை
அடடடா!
என்னதான் ஆனது
சொந்த மூளை?

ராசை.கண்மணிராசா காணும் தேவதைகள் அபூர்வமானவர்கள் அல்ல! நாம் அன்றாடம் காணும் பெண்கள்! திருமணத்திற்காக காத்திருப்பவர்கள், ஆண்டாளின் தோழிகள், கருவாச்சிகள்தான் எனினும் கவிதைக்குள் வலமாகிற போது ஆச்சரியப் படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள்.

ஈரமாய் பசை தடவி
இழுத்து
எட்டாய் மடித்து
ஒட்டினாள் என் தங்கை
தீப்பெட்டியையும் - அவள்
ஆசைகளையும்

இப்படியாய் பக்கத்திற்குப் பக்கம், துயரத்தோடும், நகைச்சுவையோடும், கோபத்தோடும் வெடித்துள்ள, முகிழ்த்துள்ள, மலர்ந்த இந்த தொகுப்பு உங்கள் அலமாரியிலும் இடம் பெறட்டும்!

Pin It