நாட்களைத் துரத்தும் புலம்பல்

தொடக்கத்திலிருந்தே கடைசியாய்
நிற்கின்றது தோற்றுப்போன
எனது நாட்கள்
துரித சாகசங்களால்
மீண்டும் மீண்டும்
நாட்களைக் கொண்டாடுகிறேன்

அதிகாரங்களை நிராகரித்து நிராகரித்து
சிறு சந்தோசங்களைப் படர்த்தி விடுகிறேன்

தோற்றுப் போன மூதாதையர்களின்
மடியாத ஆசைகளின் புலம்பல்
துரத்த

நானே வெறி கொண்டு
தோற்றுப்போன நாட்களைத்
தீனியாகத் தின்று நாளைய
சுதந்திர வெளியைக் கக்கித் திரிகிறேன்...

00000

இரையால் நிரம்பிய உலகம்

தேவனின் உலகம் இரைகளால்
நிரம்பியிருந்தது

ஆனால் தேவதூதர்களோ
புழுத்துப் போனவைகளுக்காக
பக்குவப்படுத்தப்பட்டு இருந்தார்கள்

எதிர்பாராமல் எதிர்ப்படும் இடங்களில்
ஒதுங்கி ஒதுங்கி மீண்டும் நீள்கிறது வழி

இறுதியாய்
அந்த நகரத்தின் வீதியன்றில்
அவசர அவசரமாய் மௌனங்களை
விழித்துக் கொண்டிருக்க

இரையைக் கவ்வித் திரியும்
சிற்றெறும்பு போல தொலைபட்ட மனிதத்தை
இழுத்துச் செல்கிறேன்

பன்னெடுங் காலமாய்
குறுக்கு நெடுக்காக
துண்டுபட்டுக் கிடக்கும் மௌனங்களையெல்லாம்
யாரிடமாவது சொல்லியாக வேண்டும்...

0000

நூற்றாண்டுகளைக் கடந்த புரவிகள்

பிரதான சாலையில்
அவசரங்களோடு நுழைகிறேன்

நேற்றைய கொண்டாட்டத்தின்
எச்சமாய் தெருவில் புரண்டு கிடப்பவன் மீது
காக்கையின் எச்சம் பிசுபிசுக்கிறது

இன்னும் நகர நகர
ஆவேசமாகப் புறப்பட்டு வந்தவர்கள்
ஒரு கணம் நின்று நிதானிக்க

ஆணிகளால் அறையப்பட்ட
இயேசுவின் படம்
பிச்சைக்காக வரையப்பட்டிருக்கிறது

வெட்டவெளியில் நைந்த கைகளால்
தைத்துக் கொண்டிருக்கிறார்கள்
நவீனத்துவங்களை

இவற்றையெல்லாம் அசை போட்டபடியே
அவிழ்ந்து ஓடுகின்றன
எனது நூற்றாண்டு காலப் புரவிகள்...

0000

நம்பத்தகுந்தவை

தனித்திருக்கும் பயனற்ற கற்பனைகளுக்கு
தற்காலிகமாகவேனும்
போதையூட்டப்பட்ட சொற்களை
நிரப்பியிருக்கலாம்

பழுதடைந்த தருணங்களில்
உருவாகும் குழப்பம்
உணர்ச்சிகரமான நிகழ்வு போல் தென்பட

தலைகீழான பயணத்தில்
சிதறிப் பறக்கின்றன உடைந்த ஓடுகள்

பதற்றமடையும் பொழுதுகளில்
எண்களைத் தலைகீழாக சொல்லு என
அறிவுறுத்துவது அபத்தம்...

0000

வலுவிழந்தவை

கண்இமைக்கும் நேரத்தில்
உதிர்ந்து விடுகின்றது
வலுவற்ற இலையன்று

எதுவும் நிகழாதது போலவே
மீண்டும் துளிர்த்து நீள்கிறது
மரம்

ஒப்பனையற்ற வாழ்வு
நிழலாய் படர்கின்றது

சருகுகள் படபடக்கின்றன
வனங்களை வாழ்விக்க

0000

கவிதை வெளி

தன்னைப் பற்றி நிறைய
பதிவு செய்கிறது கவிதை

நசிந்து பிதுங்கிய
சொற்களுக்குப் பின்னே
ஒளிந்து கொள்கிறது
மௌனத்தின் அதிர்வுகள்

வார்த்தைகளுக்கிடையே ஏதோவொரு
புள்ளியில் மோதித் தெறிக்கின்றது
ஆதிச் சொல்லொன்று

எவ்வளவுதான் துரத்த
முயற்சி செய்தாலும்
மறுபடியும் மறுபடியும்
நேர்த்தியாக நீண்டு கொண்டிருக்கிறது
முடிவில்லாத இருட்டு

0000

சிதைவு

முகமிழந்து நகரத்தின்
சௌகரியங்களை விநோதமாக
ரசித்து பொழுது கழிக்கிறேன்

புலம்பெயர்வில் இருந்து
எல்லாவற்றையும் மிக
மெதுவாகக் கற்றுக் கொள்கிறேன்

பல தடவைகள்
என்னுடைய அடையாளம்
சிதைக்கப்பட்டாயிற்று

உங்களுக்குத் தெரியவில்லையா?
நான் முன்னேயும் செல்ல இயலாத
பின்னேயும் திரும்ப முடியாத
பெரு இடைவெளியில் இருப்பதை

000

பெருமழைக் காலம்

தலைக்கு மேலே கூட்டமாக
கடற்காக்கைகள் ஓசை எழுப்பிக்
கொண்டு பறந்து போகின்றன

நகரப் பெரும் வீதிகளின்
நாற்புறமும் தீராத தனிமை

வனாந்திர மணத்தை
முகர்கிறாள் தாதி

திமிரோடு வாழ்ந்த கணங்களை
எண்ணி மண்டையை உடைத்துக்
கொள்கிறார்கள் ஒவ்வொருவரும்

பெருமழைக் காலங்கள்
துருவேறிய டிரங்குப் பெட்டியில்
மிகவும் அவசரமாகப்
பத்திரப்படுத்தப்படுகின்றன

000

பழைய விருந்தாளி

விருந்தாளியாக வந்தவர்கள்
பொழுது தீர்ந்த பின்னும்

தீராத ஆசையோடு
மனிதனைப் புசித்துக் கொண்டிருக்கிறார்கள்

காலம் பழுத்த இலையென
உதிர்த்துக் கொண்டேயிருக்க

மீண்டும் திரும்புவதற்கான வழி மறந்து
வெகு நாளாகியும்
இன்னமும் விருந்தாளி போலவே
பாவனை செய்து கொண்டிருக்கிறார்கள்

விடைபெறும் தருணத்தில் வெறுங்கையோடு
புசித்தவர்களின் கோர முகங்களை
நகக் கணுக்களில் பதுக்கியபடி
வெளியேறுகிறார்கள் பழைய விருந்தாளியென...

0000

வழி

சர்ப்பங்கள் ஊர்ந்து செல்லும்
வனத்தில் நடந்து செல்கிறாள் சிறுமி
வழியெங்கும் மூதாதையர்களின்
நைந்து போன கரிய காலடித்தடங்கள்

காலக் கொடூரத்தில் பிணங்களின்
எலும்புகளிலிருந்து எழும் கூக்குரல்
வனமெங்கும் எதிரொலித்து நீள்கிறது

பரந்த வெளியில் வெயிலை
தழுவிக் கொண்டு நிற்கிறது சவம்

அப்போது
மனிதர்களின் வேட்கை
பரவசமான பெருமழையில்
வழிந்து போகிறது

பயணக் களைப்பையும் மீறி
வாழ்வதற்கான உயிர் நெருப்பை
முதுகின் மீது அமர்த்திக் கொண்டு
நீண்டகாலமாக பயணித்தபடியே இருக்கிறாள் சிறுமி

(உயிர்எழுத்து, வடக்குவாசல், அணங்கு, பனிக்குடம், கனவு, எட்டுத்திசை, அகநாழிகை, அம்ருதா, கருக்கல் என எழுதத் துவங்கியிருக்கும் ஜெ.நிஷாந்தினி, பொள்ளாச்சி, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். விரைவில் இவரது கவிதைத் தொகுப்பு வரவிருக்கிறது.)

Pin It