கோ.ராஜேந்திரன் என்கிற இயற்பெயரால் அறியப்படும் கோசின்ரா நவீன கவிதையில் கடவுளைப் பல்வேறு தளங்களில் கவிதையாக்கும் கவிஞர். கடவுள் என்கிற சொல்லுக்குள் புதைந்து கிடக்கிற அர்த்த அரசியலைப் பற்றி இடைவிடாமல் கலந்தாலோசிப்பவர். என் கடவுளும் என்னைப் போல கருப்பு என்கிற முதல் தொகுப்பிற்கே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வழங்கும் செல்வன் கார்க்கி கவிதைப் பரிசினைப் பெற்றவர். அவ்வப்போது இவரது கவிதைகள் பல்வேறு சிற்றிதழ்களிலும் பிரசுரமாகி வருகிறது.

தொடர்புக்கு : 09422333488

கோசின்ரா கவிதைகள்

1
நின்றுபோய்விட்டது அநீதிகள் குறித்துப் பேசுவது,
நிழல்போல நமக்கு முன்னாலோ
பின்னாலோ வருகின்றன அநீதிகள்.
சிலசமயங்களில் முன்னே சென்று
நம் இருக்கைகளில் அமர்ந்து கொள்கின்றன.
கெஞ்சுவதைத் தவிரவும்
வேறுவழிகள் இல்லாமல்போகிறது.
அநீதிகள் சட்டைகளை உரசிச் செல்கின்றன.
கதவைச் சாத்திக் கொண்டாலும்
குடிநீரில் கலந்திருக்கும் கிருமிகள் போல
உடலுக்குள் நுழைகின்றன.
அநீதியை எதிர்ப்பது நம் குறிக்கோளல்ல
என்பதை அது புரிந்து வைத்திருக்கின்றன.
அரசாங்கம், மதம், நீதி, சட்டம்
அரசியல் அநீதிகளோடு கள்ளஉறவு வைத்திருக்கின்றன.
தீர்ப்புகள் அநீதிகளின் பினாமிகளாக வருகின்றன.
அநீதிகளிடமிருந்து
நம் உடல்களைக் காப்பாற்ற முயல்கிறோம்.
சிலசமயத்தில் அது பெருத்த அநீதியின் கையில்
தன்னை ஒப்படைத்ததாகிவிடுகிறது.

2
ஆளத் துடிப்பவர்களின் வரிசை அது.
மலைப்பாம்புகள் மானை விழுங்க முடியாமல்
விழுங்கிக் கொண்டிருப்பதைப் போல
வரிசையிலிருப்பவர்கள் பழுத்த கனவுகளை
விழுங்கியது விழுங்கியபடி நிற்கிறார்கள்.
அவர்களை அரசியல் படகுகள்
காற்றில் இறக்கிவிட்டுச் செல்கின்றன.
அவர்கள் ஒரு பறவையை
வாடகைக்கு அமர்த்தி தான் ஆளப்போகும்
நகரத்தைப் பார்க்கிறார்கள்.
வானில் பறந்து போகும் தேவதைகளிடம்
புறம்போக்கு நிலங்களின்
பட்டியலைக் கேட்கிறார்கள்.
நகரம் கண்ணாடி போல பளிச்சென
காட்டுகிறது எல்லா ரகசியங்களையும்.
அவர்கள் சத்தமிட்டுச் சொல்கிறார்கள்
இந்த மண்ணை நேசிப்பதாக.
இந்த நகரத்தைவிட்டு பிரியப் போவதில்லையென்றும்.
அப்போது அவர்களை வாய்
நகரத்தைவிட பெரிதாக திறந்து மூடுகிறது.
பிறகு மரத்தடியில் முகாமிட்டு
எளிய வேடத்திலிருக்கிறார்கள்.
குடிசைக்குள் நுழைந்து கழிப்பறை இல்லாத
வீடுகளைக் கண்டு அதிசயிக்கிறார்கள்.

3
ஒழுக்கம்

ஒழுக்கம் பற்றிய குறிப்புகளைத்
தொலைத்துவிட விரும்புகிறேன்.
முடிந்தமட்டும் அதன் பிரதிகளை கிழித்தெறிகிறேன்.
நீதிக் கதைகளை
புராணங்களின் கதைவழியே ஊடுருவும்
நல்லொழுக்கத்தை
பாடப் புத்தகங்கள் வழியே
உடலுக்குள் நுழைந்த நீதிநூல்களை
எல்லாவற்றிடமிருந்து விலகிவருகிறேன்.
இன்னும் காதல் வழியாகவும்
அன்பின் வழியாகவும் நுழைந்த
ஒழுக்கவழிகளை அப்புறப்படுத்திவிட்டேன்.
ஒழுக்கம் வெற்றுச் சொல்லாக மாறிக் கொண்டிருக்கிறது.
எல்லாவித ஒழுக்கத்தின் வாசனையைத்
தாண்டிவருகிறேன்.
ஒழுக்கத்தைக் கலைந்த மனிதனாக
முதலில் தெருவிலிறங்கி நடக்கின்றேன்.
எதிரே ஒரு பெண் வந்து கொண்டிருக்கிறாள்.
அவள் கண்கள் பிரகாசமாயிருக்கிறது.
அவள் துடைத்துவிட்ட நீலவானம் போல
பளிச்சென்றிருக்கிறாள்.
அவளிடம் நீ அழகாயிருக்கிறாயென்று
சொல்ல நினைத்து தோற்கிறேன்.
அந்த வெட்கம் கெட்ட ஒழுக்கத்தின் வாசனை
எனக்குள் எங்கோ மிச்சமிருக்கிறது.


4
ஒரு குகையில் கடவுளிருக்கிறான்
இன்னொரு குகையில்
தூய்மையான தண்ணீர் இருக்கிறது
தாகமுள்ளவன்
எந்தக் குகையில் நுழைவான்
ஒரு குகையில் புனித நூல்களிருக்கின்றன
இன்னொரு குகையில் உணவு இருக்கிறது
பசித்தவன் எந்தக் குகையை விரும்புவான்
ஒரு குகையில் பிரார்த்தனை நடந்து
கொண்டிருக்கிறது.
இன்னொரு குகையில் தூய்மையான
ஆடை இருக்கிறது
நிர்வாணமாயிருப்பவன்
எந்தக் குகையில் நுழைவான்
ஒரு குகையில் பெண்ணிருக்கிறாள்
இன்னொரு குகையில் ஒரு கரடி இருக்கிறது
காதல் கொண்டவன் யாரை விரும்புவான்
நான் தாகமுள்ளவனாக இருக்கிறேன்
நான் பசித்தவனாக இருக்கிறேன்
நான் நிர்வாணமாக இருக்கிறேன்
நான் காதலோடு இருக்கிறேன்

5
அரசாங்கத்தின் வேலைகள்

அரசாங்கத்திற்கு நிறைய வேலைகளிருக்கின்றன,
பெயரற்ற மனிதர்களை வலை வீசித் தேடுவதும்
பெயர் சூட்டுவதும் அதன் வேலையில்லை.
காடு போல் வளர்ந்த தலைமுடியை
நீயே வெட்டிக் கொள்ள வேண்டும்.
அரசாங்கம் தலைமுடி வெட்டத் தொடங்கிய பிறகு
சில தலைகளைக் காணவில்லை.
முடிவெட்டும் இலவசத் திட்டம்
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
கிழிந்து போன பழைய சட்டைகளை
நீயே தைத்துக் கொள்
குடும்ப அட்டையைக் காட்டி
ஊசியை இலவசமாக பெற்றுக் கொள்.
குளத்திலிருக்கும் மீன்களைக் காணவில்லையென்று
புகார்கள் கொடுக்காதே.
அரசாங்கத்திற்கு அதைவிட
வேறு வேலைகளிருக்கின்றன.
பசியால் வாடும்போது
பட்டினியால் செத்துவிடாதே.
வீட்டில் கிடக்கும் பழைய கனவுகளை
அரசாங்கம் வாங்கிக் கொள்கிறது.
கனவுக்கு சாப்பாடு வழங்கும் திட்டமிருக்கிறது.
அரசாங்கத்தை சந்தேகப்படாதே.
அரசாங்கம் பெரிய மீன்தான்.
அது சின்ன மீன்களைப் பற்றிக்
கவலைப்படுவதில்லை.
ஏனெனில் அரசாங்கத்திற்கு
அதைவிட முக்கிய வேலைகளிருக்கின்றன.


6

எடுத்துக் கொள்ளுங்கள்

நுரை ததும்ப கோப்பை நிறைய மதுவும்
ஆம்லெட்டும் ஊறுகாயும் எனக்கு கொடுங்கள்.
எனது அந்தி நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
நட்சத்திரம் மிதக்கும் என் ராத்திரிகளை
எடுத்துக் கொள்ளுங்கள்.
மதுவை ஊற்றுங்கள் என் காலியான கோப்பையில்.
இந்த மதுவின் பாதைகள் எங்கோ செல்கின்றன.
என் பெயரை எடுத்துக் கொள்ளுங்கள்.
என் அடையாளத்தை உருவிக் கொள்ளுங்கள்
என் சொற்களைப் பிடுங்கிக் கொள்ளுங்கள்.
இன்னும் கொஞ்சம் மதுவை ஊற்றுங்கள்.
கொஞ்சம் பணமும் மதுபாட்டிலும் கொடுங்கள்.
என் வாக்குச் சீட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.
இலவசமாக தொலைக்காட்சிப் பெட்டியையோ
ஆடு மாடுகளையோ கொடுங்கள்.
என் வெளிச்சத்தை எடுத்துக் கொள்ளங்கள்.
என்னை மீட்டெடுப்பதாக வெறும்
வாக்குறுதிகளை மட்டும் கொடுங்கள்
என் போராட்டத்தை உடலிலிருந்து
உறிஞ்சிக் கொள்ளுங்கள்.
கட்சிக் கொடியின் வண்ணங்கள் கலந்தே
போதையை எனக்குக் கொடுங்கள்
என் வேட்டியை உருவிக் கொள்ளுங்கள்.
உங்கள் ஆட்சிக் கனவுகளை சாராயத்தைப் போல
என் உடல் மீது ஊற்றுங்கள்.
என் உழைப்பை எடுத்துக் கொள்ளுங்கள்.
இன்னும் கொஞ்சம் மதுவை ஊற்றுங்கள்.
என் நாக்கை அறுத்துக் கொள்ளுங்கள்
என் கட்டை விரலை வெட்டிக் கொள்ளுங்கள்
என்னை தீக்குளிக்கச் செய்யுங்கள்
தீப்பற்றி எரியும் உடல்மீது கட்சியின் சாயக்
கரைசலை ஊற்றுங்கள்.
திரையரங்க இருள் என்னை அழைக்கிறது.
ஒருவனைத் தேடிப் போகிறேன்.
அவன் எதிர்கால வாக்குச்சீட்டை
பணம் கொடுத்து வாங்குபவனாக இருப்பான்.
என்னை ஆளும் நாற்காலியை
அவன் எடுத்துக் கொள்ளட்டும்.
கொஞ்சம் என் கோப்பையில் மது ஊற்றச் சொல்லுங்கள்.

7

ஆழம்

ஆழம் மலர்ந்திருக்கிறது ஒரு பூவைப் போல.
அதன் வாசனை எல்லோரையும் இழுக்கிறது.
நகர முடிவதில்லை.
ஒளியும் ஒளியற்றுமிருக்கும் ஆழத்தை
பார்க்கத்தான் விரும்புகிறோம் எல்லோரும்.
ரகசிய உறுப்பைப் போல மறைந்திருக்கிறது ஆழம்.
அதன் தசைகள் அசைவற்று நிற்கின்றன.
ஆழம் யாரையும் எட்டிப் பார்ப்பதில்லை.
அது ஆயுள் கைதி போல இருந்து கொண்டிருக்கிறது.
அதற்கு எப்போதும் விடுதலையில்லை.


8
புதிதாக எதுவும் எழுதவில்லை

இன்றைக்குப் புதியதாக எதுவும் எழுதவில்லை.
எழுதுவதற்கான வரிகள் தோன்றவில்லை.
அதனால் அநீதிகள் ஒன்றும் குறைந்துவிடவில்லை.
யாரும் பசியால் மயங்கி விழாமலில்லை.
தவறு செய்யாத இளைஞனை
கைது செய்யும் காவலாளி திருந்திவிடவில்லை.
யாரோ ஒருவன் யாரோ ஒருத்தியை
ஏதாவதொரு உலகின் சந்துமுனையில்
வன்முறை செய்வது நின்றுவிடவில்லை.
இன்று பொய் விநியோகிக்காத
நாள் என்று சொல்லிவிட முடியாது.
இருப்பினும் புதிதாக
எதுவும் எழுதவில்லை.
எல்லாம் வழக்கம் போல நடக்கின்றன.
எந்த அநீதி மீதாவது
நெருப்பு உமிழும் ஒரு வரியை
வீசிட முடியுமாவென பார்க்கிறேன்.
வழக்கம் போல புதியவரி கிடைக்காமல்
வறண்ட நிலத்தின் மீதே
ஒரு கல்லை வீசி எறிகிறேன்.
எந்த வளையங்களுமின்றி அடங்கிவிடுகிறது.
அந்தக் கல்.


9

நான் கடவுள்

பூங்காவில் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்.
வெகுநேரமாய் தனிமையில் அமர்ந்திருக்கிறீர்களே
யார் நீங்கள்? நான்தான் கடவுள்.
எந்த மதத்திற்கு? மதத்திற்கு ஏது கடவுள்.
இந்தப் புல்வெளிகளுக்கு, மரங்களுக்கு,
பட்டாம்பூச்சிகளுக்கு, பூக்களுக்கு, நதிகளுக்கு
எல்லாவற்றுக்கும் நான்தான் கடவுள்.
என்ன விளையாடுகிறீர்களா.
இப்பொழுதான் விளையாடிவிட்டு வந்தேன்.
இலையோடு விளையாடும்போது
இலையாக மாறிவிடுவேன்.
உண்மையில் நீங்கள்தான் கடவுளா?
ஆமாம் நான்தான் கடவுள்.
உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
வீட்டிற்கு விரைவாகச் செல்லவேண்டும்.
என் வருகையைச் சொல்வதற்கா?
இல்லை. நான் கடவுள் இல்லையென்று சொல்வதற்கு.
அவர்களிடம் நேற்றுவரை நான்தான் கடவுள்
என்று சொல்லிக் கொண்டிருந்தேன்
இப்பொழுது நீங்கள் வந்துவிட்டீர்கள்.
என் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைவார்கள்.
ஏனெனில் ஒரு கடவுளை வீட்டுக்குள் வைத்து
வளர்ப்பது எத்தனை சிரமமென்று
தினமும் சொல்லிக் கொண்டிருந்தார்கள் என்னிடம்.

10

வேட்டையாடுபவன்

எப்போதும் துப்பாக்கியால் மிருகங்களை
வேட்டையாடிக் கொண்டிருந்தவன்
எல்லா மிருகங்களையும் வேட்டையாடியபின்
நகரத்திற்கு வந்தான்.
யாரைக் கொல்வதெனத் தெரியாமல்
ஒரு நாயைச் சுட்டான்.
பிறகு துப்பாக்கியைச் சுத்தம் செய்து
மனைவியின் நெற்றிப் பொட்டில் வைத்து
பயமுறுத்தினான்.
அவனுக்கு யாரோ அறிவுரை சொன்னார்கள்
அரசியலில் சேரச் சொல்லி.
அவன் அரசியலில் சேர்ந்தான்
துப்பாக்கி சுடுகிறதா எனப் பார்க்க
பக்கத்திலிருந்த அரசியல்வாதியைச் சுட்டான்.
அரசியல்வாதிகள் அவனுக்கு அறிவுரை கூறினர்.
சுடுவதற்கு மக்கள் கோடிகோடியாக
இருக்கிறார்கள்.
யாரை வேண்டுமானலும் எங்கே வேண்டுமானலும்
சுட்டுக்கொள்
நீ சுடும்போது தயைசெய்து "ஸைலென்ஸரை''ப்
பொறுத்திக்கொள்.
மேலும் எப்போதும் சுட்டுக் கொண்டே இருக்காதே.
ஒரு பெண்ணைக் கற்பழி.
சிலர் சொத்துக்களை அபகரி.
ஊழல் செய். லஞ்சம் வாங்கு.
யாரையாவது மிரட்டிக் கொண்டே இரு.
மேலும் ஒரு புலியை இன்னொரு புலி
அடித்துச் சாப்பிடுவதில்லை.
மான்களையோ எருமைகளையோதான்
வேட்டையாடும் என்றனர்.
அதற்குப் பிறகு அவனுடைய துப்பாக்கியிலிருந்து
சத்தம் கேட்கவில்லை.

11

பொம்மை

யாருமற்ற ராத்திரியில் கடையிலிருந்த
பொம்மை ஒன்று அழுது கொண்டிருந்தது.
அது குறித்து மற்ற பொம்மைகள் கவலைப்பட்டன.
அழாதே. உன்னைப் பார்த்து
மற்ற பொம்மைகளும் அழக்கூடுமென்றது ஒரு பொம்மை.
நான் குழந்தைக்காக அழுகிறேன்
அதனோடு விளையாடவும் விரும்புகின்றேன் என்றது.
கடைக்காரன் மறுநாள் வந்து பார்த்தபோது
ஒரு பொம்மையின் கண்ணில் கண்ணீரைப் பார்த்தான்.
அழும் பொம்மை குறித்து
நகரெங்கும் செய்தி பரப்பப்பட்டது.
எல்லா பொம்மைகளும் அழும் பொம்மை கேட்டு
அடம்பிடித்தன.
கடைக்காரன் சொன்னான்.
இந்த பொம்மை அதிசயத்திலும் அதிசயம்
விற்பனைக்கல்ல என்றான்.
மீண்டும் தனித்து விடப்பட்டன பொம்மைகள்.
அழும் பொம்மைக்கு அறிவுரை சொல்லின
மற்ற பொம்மைகள்.
நீ மற்ற பொம்மை போல உணர்ச்சியற்று
இருந்திருந்தால்
ஒரு குழந்தையோடு விளையாடியிருக்கலாம்.
இனி பார், உன்னால் முடியாதென்றது.
அதற்குப் பிறகு எந்த பொம்மைகளும் அழுவதில்லை.
அழுகின்ற குழந்தைக்கு
பொம்மைகள் வாங்கித் தருகிறார்கள்
பெற்றோர்கள்.
குழந்தைகள் பொம்மைகளுக்கு
சிரிப்பையும் அழுகையையும் கற்றுத் தருகின்றன.


13

பத்து ரூபாய்க்குக் கிடைக்கின்றன.
ஸ்லோகங்களும் மந்திரங்களும்
கையடக்கப் பதிப்பில்.

அதன் உச்சரிப்புகள்
எல்லா உதடுகளிலும் வந்து
உட்காருகிறது.
இந்த மாதிரிப் புத்தகங்கள்
சிலசமயங்களில் இலவசமாகக் கிடைக்கின்றன.
சிலநேரங்களில் கழிவு விலைக்கும்
பாதி விலைக்கும்.
எதை எடுத்தாலும் அஞ்சு ரூபா
புத்தகக் குவியலிலும்
அந்தப் புத்தகத்தைப் பார்த்தேன்.
பாதி விலைக்கோ
கழிவு விலைக்கோ கிடைக்கும்
இந்த மந்திரங்கள்தான்
இரண்டாயிரம் ஆண்டுகளாய்
தனக்குக் கீழே வைத்துக் கொண்டிருக்கிறது
என் மக்களையும்
மக்களின் கடவுளையும்.

Pin It