மொழிபெயர்ப்புக் கவிதை

ரொபெர்ட்டோ ஜுவாரோஸ் (1925-1995)
தமிழில் : சபரிநாதன்

இலையுதிர்காலம் இறங்கி எங்கே செல்கிறது?
பொருட்களுக்கு அடியில் எதைத் தேடுகிறது?
ஏன் அது எல்லா நிறங்களையும் கீழிழுக்கிறது
உதிர்பவை ஏதும் மங்கியாகவேண்டும் என

நாம் கீழிறங்கி எங்கே செல்கிறோம்
சின்ன இடம்பெயரும் இலையுதிர்காலங்கள் போல்
இலையுதிர்காலங்கள் முடிந்தபின்னும்
சரிந்து எங்கே போகிறோம் நாம்?
எந்த ஒழுங்கற்ற ஒளி நமது
அடித்தளங்களைச் சிதைக்கிறது அல்லது துடைத்தழிக்கிறது
அல்லது வாழ்வு அடித்தளங்களற்றதா?
ஒளி மட்டும் சூன்யத்தில் நீந்துகிறதா?

இலையுதிர்காலம் நம்மை இழுக்கிறது
இருப்பற்ற ஓர் ஆழத்தை நோக்கி
அதே சமயம்
அதைவிட இருப்பு குறைந்த ஓர் உயரத்தை
அண்ணாந்து கண்டுகொண்டிருப்பதைத் தொடர்கிறோம் நாம்

Pin It