ஊரிலிருந்து அடுத்தடுத்து வந்த
மூன்று கடிதங்களுக்கும்
பதிலெழுத அவகாசமில்லை இப்போது

சந்திரசேகர் மாமா தன் கடிதத்தில்
ராஜனையும் செல்வாவையும்
திட்டித் தீர்த்திருக்கிறார்
குடிபோதையில் தகராறாம் இருவருக்கும்

ஜான் சித்தப்பா சமீபத்தில் நடந்து முடிந்த
புத்தகக் கண்காட்சியைப் பற்றி
விரிவாக எழுதியிருக்கிறார்
மேலும் ஏரியாவில் மின்வெட்டாம் அடிக்கடி

கிஷோர் தம்பி கடிதம் எழுதுவானென்று
நான் எதிர்பார்க்கவேயில்லை
சுதன், தர்மா, சிவலிங்கம், செந்தில்சார்,
'காண்டா' பெரியசாமிசாரின் விசாரிப்புகளோடு
அவன் எழுதிய கடிதத்தில்
மஞ்சுக்குட்டிக்கு இடம் கொடுத்ததும் சுவாரசியம்தான்
(பின்குறிப்பு : கடிதம் கண்ட 2 நாட்களுக்குள்
ஊருக்குப் புறப்படு)

சரி சரி சரி
உறவுகள் அழைக்கின்றன
பரஞ்சோதி அண்ணாவும் சரவணனும்
கடிதம் அனுப்புவதற்குள்
புறப்பட்டுவிடுவதே உசிதம்

விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தால்
பிறந்த ஊர் எப்படி சொந்த ஊராகும்?
நாளையே கிளம்ப வேண்டியதுதான்
ஜே.பி.மேன்ஷன், எல்லீஸ் சாலை,
சென்னை-600 002க்கு
உறவுகள் அழைக்கின்றன.

- கார்க்கோ

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.